தென்பகுதியில் இருந்து ஊடகவியலாளர்களை அழைத்துக் கொண்டு குருந்தூர் மலைக்கு சென்ற உதயகம்பன்பில!! (PHOTOS)
முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைப் பகுதியில் நீதிமன்ற கட்டளைகளை மீறி விகாரை அமைக்கப்பட்ட விவகாரம் இலங்கையில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியில் பாரிய ஒரு விவகாரமாக உருவெடுத்துள்ளது.
குருந்தூர் மலையில் தொல் பொருள் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட 79 ஏக்கர் காணியில் நீதிமன்ற கட்டளைகளை மீறி விகாரை அமைக்கப்பட்ட நிலையில் அதற்கு மேலதிகமாக தமிழ்மக்களின் பூர்வீக வாழ்விட ,விவசாய காணிகள் உள்ளடங்கலாக 279 ஏக்கர் தொல்பொருள் திணைக்களத்தினால் மீள எல்லையிடப்பட்டுள்ள நிலையில் காணிகளை விடுவிக்க மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் அண்மையில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரஸ்தாபிக்கப்பட்ட பின்னணியில் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் அவர்களும் பதவி விலகியிருந்தார்.
இவ்வாறான பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன் பில அவர்கள் நேற்று புதன்கிழமை (21) முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலைக்கு தென்பகுதியில் இருந்து சிங்கள ஊடகவியாளர்கள் பலரையும் தேரர்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு குறித்த பகுதிக்கு சென்றிருந்தார்.
இதனைதொடர்ந்து, பௌத்த பூசை பொருட்களுடன் மலைக்கு ஏறிய தேரர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் புதிதாக அமைக்கப்பட்ட குருந்தூர் மலை விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள். இதன்போது சுடர் ஏற்றி மலர் வைத்து ஊதுபத்தி கொழுத்தி வழிபட்டுள்ளார்கள்.
தொடர்ந்து பௌத்தமுறையில் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு குருந்தூர் மலையில் உள்ள ஏனை இடங்களையும் பார்வையிட்டுள்ளார்கள்.
இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில மற்றும் குறித்த விகாரையினை நீதிமன்ற கட்டளைகளை மீறி அமைத்துவரும் வட மாகாண பிரதான சங்க நாயக்கர் கல்கமுவ சந்தபோதி தேரர் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.
குறித்த நிகழ்வுக்கு சென்ற தமிழ் ஊடகவியலாளர்கள் புலனாய்வாளர்கள் மற்றும் அங்கு வருகைதந்த தேரர்களால் புகைப்படம் வீடியோ எடுத்து அச்சுறுத்தப்பட்டதோடு, குறித்த தமிழ் ஊடகவியலாளர்கள் சிலரை சுட்டிக்காட்டி இவர்கள் தான் இந்த விடயங்களை ஊடகங்களுக்கு கொண்டு சென்று பிரச்சினை ஆக்குவதாக வட மாகாண பிரதான சங்க நாயக்கர் கல்கமுவ சந்தபோதி தேரர் அவர்களால் அங்கு வருகைதந்தவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.