செந்தில் பாலாஜி கைது.. மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்: சென்னை பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் தாக்கு !!
மத்திய பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் சென்னை தாம்பரத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:- மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான என்டிஏ அரசு அமைந்தபோது நமக்கு உறுதுணையாக இருந்து ஆதரவு கொடுத்தவர் அதிமுக தலைவர் ஜெயலலிதா அவர்கள். அவர் மீது தமிழகம் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறது. நாமும் ஜெயலலிதா மீது மிகுந்த மதிப்புடன் இருக்கிறோம். ஏழைகள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் ஜெயலலிதா அரும்பாடுபட்டவர். அதேபோல்தான் ஏழைகள் முன்னேறுவதற்காக நம் பாரத பிரதமர் பெரும் பங்காற்றி வருகிறார். வாஜ்பாய் அவர்கள் தமிழ் மக்கள் மீது அன்பும் பாசமும் கொண்டிருந்தது போன்று இப்போது நம் பிரதமர் மோடியும் தமிழர்கள் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் அதிமுகவில் கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணி தர்மத்தின்படி மரியாதை மற்றும் அங்கீகாரத்தை கொடுக்க தயாராக இருக்கிறோம். ஊழல் வழக்கில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.
மு.க. ஸ்டாலின் முன்பு அவரை ஊழல்வாதி என்றும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். இப்போது அவரது கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், அவர் அதை பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார். இந்த இரட்டை வேடம் ஏற்றுக்கொள்ள முடியாதது இவ்வாறு அவர் பேசினார். தமிழக முதலமைச்சரின் பெயரையும், ரஷிய சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினையும் குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், திமுக தலைவர் தனது பெயரைப் பெரிதாக எடுத்துக்கொண்டு ஜனநாயகத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறாரா? என்றார். மேலும், தமிழகத்தில் ஜனநாயகம் செழிக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுத்தார். மேலும், தமிழ்நாடு மற்றும் அண்டை நாடான இலங்கையில் உள்ள தமிழர்களின் நலனுக்காக மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட பணிகளை ராஜ்நாத் சிங் பட்டியலிட்டார்.