வன்முறை நீடிப்பு: 1500 குழந்தைகளை மிசோரம் பள்ளிகளில் சேர்த்த மணிப்பூர் மக்கள்!!
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு பிரிவினருக்கிடையே கலவரம் வெடித்ததில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். 300-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். இதன் காரணமாக மணிப்பூரிலிருந்து பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து அண்டை மாநிலமான மிசோரத்திற்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. Powered By VDO.AI இவ்வாறு இடம்பெயர்ந்து வரும் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வி தடையின்றி கிடைக்க மிசோரம் மாநிலம் பல ஏற்பாடுகளை செய்து வருகிறது. இடம்பெயர்ந்த குடும்பங்களை சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மிசோரம் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று அம்மாநில கல்வித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மிசோரம் கல்வி இயக்குநர் லால்சங்லியானா, “இடம்பெயர்ந்த குழந்தைகளுக்கு அரசு பள்ளிகளில் இலவச சேர்க்கை வழங்கப்பட்டதாகவும், மாணவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு, தேவையான ஆவணங்களை அவர்களால் சமர்ப்பிக்க முடியாவிட்டாலும், பள்ளிகளில் சேர அனுமதிக்கப்பட்டனர்,” என்றார். இதற்கிடையில், மணிப்பூரில் இருந்து உள்நாட்டில் இடம்பெயர்ந்த 11,800-க்கும் மேற்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு மாநில அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மத்திய அரசிடமிருந்து நிதியுதவி கிடைக்கும் என மிசோரம் மாநில உள்துறை ஆணையரும், செயலாளருமான ஹெச் லாலெங்மாவியா நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் அவர், மணிப்பூரிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கான செயற்குழு கூட்டத்தில், தான் பிற அதிகாரிகளுடனும், சுற்றுலா அமைச்சர் ராபர்ட் ரோமாவியா ராய்ட்டுடனும் மாநில அரசுக்கு நிதியுதவி கோருவதற்காக புதுடெல்லிக்கு சென்றதாகவும், இதற்காக மத்திய அரசிடம் மாநில அரசு ரூ.10 கோடி கோரியுள்ளது என்றும் தெரிவித்தார். இடம்பெயர்ந்த மக்களின் தற்போதைய நிலைமை மற்றும் நிவாரணம் குறித்து மீளாய்வு செய்வதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: பருவமழை நெருங்கி வருவதால், இடம்பெயர்ந்த மக்களை தற்காலிக முகாம்களில் தங்க வைப்பதற்கு பதிலாக, பொருத்தமான அரசு கட்டிடங்களில் வைக்க வேண்டும். அதற்காக பொருத்தமான அரசு கட்டிடங்களை காலி செய்ய வேண்டும்.
இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்க நிதி திரட்டப்பட வேண்டும். ஒத்த கருத்துள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடமிருந்தும் நன்கொடை வசூலிக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 11,870 பேர், மிசோரம் மாநிலத்தின் 11 மாவட்டங்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர் என தெரிகிறது. வடக்கு மிசோரம் பகுதியின் கோலாசிப் மாவட்டத்திற்கு 4,292 பேர் இடம்பெயர்ந்து வந்துள்ளனர். இந்த மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான இடப்பெயர்வு நடைபெற்றுள்ளது. இதற்கு அடுத்ததாக ஐஸ்வால் மாவட்டத்தில் 3,866 பேரும், சைட்டுவல் மாவட்டத்தில் 2,905 பேரும் புகலிடம் தேடி வந்துள்ளனர். மீதமுள்ள 816 பேர் சம்பாய், லுங்லேய், மமித், கவ்சால், ஹ்னாதியால், செர்ச்சிப், சியாஹா மற்றும் லாங்ட்லாய் ஆகிய மாவட்டங்களில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். அரசாங்கமும், கிராம அதிகாரிகளும், ஐஸ்வால், சைட்டுவல் மற்றும் கோலாசிப் மாவட்டங்களில் கிட்டத்தட்ட 35-க்கு குறையாமல் நிவாரண முகாம்களை அமைத்துள்ளனர். மாநில அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தேவாலயங்கள் மற்றும் கிராம மக்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.