ஷாப்டர் மரண விவகாரம்; சீஐடியினருக்கு பறந்த உத்தரவு !!
வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகள் குறித்த அரச பகுப்பாய்வாளரின் அறிக்கைகளை பெற்றுக்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய, செவ்வாய்க்கிழமை
(20) உத்தரவிட்டார்.
அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்ட பல இரத்த மாதிரிகள் உட்பட பகுப்பாய்வு
அறிக்கைகள் நீதிமன்றத்திற்கு இன்னும் கிடைக்கவில்லை என்று மேலதிக நீதவான்
அறிவித்ததுடன், பகுப்பாய்வாளரிடம் இருந்து இந்த அறிக்கைகளைப் பெறுவதற்குத்
தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இதற்கிடையில், தேவைப்பட்டால், இந்த அறிக்கைகள் குறித்து அரசாங்க பகுப்பாய்வாளருக்கு
நினைவூட்டல் அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக மேலதிக நீதவான் கூறினார்.
ஷாஃப்டரின் மரணத்துக்கான காரணத்தை விசாரிப்பதற்கு தடயவியல் நிபுணரான பேராசிரியர்
அசேல மெண்டிஸ் தலைமையில் பேராசிரியர் டி.சி.ஆர்.பெரேரா, பேராசிரியர்
டி.என்.பி.பெர்னாண்டோ, கலாநிதி சிவசுப்ரமணியம் மற்றும் கலாநிதி ருவன்புர ஆகியோர்
அடங்கிய விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது.
அந்த நிபுணர்கள் குழுவினால் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சடலத்தை தோண்டி எடுக்க
வேண்டும் என்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கமைய
சடலத்தைத் தோண்டி எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, கடந்த மே 25ஆம்
திகதியன்று பொரளை மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த ஷாஃப்டரின் சடலம், தோண்டி
எடுக்கப்பட்டு காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
முதற்கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாகவும் சடலம் தொடர்பான மேலதிக
பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்த கராப்பிட்டிய போதனா
வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ரொஹான் டி.ருவன்புர, முதற்கட்ட பரிசோதனை
அறிக்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
ஷாஃப்டரின் சடலம் மீதான பிரேத பரிசோதனை குறித்த முழுமையான அறிக்கையை
வெளியிடுவதற்கு இன்னும் 2 மாதங்கள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.
52 வயதான ஷாப்டர், கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில்
நிறுத்தப்பட்டிருந்த அவரது காரின் சாரதி ஆசனத்தில், கழுத்தில் கம்பியினால் கட்டப்பட்ட
நிலையில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.