அல்லைப்பிட்டியில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு எச்சங்கள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு!!
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் மீட்கப்பட்ட மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டார பகுதியில் வீடொன்றினை அமைக்க நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அத்திவாரம் வெட்டும் போது , மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டுள்ளன.
அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் , அப்பகுதியில் இடம்பெற்ற வேலைகளை உடனடியாக நிறுத்தி , அப்பகுதிக்குள் எவரும் செல்லாத வாறு தடை ஏற்படுத்தினர்.
அது தொடர்பில் நேற்றைய தினம் புதன்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில், அப்பகுதியில் தொடர்ந்து அகழ்வு பணிகளை முன்னெடுக்க பொலிஸார் அனுமதி கோரியதை அடுத்து, நீதவான் கஜநிதிபாலன் சம்பவ இடத்திற்கு சென்று மேலும் அகழ்வு பணிகளை முன்னெடுக்க கட்டளை வழங்கியதுடன் , அகழ்வு பணிகளை நேரில் கண்காணித்தார்.
அதன் போது , ஒரு மண்டையோடு , இரு எலும்பு துண்டுகள் , 27 பற்கள் என்பன மீட்கப்பட்டன. அதேவேளை குறித்த பகுதியில் மேலும் எலும்புகள் மீட்கப்படாத நிலையில் , நேற்றைய தினம் அகழ்வு பணிகள் இடை நிறுத்தப்பட்டன.
மீட்கப்பட்ட எலும்பு கூட்டு எச்சங்கள் பகுப்பாய்வு பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , மீட்கப்பட்ட எலும்பு கூட்டு எச்சங்கள் சுமார் 20 வருடங்களுக்கு முந்தியவை என தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அல்லைப்பிட்டியில் மேலும் சில மனித எச்சங்கள் மீட்பு!! (PHOTOS)