வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!!
அரசுமுறை பயணமாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி இன்று வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்றார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நுழைவாயிலில் காத்திருந்து அதிபர் ஜோ பைடன் கைகுலுக்கி அழைத்து சென்றார். இதேபோல் துணை அதிபர் கமலா ஹாரிசும் பிரதமர் மோடியுடன் கைகுலுக்கி அவரை வரவேற்றார். வரவேற்பு நிகழ்ச்சியின்போது இருநாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன.
அதிபர் ஜோ பைடனுடன் இந்திய பிரதமர் மோடி இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். இருநாட்டு நட்புறவை வலுப்படுத்தும் வகையில் இந்த பேச்சுவார்த்தை அமைய உள்ளது. இந்த சந்திப்பின்போது பொருளாதாரம், பாதுகாப்பு, விண்வெளி, தொழில் நுட்ப வளர்ச்சி, இருநாட்டு வணிகம் உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்துகிறார்கள். மேலும் ராணுவம், வர்த்தகம் தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.