ஹோண்டுராஸ் சிறை கலவரத்தில் 41 பெண் கைதிகள் பலி- உயிரோடு எரித்த கொடூர சம்பவம்!!
மத்திய அமெரிக்கா நாடான ஹோண்டுராஸ் தலைநகர் டெகுசிகல்பா அருகே உள்ள தமரா பகுதியில் பெண்கள் சிறைச்சாலை உள்ளது. இங்கு ஏராளமான பெண் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சிறையில் பெண் கைதிகள் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. இரண்டு குழுக்களாக பிரிந்து கைதிகள் மோதிக் கொண்டதில் கலவரம் வெடித்தது. சிறைக்குள் துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டனர். மேலும் பலர் மீது தீ வைத்து எரித்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தனர். ஆனால் கைதிகள் ஆவேசத்துடன் மோதிக் கொண்டதால் உடனடியாக கட்டுக்குள் வரவில்லை. நீண்ட போராட்டத்துக்கு பிறகு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 41 பெண் கைதிகள் உயிரிழந்தனர். இதில் 26 பேர் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டனர். மற்றவர்கள் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொல்லப்பட்டனர்.
ஏராளமான கைதிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். கலவரம் பற்றி அறிந்ததும் கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலை முன்பு குவிந்தனர். இது தொடர்பாக ஹோண்டுராஸ் அதிபர் சியோமாரா காஸ்ட்ரோ கூறும்போது, “சிறையில் உள்ள மாரா கும்பல், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிந்தே இந்த கலவரத்தை திட்டமிட்டு அரங்கேற்றி உள்ளனர். இதில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். பெண்கள் சிறையில் மாரா கும்பலுக்கும் பாரியோ 18 கும்பலுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. அது கலவரமாக வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.