பீகார் பொதுக்கூட்டத்தில் காங்கிரசுக்கு தலைமை அங்கீகாரம் கிடைக்குமா? !!
பாராளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது .இதற்காக இந்திய அளவில் அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி அமித்ஷா ஆகியோர் 3-வது முறையாக வெற்றி பெற வலுவான திட்டங்களை தீட்டி வருகின்றனர். ஆளும் பா.ஜனதா கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. பா.ஜ.க.வுக்கு எதிரான ஒத்த கருத்து உள்ள கட்சிகளின் தலைவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் ஏற்கனவே கடந்த 12-ந் தேதி பாட்னாவில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தார். ஆனால் அதில் சில தலைவர்கள் பங்கேற்க முடியாததால் இந்த கூட்டம் நாளை 23-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
திட்டமிட்டபடி இந்த கூட்டம் நாளை பாட்னாவில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஐக்கிய ஜனதா தள தலைவர் ராஜூ ரஞ்சன், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், சரத் பவார், இந்திய கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். பொதுத்தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியை வெல்வதற்கான முதல்படியாக இந்தக்கூட்டம் அமையுமா என்ற எதிர்பார்ப்பு எதிர்க்கட்சிகளிடையே ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டணியை வழி நடத்துவது யார்? பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்படுபவர் யார்? என பல்வேறு கேள்விகளும் எழுந்துள்ளன.
பல்வேறு கொள்கைகளைக் கொண்ட அனைத்து கட்சிகளுக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்த முடியுமா என்பது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை வகிக்கும் அங்கீகாரம் கிடைக்கும் என அந்த கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். காங்கிரஸ் தலைவர்கள் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் முதல் முறையாக ஒரே பொதுக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். அந்தந்த மாநிலங்களில் எந்த கட்சி பலமாக இருக்கிறதோ அந்த கட்சியின் தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என்ற கொள்கையில் இந்த கூட்டணி கட்சித் தலைவர்கள் உறுதியுடன் இருக்கிறார்கள்.
பிரதமர் வேட்பாளர் குறித்து எந்த விவாதமும் நடைபெறாது என கட்சிகள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளன. அனைத்து சக்திகளையும் கொண்டுள்ள பா.ஜ.க.வை எதிர்கொள்ள கடைபிடிக்க வேண்டிய வியூகம், கட்சிகளுக்கு இடையே கொள்கைகளை வகுப்பது, பரிவர்த்தனை முறையில் முன்னேற்றம் போன்ற விஷயங்கள் குறித்து கூட்டணி கட்சிகள் ஆலோசிக்க உள்ளதாக தகவல் பரவி உள்ளது. இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.