உத்தரபிரதேசத்தில் பிரபல ரவுடி இக்பாலின் ரூ.500 கோடி சொத்துக்கள் முடக்கம்- போலீசார் அதிரடி நடவடிக்கை!!
உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இக்பால்(வயது 60). இவர் மீது சட்டவிரோத சுரங்கம், நில ஆக்கிரமிப்பு, பெண்களை துஷ்பிரயோகம் செய்தல், ஏமாற்றுதல், அரசு சொத்துகளை அபகரித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.எல்.சி. ஆவார். அவரது பதவி காலம் முடிந்ததும் அவர் தனது தம்பி மஹ்மூத் அலியை எம்.எல்.சி. ஆக்கினார். பகுஜன் சமாஜ் ஆட்சியின்போது இக்பாலுக்கு அமைச்சருக்கு நிகரான அந்தஸ்து வழங்கப்பட்டது. 2017-ம் ஆண்டு யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும், இக்பாலின் பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்தன.
இதையடுத்து இக்பால் மற்றும் அவரது மகன்கள் அப்துல்வாஜித், ஜாவேத், முகமது அப்சல், அலிஷான் மற்றும் சகோதரர் ஆகியோர் மீது சட்டவிரோத சுரங்கம், நில அபகரிப்பு உள்ளிட்ட 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மாநில போலீசார் மற்றும்சி.பி.ஐ., அமலாக்கத்துறை தனித்தனியே இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறது. இக்பாலின் 4 மகன்கள் மற்றும் சகோதரர் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் சிறையில் உள்ளனர். தற்போது இக்பால் தலைமறைவாக உள்ளார். இக்பால் மற்றும் அவரது குடும்பத்தினர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்க, அவர்கள்சது பாஸ்போட்டுகள் முடக்கப்பட்டு உள்ளன. அவர்கள் மீதான வழக்குகள் நடந்து வருகின்றன.
இதனிடையே இக்பாலுக்கு சொந்தமான 500 கோடி ரூபாய் மதிப்புள்ள முறைகேடான சொத்துக்கள் கண்டறியப்பட்டன. அவற்றை தற்போது உத்தரபிரதேச காவல்துறை முடக்கி உள்ளது. சமூக விரோத செயல்கள் (தடுப்பு) சட்டத்தின் பிரிவு 14 (1) கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில், சஹாரன்பூரில் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலமும், லக்னோவின் கோமதி நகர் பகுதியில் உள்ள 7 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களாவும், 300 கோடி ரூபாய் மதிப்புள்ள 80,000 சதுர மீட்டர் நிலமும் அடங்கும்.
கிரேட்டர் நொய்டாவில் இக்பாலின் கூட்டாளிகள் டவுன்ஷிப்பை உருவாக்க திட்டமிட்டனர். இதற்காக ஒரு நிறுவனத்தை உருவாக்கினார், அதுவும் முடக்கப்பட்டு உள்ளது. மேலும் இக்பாலுக்குச் சொந்தமான மேலும் பல முறைகேடான சொத்துக்களை அடையாளம் காணும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருவதாகவும், அதன்படி அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.