பின்னடைவை ஒத்துக்கொண்ட உக்ரைன் !!
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்பதற்கான உக்ரைனின் இராணுவத் தாக்குதல்கள் எதிர்பார்த்ததை விட மந்த கதியிலேயே செல்வதாக உக்ரைன் அதிபர் வொலோடிமீர் ஷெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த மோதல்கள் ஹொலிவூட் திரைப்படம் என சிலர் எண்ணுகின்றார்கள் எனவும் உடனடியாகவே முடிவுகளை எதிர்பார்க்கின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்தாக்குதலில் மந்த நிலை
உக்ரைனின் எதிர்தாக்குதல்கள் முன்னெடுக்கப்படும் நிலையில், சப்போறிஸ்ஷியா மற்றும் டொனெட்ஸ்க் ஆகிய பிராந்தியங்களில் உள்ள 08 கிராமங்களை இதுவரை விடுவித்துள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது.
02 இலட்சம் சதுர கிலோமீற்றர் பரப்பளவு ரஷ்யப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், இராணுவ ரீதியில் அவர்களை பின் நகர்த்துவது என்பது எளிதான விடயம் அல்ல என உக்ரைன் அதிபர் வொலோடிமீர் ஷெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளுக்கு மத்தியில் சிறந்த விதத்தில் போர்க் களத்தில் முன்னேறுவோம் எனக் கூறியுள்ள உக்ரைன் அதிபர், ஆபத்தில் இருப்பது மக்களின் வாழ்க்கை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேட்டோவிடம் இருந்து பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் உக்ரைன் அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
எனினும் நேட்டோ இராணுவ கூட்டணியில் அங்கத்துவத்தை பெறுவதே இறுதி இலக்கு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாரிய இழப்பு
இந்த நிலையில் உக்ரைனின் எதிர்தாக்குதலில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெற்கில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களில் பாரிய இழப்புக்களை உக்ரைன் சந்தித்துள்ளதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மேலும் எதிர்தாக்குதல்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் அதன்மூலம் எதிர்பார்த்த விடயங்களை அடையும் சாத்தியங்கள் இல்லை என்பதை அவர்கள் அறிவார்கள் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் லண்டனில் நடைபெற்ற மாநாட்டில் உக்ரைனை மீளக் கட்டியெழுப்புவதற்கு உதவிகளை வழங்குவதாக பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன உறுதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.