நானே மகா விஷ்ணு என நாடகமாடிய போலி சாமியார்!!
சாமியார்கள் பலர் பொதுமக்களை ஏமாற்ற பல்வேறு விதமான வேடங்களில் வாக்கு சொல்லும் சம்பவங்கள் ஏராளம். Powered By VDO.AI ஆனால் நானே மகாவிஷ்ணு…. நானே பாண்டுரங்கன்…. எனக் கூறிக்கொண்டு மகாவிஷ்ணு வேடத்திலேயே பொதுமக்களை ஏமாற்றி தெலுங்கானாவை ஒரு கலக்கு கலக்கி உள்ளார் திருவண்ணாமலையை சேர்ந்த போலி சாமியார் சந்தோஷ் குமார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவருக்கு 2 மனைவிகளும், ஒரு மகனும் உள்ளனர். போலி சாமியரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலையிலிருந்து 2 மனைவிகளுடன் தெலுங்கானாவிற்கு வந்தார். அப்போது சந்தோஷ் தன்னை மகா விஷ்ணுவாகவும், தனது மனைவிகளை ஸ்ரீதேவி, பூதேவி எனவும் கூறினார். மக்களை காக்க மனித உருவில் வந்த கடவுள் என தன்னை சந்திக்க வருபவர்களிடம் கூறினார்.
மேலும் 5 தலைகள் கொண்ட பாம்பு போன்று கட்டில் அமைத்து அதில் விஷ்ணுவை போல் படுத்துக் கொண்டு தனது 2 மனைவிகள் கால் அமுத்தி விடுவது போன்றும், திருப்பதி ஏழுமலையான் போன்று வேடம் அணிந்தும் நான் கடவுள் என கூறி வந்தார். சுவாமிஜியின் மகிமையால் வாய் பேச முடியாத பலர் பேசவும், நடக்க முடியாதவர்கள் நடக்கவும் முடிந்தது என சுற்றுவட்டார கிராம மக்களிடையே சிலர் தகவல் பரப்பினார்கள். இதனால் மக்கள் கூட்டம் அதிகரித்தது. சந்தோஷ் சுவாமியை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கொடிதொட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சந்தோஷ் சுவாமியை அங்கிருந்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது ஆவேசமான சாமியார் நானே மகாவிஷ்ணு…. நானே பாண்டுரங்கன்…. என கத்தினார். போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர். சித்தர்களின் பூமியான திருவண்ணாமலையில் ஏராளமான சாமியார்கள் உள்ளனர். அதில் ஒரு சிலர் பொதுமக்களை எளிதில் கவர வேண்டும் என்பதற்காக பல்வேறு கோமாளி வேலைகளில் ஈடுபட்டு காமெடி சாமியார்களாக மாறி உள்ளனர். அந்த வரிசையில் தற்போது போலி சாமியார் சந்தோஷ் குமார் இடம் பிடித்துள்ளார். மகாவிஷ்ணு வேடத்தில் 2 மனைவிகளை காலடியில் அமர வைத்துக் கொண்டு இருக்கும் படங்கள் வாட்ஸ் அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதில் சினிமா பாடல்கள் பின்னணியில் காமெடியாக பரவ விட்டுள்ளனர். இந்த வீடியோ படங்கள் திருவண்ணாமலை பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவங்க வேற குறுக்க மறுக்க ஓடிக்கிட்டு… மொத்தமும் திருவண்ணாமலை பக்கம் இருந்தே வருவீங்களா… எங்கள பாத்தா என்ன வேற மாதிரி தெரியுதா என சமூக வலைதளங்களில் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர். தெலுங்கானாவை கலக்கிய போலி சாமியார் தற்போது காமெடி போர்வையில் திருவண்ணாமலையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.