தெலுங்கானாவில் புஷ்பா பட பாணியில் டேங்கர் லாரியில் தேக்குமரம் கடத்தல்- 2 பேர் கைது!!
தெலுங்கானா-மகாராஷ்டிரா எல்லையில் சிரோஞ்சா என்ற வனபகுதி உள்ளது. இங்கு ஏராளமான தேக்கு மரங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் இருந்து தேக்கு மரங்களை வெட்டி பூபால பள்ளிக்கு கடத்தப்படுவதாக புகார் வந்தது. இதனை தொடர்ந்து வன அதிகாரி லாவண்யா தலைமையில் சோதனை சாவடிகளில் ஆய்வு செய்தனர். மேலும் அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டேங்கர் லாரியை நிறுத்தி வன அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது புஷ்பா பட பாணியில் பால் டேங்கருக்கு அடியில் ஒரு அறை போல அமைத்து அதில் தேக்கு மரங்களை கடத்தியது தெரிய வந்தது.
தேக்கு மரங்களின் மதிப்பு ரூ.60 ஆயிரம் என்று கூறப்படுகிறது. பின்னர் வன அதிகாரிகள் டேங்கரை ஒட்டி வந்த டிரைவர் உட்பட 2 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தேக்கு மரங்களை மகாராஷ்டிரா, சத்தீஷ்கருக்கு கடத்தியது தெரிய வந்தது. மேலும் வனத்துறையை சேர்ந்த சில அதிகாரிகளும் இந்த சட்ட விரோதமான தேக்கு மரம் கடத்தலில் உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது. புஷ்பா படத்தை பார்த்து மரங்களை கடத்தியதாக தெரிவித்துள்ளனர்.