அமைதியையும், நல்லிணக்கத்தையும் கொண்டு வாருங்கள்: மணிப்பூர் மக்களுக்கு சோனியா வேண்டுகோள்!!
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பெரும்பான்மையினரான ‘மெய்தி’ இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கடந்த மாதம் கலவரம் வெடித்தது. 100-க்கும் மேற்பட்டோர் பலியான பிறகும் கலவரம் நீடித்து வருகிறது. பா.ஜனதா தலைவர்களின் வீடு மற்றும் சொத்துகளை குறிவைத்து தாக்குதல் நடந்து வருகிறது. கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக மத்திய, மாநில அரசுகள் மீது காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், பாராளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ஒரு வீடியோ உரையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- அனைத்து இனங்கள், மதங்கள் கொண்ட மக்களை அரவணைத்துக் கொள்ளும் திறனுக்கு மணிப்பூர் வரலாறு சாட்சியாக அமைந்துள்ளது.
சகோதரத்துவ உணர்வை வளர்க்க அளப்பரிய நம்பிக்கையை உருவாக்க வேண்டி உள்ளது. ஆனால், வெறுப்பையும், பிரிவினையையும் தூண்டிவிட ஒரே ஒரு தவறான செயல் போதும். மணிப்பூரில், ஒருவருக்கொருவர் அமைதியாக இணைந்து வாழ்ந்த சகோதர, சகோதரிகள், ஒருவரை ஒருவர் எதிராக நிற்பதை பார்ப்பது இதயத்தை நொறுக்குவதாக அமைந்துள்ளது. தாங்கள் வாழ்ந்த வீட்டையும், பல ஆண்டுகளாக சேகரித்து வைத்த பொருட்களையும் அவர்கள் விட்டுச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முன்எப்போதும் கண்டிராத வன்முறை, மக்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளது. நாட்டின் மனசாட்சியில் ஆழமான காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
எனவே, மணிப்பூர் மக்களை, குறிப்பாக துணிச்சலான சகோதரிகளை கேட்டுக்கொள்கிறேன். இந்த அழகிய மண்ணில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் கொண்டு வாருங்கள். ஒரு தாயாக, அவர்களது வேதனை எனக்கு புரிகிறது. இருப்பினும், அமைதி பாதையை தேர்ந்தெடுத்தால்தான், நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்கும் சிறப்பாக அமையும். இனிவரும் வாரங்களிலும், மாதங்களிலும் நம்பிக்கையை கட்டமைப்பதற்கான நீண்ட பயணத்தை மேற்கொள்வோம். மணிப்பூர் மக்கள் மீது எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது. இந்த சோதனையான காலகட்டத்தை நாம் ஒன்றுசேர்ந்து கடப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.