;
Athirady Tamil News

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டதா?

0

ஒரு லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வது தொடர்பாக ரஷ்யாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன்படி, ரஷ்யாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திற்கு முதல்கட்டமாக 45 ஆயிரம் டன் எண்ணெய் சமீபத்தில் வந்தடைந்துள்ளது.

கச்சா எண்ணெய்க்கான பணத்தை சீன கரன்சியின் மதிப்பில் ரஷ்யாவுக்கு பாகிஸ்தான் செலுத்துகிறது. எண்ணெய்யை குறைந்த விலையில் பெறுவதாக பாகிஸ்தான் கூறிவரும் நிலையில், கச்சா எண்ணெய் விற்பனையில் பாகிஸ்தானுக்கு சிறப்பு சலுகை எதுவும் அளிக்கப்படவில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

ஆனால், ரஷ்யாவிடம் இருந்து பாகிஸ்தான் குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை பெற துவங்கி உள்ளது என்று பாகிஸ்தானின் எரிசக்தி துறை அமைச்சர் குராம் தாஸ்த்கிர் கான் கடந்த மாதம் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் பாகிஸ்தானை அடைந்தபோது, அந்த நாளை ‘மாற்றத்திற்கான தினம்’ என்று அந்நாட்டின் பிரதமர் ஷாபாஸ் ஷெரிப் வர்ணித்திருந்தார்.

பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இந்த நகர்வு குறித்து அவர் மேலும் கூறியபோது, “ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் பெறப்படும் கச்சா எண்ணெய் கராச்சி துறைமுகத்தை அடைந்துள்ளது. மாற்றத்திற்கான இன்றைய நாளில், பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி மற்றும் எரிசக்தி பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ரஷ்யாவுடனான இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது” என்று ஷாபாஸ் ஷெரிஃப் பெருமிதத்துடன் கூறியிருந்தார்.

அதே நேரம், ரஷ்யாவிடம் இருந்து அண்மையில் பெறப்பட்ட கச்சா எண்ணெய், இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்டு, ஐக்கிய அரபு அமீரகம் வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

ரஷ்யா -யுக்ரேன் இடையே நடைபெற்றுவரும் போரின் விளைவாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா உடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்திக் கொண்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது.

ரஷ்யா – யுக்ரேன் இடையேயான போர்க் காலகட்டத்தில், ரஷ்யாவுடனான இந்தியாவின் எண்ணெய் வர்த்தகம் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளதை, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து சுட்டிக்காட்டி கொண்டிருந்தார்.

இதையடுத்து, ரஷ்யாவிடம் இருந்து ஒரு லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை பாகிஸ்தான் கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு, ரஷ்யாவின் முதல் சரக்கு கப்பல் ஜூன் 11 ஆம் தேதி பாகிஸ்தான் வந்தடைந்தது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதினை சந்தித்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்
ரஷ்யா – பாகிஸ்தான் நட்புறவு

ரஷ்யாவின் சரக்கு கப்பல் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை வந்தடைந்திருப்பது வெறும் வர்த்தக கண்ணோட்டத்தில் மட்டுமல்லாமல், பல்வேறு கோணங்களிலும் பார்க்கப்படுகிறது.

தற்போது நடைபெற்றுவரும் யுக்ரேன் போர் காரணமாக, ரஷ்யா- இந்தியா உடனான நட்புறவில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் பாகிஸ்தான் உடனான உறவை ரஷ்யா மேம்படுத்தி கொண்டுள்ளது.

அத்துடன், உலகின் தென்பகுதியை சேர்ந்த நாடுகள், மேற்கத்திய நாடுகள் மற்றும் ரஷ்யா இருதரப்பிலும் உறவை பேண முயற்சிக்கின்றன.

ஆனால், அமெரிக்கா- ரஷ்யா இடையே பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில், பாகிஸ்தான் அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தது. அதன் காரணமாக, பாகிஸ்தானுக்கும் -ரஷ்யாவுக்கும் இடையேயான உறவு நல்ல நிலையில் இருந்ததில்லை என்பதுதான் வரலாறு.

ஆனால், இந்த வரலாற்றை மாற்றி எழுதும் விதமாக, கடந்த ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா, யுக்ரேன் மீது போர் தொடுக்கும் அறிவிப்பை வெளியிட்டபோது, பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் இம்ரான் கான், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை மாஸ்கோவில் சந்தித்துப் பேசினார்.

பாகிஸ்தானின் தற்போதைய அரசும், ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெறுவதற்கான முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

பாகிஸ்தான் இதுநாள்வரை செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தான் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. ஆனால் நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் மூன்றில் ஒரு பங்கை ரஷ்யாவிடம் இருந்து பெற விரும்புகிறது என்று பாகிஸ்தான் பெட்ரோலியத் துறை அமைச்சர் அண்மையில் கூறியிருந்தார்.

ரஷ்யா – பாகிஸ்தான் இருதரப்பு உறவு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை, ‘நீண்டகாலம் வாழும் நட்பு’ என்று அண்மையில் உருது மொழியில் வர்ணித்திருந்தார் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்.

அத்துடன் யுக்ரேன் உடனான போருக்குப் பின், சீனா- ரஷ்யா இடையேயான நட்புறவும், பாதுகாப்பு ஒத்துழைப்பும் அதிகரித்துள்ளது. ரஷ்யா சீனாவை அதிகம் சார்ந்திருப்பதால் இந்தியா – ரஷ்யா உறவு பாதிப்படைகிறது.

பாகிஸ்தான் உடனான நட்புறவை ரஷ்யா அதிகரித்து வருவது சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. எனினும், ரஷ்யாவிடம் இருந்து நீண்ட காலத்திற்கு கச்சா எண்ணெய்யை பாகிஸ்தான் வாங்க முடியாது என்றே தெரிகிறது. பொருளாதார பிரச்னைகளில் பாகிஸ்தான் சிக்கி தவித்து வருவதுடன், கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பதற்கான வசதியும் அங்கு இல்லை என்பதே இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.

சர்வதேச நிதி நிறுவனங்களில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், அவற்றிடம் இருந்து பொருளாதார உதவிகளை பெற அமெரிக்காவின் ஆதரவு பாகிஸ்தானுக்கு அவசியம். எனவே, தன்னுடனான எண்ணெய் வர்த்தகத்தை நீண்ட காலத்திற்கு தொடர பாகிஸ்தான் விரும்பாது என்பதே ரஷ்யாவின் புரிதலாகவும் உள்ளது.

ரஷ்யா -யுக்ரேன் இடையேயான போரில் நடுநிலை வகிப்பது போன்ற ஓர் பிம்பத்தை உருவாக்க பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. ஆனால், யுக்ரேனுக்கு பாகிஸ்தான் ஆயுதங்கள் வழங்கி வருவது தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகி உள்ளன. அத்துடன், ஜி 7 நாடுகள் நிர்ணயித்துள்ள கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான விலை வரம்பிற்கு எதிராக ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய்யை வாங்கும் முடிவை பாகிஸ்தான் எடுக்காது எனவும் தெரிகிறது.

கச்சா எண்ணெய் ஏற்றுமதியை தேவைப்பட்டால் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று தான் கடந்த மாதம் வரை ரஷ்யா தெரிவித்து வந்தது. ஆனால் அதேசமயம், ரஷ்ய எரிசக்தித் துறை அமைச்சரான நிகோலாய் ஷுல்கினோவ், ‘ரஷ்தா 24’ எனும் ரஷ்ய தொலைக்காட்சிக்கு அண்மையில் பேட்டி அளித்திருந்தார். அதில், “எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை” என்றும் அவர் கூறியிருந்தார்.

“மொத்த சந்தையில் உயர்ந்துவரும் கச்சா எண்ணெயின் விலை மற்றும் இவ்விலை உயர்வு சில்லறை வர்த்தகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இதன்படி, கச்சா எண்ணெய் ஏற்றுமதியை குறைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. எனினும் கச்சா எண்ணெய் உற்பத்தியை பொறுத்துதான் இந்த வர்த்தகம் இருக்கும்” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சர்வதேச பொருளாதார அமைப்பின் கூட்டம், கடந்த வாரம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்றது. அப்போது, ரஷ்ய அமைச்சர் நிகோலாய் ஷுல்கினோவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “பாகிஸ்தானுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் வழங்கும் நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொள்ளும்” என்று அவர் தெரிவித்திருந்தார்.

ரஷ்ய அமைச்சரின் இந்த கருத்து, பாகிஸ்தான் ஊடகங்களில் தலைப்பு செய்தியானது.

அதேசமயம், “கச்சா எண்ணெய் விலையில் பாகிஸ்தானுக்கு சிறப்பு சலுகை எதுவும் அளிக்கப்படவில்லை” என்பதையும் அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ரஷ்ய அமைச்சர் ஷுல்கினோவ் தெளிவுப்படுத்தி இருந்தார்.

“பிற நாடுகளுக்கு எந்த விலைக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகின்றதோ அதை விலையில் தான் பாகிஸ்தானுக்கும் விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு, சரக்கு கப்பல் ஒன்று சமீபத்தில் பாகிஸ்தான் சென்றடைந்துள்ளது. விரைவில் மற்றொரு கப்பல் அங்கு செல்ல உள்ளது” என்றும் அவர் கூறியிருந்தார்.

மேலும், இந்தியாவுடனான ரஷ்யாவின் நீண்டகால நட்புறவையும் அந்நாட்டு அமைச்சரான ஷுல்கினோவ் இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது மறைமுகமாக குறைந்து மதிப்பிட்டிருந்தார்.

“இந்தியாவை போலவே, பாகிஸ்தானும் ரஷ்யாவின் முக்கியமான நட்பு நாடு என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் கூறியிருந்தார்.

கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான பணத்தை ரஷ்யாவுக்கு சீன கரன்சியில் அளிக்கும் பாகிஸ்தான்
இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய் பாகிஸ்தானுக்கு சென்றதா?

இதனிடையே, ரஷ்யாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அண்மையில் அனுப்பப்பட்ட கச்சா எண்ணெய், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ஓர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, பின்னர் அங்கு அனுப்பப்பட்டதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நேரடி வர்த்தகத்திற்கு தடை இருந்து வருவதால், குஜராத்தில் சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய், இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வழியாக பாகிஸ்தானின் கராச்சிக்கு கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்தது என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் உடனான எண்ணெய் வர்த்தக ஒப்பந்தம் காரணமாக, அந்நாட்டின் மீது இந்தியா கோபம் கொள்ளக் கூடாது என்பதை உறுதி செய்யும் நோக்கில், ரஷ்யா இப்படியொரு ஏற்பாட்டை செய்திருந்ததாக நம்பப்படுகிறது.

இந்த நிலையில், கப்பல் முதலீட்டாளரும், ஆய்வாளருமான எட் ஃபின்லே ரிச்சர்ட்சன், ரஷ்யாவில் இருந்து பாகிஸ்தானுக்கு கச்சா எண்ணெய் சென்றடைந்தது குறித்த கப்பலின் பயணப் பாதையை குறிக்கும் வரைபடத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அத்துடன், “சரக்கு கப்பல் இந்தியாவில் இருந்து நேரடியாக பாகிஸ்தானுக்கு வருவதை அந்நாடு அனுமதிக்காது. எனவே, ரஷ்யா அனுப்பிய எண்ணெய், ஐக்கிய அரபு அமீரகம் வழியாக பாகிஸ்தான் சென்றடைந்துள்ளது. இந்த வர்த்தக பயணம் மேற்கொண்ட சரக்கு கப்பல், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இயங்கிவரும் ஓர் நிறுவனத்திற்கு சொந்தமானது” என்று ரிச்சர்ட்சன் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ரஷ்யாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்றடைந்த கச்சா எண்ணெய் தாங்கிய சரக்கு கப்பலின் இந்த பயணப் பாதை குறித்தும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். சரக்குக் கப்பலின் இந்த பயணப் பாதை குறித்து ரஷ்யா மகிழுமா? இந்தப் பயணத்தின் விளைவாக கச்சா எண்ணெய் விலை உயருமா அல்லது குறையுமா? என்று பல்வேறு கேள்விகளை ரிச்சர்ட்சன் எழுப்பி உள்ளார்.

ரஷ்யா- பாகிஸ்தான் இடையேயான கச்சா எண்ணெய் ஒப்பந்தத்தை செயல்படுத்தி உள்ள விதத்தால் இந்தியாவிற்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே இருக்கும் ஓர் இடைத்தரகர் பயனடைந்துள்ளார் என்று பாகிஸ்தான் பத்திரிகையாளர் வகாஸ் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.

“ ஒரு பேரல் கச்சா எண்ணெய்யை 52 டாலர்களுக்கு ரஷ்யா இந்தியாவுக்கு விற்றது. அதன்பின், இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே இருக்கும் ஓர் இடைத்தரகர் அதனை ஒரு குறிப்பிட்ட விலைக்கு வாங்கி விற்றார். இறுதியாக ஒரு பேரல் கச்சா எண்ணெய் 69 டாலர் என்ற கணக்கில் பாகிஸ்தானுக்கு விற்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு பேரலுக்கு 17 டாலர்கள் அளவுக்கு இந்தியாவைச் சேர்ந்த அந்த வியாபாரி லாபம் பார்த்துள்ளார். இந்த வர்த்தகத்தில் பாகிஸ்தானுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது” என்று வகாஸ் கூறியுள்ளார்.

அதேசமயம், ரஷ்யாவுடனான எண்ணெய் ஒப்பந்தம் தாமதமாக செயல்படுத்தப்பட்டுள்ளது குறித்து பாகிஸ்தானின் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த ஒப்பந்தத்தை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே பாகிஸ்தான் செயல்படுத்தி இருக்க வேண்டும். அப்போது தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்யை ரஷ்யா ஏற்றுமதி செய்து வந்ததால், அதன் மூலம் பாகிஸ்தானுக்கு பொருளாதார ரீதியாக பலன் கிடைத்திருக்கும். அந்நிய செலாவணியையும் சேமித்திருக்கலாம் என்று பாகிஸ்தானின் எதிர்க்கட்சியான தெஹ்ரீக் -இ- இன்சாஃப் (பி.டி.ஐ) உடன் தொடர்புடைய ஹமத் சவுத்ரி என்பவர், ரஷ்யா உடனான பாகிஸ்தானின் இந்த ஒப்பந்தத்தை விமர்சித்துள்ளார்.

யுக்ரேன் மீதான போரின் விளைவாக, ரஷ்யாவுடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்துக்கு அமெரிக்கா மற்றும் மேலை நாடுகள் தடை விதித்துள்ளன. இதன் காரணமாக, தனது கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு, ரஷ்யா புதிய சந்தையை தேடி கொண்டுள்ளது.

இத்தகைய சூழலில், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு தான் பெரிய சந்தை என்பதை நிரூபிக்க பாகிஸ்தானால் முடியும். மற்றொரு புறம், கடும் பொருளாதார நெருக்கடியை பாகிஸ்தான் சந்தித்து வரும் நிலையில், எண்ணெய் வர்க்கத்தில் புதிய வாய்ப்பை ரஷ்யா அளித்துள்ளது.

எரிபொருள் தேவையை பூர்த்தி செய்து கொள்ள, பாகிஸ்தான் கச்சா எண்ணெய் இறக்குமதியை பெரிதும் நம்பியுள்ளது. அத்துடன் அந்நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பின் பெரும்பங்கு கச்சா எண்ணெய் வாங்குவதற்கே செலவிடப்படுகிறது.

இத்தகைய நெருக்கடியான சூழலில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது பொருளாதார ரீதியாக சாதகமாக இருக்கும் என்று பாகிஸ்தான் நம்புகிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 6.5 பில்லியன் டாலர்கள் கடன் பெறும் முயற்சியிலும் பாகிஸ்தான் அரசு இறங்கி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.