உலக விமானத்துறையில் புதிய சாதனை படைத்த இந்திய நிறுவனம்!
பிரான்சில் இடம்பெற்று வரும் வான்கலங்களின் விற்பனை சந்தையில் இந்தியாவின் சிக்கன கட்டண விமான சேவை நிறுவனமான இண்டிகோ, 500 விமானங்களை கொள்வனவு செய்ய ஒப்பந்தங்களை செய்தமை ஒரு முக்கிய நகர்வாக நோக்கப்படுகிறது.
பரிஸ் நகரில் இடம்பெற்றுவரும் வான்கலங்களின் விற்பனை சந்தையில் இந்தியாவின் சிக்கன கட்டண விமான சேவை நிறுவனமான இண்டிகோ 55 பில்லியன் அமெரிக்க டொலர் செலவீனத்தில், எயார் பஸ் ஏ 320 வகை விமானங்களில் 500 கலங்களுக்கான கொள்வனவு கட்டளையை வழங்கியுள்ளது.
உலக விமானப்பயணத்துறையின் வரலாற்றில் ஒரே தடவையில் இந்தளவுக்கு அதிகளவு விமானங்கள் முன்பதிவு செய்யப்படுவது இதுவே முதல்முறை.
அதிகளவு விமானங்கள்
இந்தியாவின் தேசிய விமானசேவை நிறுவனமான எயார் இந்தியா கொள்வனவு செய்த 470 போயிங் ரக விமானங்களை விட தனியார் விமான சேவை நிறுவனமான இன்டிகோ அதிகளவு விமானங்களை கொள்வனவு செய்துள்ளது.
இன்டிகோ கொள்வனவு செய்த புதிய விமானங்கள் 2030 மற்றும் 2035 ஆம் ஆண்டுகளுக்கு இடையேயான காலகட்டத்தில் விநியோகிக்கப்படும் என தெரியவருகிறது.
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக உள்ள இந்தியாவில் தற்போது விமானத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது