;
Athirady Tamil News

சர்வதேச யோகா தினம்: அமெரிக்காவுக்கு யோகாவை கொண்டு சென்ற விவேகானந்தர் – விரிவான வரலாறு!!

0

டயானா காங் எனும் இளம்பெண், மங்கலான வெளிச்சம் பொருந்திய ஓர் அறையின் மூலையில், நின்று கொண்டிருந்தார். ஒருபக்கம் சுவர் முழுதும் ஒரு பெரிய கண்ணாடி இருந்தது.

இரண்டு பளபளப்பான குழாய்கள் ஓர் மூலையில் இருந்து அந்த அறை முழுவதும் நீராவியை பரவ செய்து கொண்டிருந்தன. அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் உள்ள ஓர் யோகா பயிற்சி மையத்தில் அன்றைய தினத்தின் கடைசி வகுப்பில் அரங்கேறிய காட்சிகள் தான் இவை.

டயானா காங்கிற்கு யோகா கற்று கொடுக்கும் பயிற்சியாளரான ஸ்டீவ் எக்ஸ், பயிற்சியின் மையத்தின் வரவேற்பறையில் வியர்வை சொட்ட சொட்ட அமர்ந்திருந்தார். தன் உடல் முழுவதும் வியர்வையில் நனைந்திருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.

“புற்றுநோயில் இருந்து தான் மீண்டு வருவதற்கு இந்த யோகா பயிற்சிகள் (Hot Yoga) முக்கிய காரணமாக உள்ளன” என்கிறார் அவர். அத்துடன், உடல்நலத்துக்கு இந்த வகை யோகாவை மேற்கொள்ளும்படி மற்றவர்களுக்கு அறிவுறுத்தி வருவதாகவும் பெருமிதத்துடன் கூறுகிறார் ஸ்டீவ். தான் பல்வேறு வகை யோக பயிற்சிகளை மேற்கொண்டதன் மூலம், ‘ஹாட் யோகா’ வகை தான் சிறந்தது என்பதை உணர்ந்ததாக கூறுகிறார் அவர்.

நீராவியின் வெப்பம் மற்றும் ஈரப்பதம் சூழ்ந்த அறையில் மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் ‘ஹாட் யோகா’ என்று அழைக்கப்படுகின்றன.
அமெரிக்க அதிபர்களுக்கு யோகா கற்று தந்த இந்தியர்

வாஷிங்டன் டிசியின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள பிக்ராம் ஹாட் யோகா பயிற்சி மையம், கொல்கத்தாவை சேர்ந்த பிக்ராம் செளத்ரி என்பவரால் உருவாக்கப்பட்டது. பிரபல பாடகிகளான மடோனா மற்றும் லேடி காகா இவரிடம் யோகா கற்று கொண்டிருந்துள்ளனர். அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களான ரிச்சர்ட் நிக்சன், ரொனால்ட் ரீகன் மற்றும் பில் கிளிண்டனுக்கும் தான் யோகா பயிற்சிகளை அளித்திருப்பதாக கூறிக்கொள்கிறார் பிக்ரம்.

2017 இல் அமெரிக்காவில் இருந்து வெளியேறிய பிக்ரம் குறித்து, ““Bikram: Yogi, Guru, Predator” என்ற ஆவணப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 2019 இல் ஒளிபரப்பியது.

130 ஆண்டுகளுக்கு முன்பு, ஓர் இந்தியர் தான் அமெரிக்கர்களுக்கு யோகாவை அறிமுகப்படுத்தியதாக நம்பப்படுகிறது. அவர் வேறு யாருமில்லை. அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் 1893 இல் நடைபெற்ற ஆன்மிக மாநாட்டில், ‘அமெரிக்காவின் அன்புள்ள சகோதர, சகோதரிகளே’ என்று தான் தொடங்கிய உரையின் மூலம் ஒட்டுமொத்த உலகின் கவனத்தை ஈர்த்த இந்து துறவியான சுவாமி விவேகானந்தர் தான் அவர்.

ஆனால், “யோகா பற்றி விவேகானந்தருக்கு இருந்த பார்வை, அணுகுமுறை, இன்று உலகம் முழுவதும் பரிச்சயமான யோகா பயிற்சிகளில் இருந்து வேறுபட்டதாக இருந்தது” என்று தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் யோகா அறிஞரான பிலிப் டெஸ்லிப்.

“தத்துவம், உளவியல் மற்றும் சுய முன்னேற்றம் பற்றிய விஷயமாகவே யோகாவை விவேகானந்தர் பார்த்தார்” என்கிறார் பிலிஃப்.

கடந்த 1920, 1930களில் அமெரிக்காவில் இருந்த ஆரம்பகால யோகா ஆசிரியர்கள், யோகாவை விஞ்ஞானபூர்வமாக அணுகாமல், அதை ஓர் மந்திரம் மற்றும் மாயாஜால வித்தை போன்றே கற்பித்தனர். அதே பாணியில் பிரசங்கமும் செய்து வந்தனர்.

இவர்களில் பலர் அமெரிக்காவில் ஏற்கெனவே பிற தொழில்களை செய்து வந்த நிலையில், சூழ்நிலை காரணமாக யோகா ஆசிரியர்கள் ஆக வேண்டியதானது. அந்த நிலையில், 1923இல் அமெரிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் விளைவாக, யோகா ஆசிரியர்களில் சிலர், வெள்ளையர்களாக இல்லை என்பதால் அமெரிக்க குடியுரிமையை பெற முடியாத நிலையும் ஏற்பட்டது.

அப்படிப்பட்ட ஒருவர் தான் யோகி ஹரி ராம். இந்தியாவின் பஞ்சாப்பில் இருந்து மோகன் சிங்காக 1910இல் அவர் அமெரிக்காவிற்கு வந்தார். துணிச்சலான பைலட்டாக இருந்த அவர், சில தவறான முதலீடுகளால் தனது பணம் மற்றும் குடியுரிமையை இழந்தார். ஒரு கட்டத்தில் தன்னுள் தெய்வீகத்தை உணர்ந்த அவர் யோகா கற்றுக் கொண்டார். ‘சூப்பர் யோகா அறிவியல்’ என்று தான் அழைத்த யோகா முறையை பயிற்றுவிக்க நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
யோகாவின் மறுமலர்ச்சி

இந்தியாவில் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் சுவாமி குவலானந்தா போன்ற சீர்திருத்தவாதிகளால் கொண்ட வரப்பட்ட ‘ஹத்த யோகா மறுமலர்ச்சி’ யோகாவை பற்றி அதுநாள்வரை உலகத்திற்கு இருந்துவந்த பார்வையை ஒட்டுமொத்தமாக மாற்றியது என்கிறார் பிலிஃப். யோகா என்றால் மாயம். மந்திரம் என்றிருந்த புரிதலை மாற்றி, அதற்கொரு அறிவியல் ரீதியான அடித்தளத்தை ‘ ஹத்த யோகா’ அமைந்து கொடுத்llg என்று குறிப்பிடுகிறார் அவர்.

உடலின் தோரணைகள் (Postures) மற்றும் சுவாசப் பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்தியது ஹத்த யோகா முறை. இந்த வகையான யோகா பயிற்சி முறைகள் நாடு முழுவதும் பரவ தொடங்கியதும், 1930களுக்கு பிறகு யோகா பற்றிய அமெரிக்கர்களின் பார்வை ஒட்டுமொத்தமாக மாறியது. இன்று தொலைக்காட்சியில் விளம்பர இடைவேளையுடன் கற்று தரப்படும் அளவுக்கு யோகா பிரபலமடைந்துள்ளது என்று பெருமிதத்துடன் கூறுகிறார் பிலிஃப் டெஸ்லிப்.

பி.கே.எஸ் ஐயங்காரின் யோகா முறை,’ ஐயங்கார் யோகா’ என்று அவரது பெயரிலேயே அழைக்கப்பட்டது

கே. பட்டாபி ஜோயிஸ், பி.கே.எஸ் ஐயங்கார் மற்றும் பிக்ரம் சௌத்ரி ஆகிய மூன்று இந்தியர்கள் மூலம் யோகாவின் பல்வேறு முறைகள் பிரபலமாகின. இவற்றில் பட்டாபி ஜோயிஸ், யோகாவின் பண்டைய வடிவமான ‘அஷ்டங்க யோகா’வை பிரபலப்படுத்தினார்.

பி.கே.எஸ் ஐயங்காரின் யோகா முறை,’ ஐயங்கார் யோகா’ என்று அவரது பெயரிலேயே அழைக்கப்பட்டது.

இந்த மூன்று பேரில் பட்டாபி ஜோயிஸ் மற்றும் ஐயங்கார், தங்களின் யோகா பயிற்சி மையத்தின் அடித்தளத்தை இந்தியாவில் அமைத்திருந்தனர். அத்துடன், அமெரிக்காவிற்கு தொடர்ந்து பயணங்களை மேற்கொண்டனர். அங்கு யோகாவை கற்றுக் கொடுக்கவும், பரப்பவும். பயிற்சி மையங்களை உருவாக்கவும் செய்தனர். பிக்ரம் செளத்ரி, 1990 களில் தனது பெயரிலான யோகா பயிற்சி மையங்களை அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் நிறுவினார்.

இந்தியர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு யோகா முறைகளுடன், பல்வேறு அமெரிக்க முறை யோகா முறைகளும் தற்போது உள்ளன.

‘அனுசரா யோகா’ முறை, மனிதர்களின் உள்ளார்ந்த நற்குணத்தை முன்னிறுத்துகிறது. ‘ப்ரோகா’ என்பது ஆண்களுக்கான பிரத்யேக யோகா வடிவமாக கருதப்படுகிறது. மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை கூடங்களில் மேற்கொள்ளப்படும் யோகா, ‘பீர் யோகா’ என்று அழைக்கப்படுகிறது.

இதேபோன்று உரத்த மற்றும் துடிப்பான இசையுடன் மேற்கொள்ளப்படும் யோகா, ‘ஹெவி மெட்டல் யோகா’ என்று பெயர் பெற்றுள்ளது. இவை தவிர யோகாவின் தீவிர வடிவமான ‘பவர் யோகா’ உள்ளிட்ட முறைகளும் அமெரிக்காவில் உள்ளன.

யோகா அலையன்ஸ் மற்றும் யோகா ஜர்னல் ஆகியவற்றின் 2016 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, 36 மில்லியன் அமெரிக்கர்கள் யோகா பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் அவர்கள் யோகா வகுப்புகள் மற்றும் அதற்கான பிரத்யேக உடைகள் உள்ளிட்டவற்றுக்காக மட்டும் மொத்தம் 16 பில்லியன் டாலர்கள் செலவிடுகின்றனர் என்றும் அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

எதற்கும் வளைந்து கொடுக்கும் தன்மை (61%), மனஅழுத்தத்தில் இருந்து நிவாரணம் (56%) உடற்பயிற்சி (49%) ஒட்டுமொத்த உடல்நலத்தை மேம்படுத்துதல் (49%) மற்றும் உடற்தகுதி (44%) ஆகியவை, அமெரிக்கர்கள் யோகாவை மேற்கொள்வதற்கான முதல் ஐந்து காரணங்களாக குறிப்பிடுவதாகவும் அந்த புள்ளிவிவரம் lதெரிவிக்கின்றன.

“ முதுகு வலி மற்றும் குடலிறக்க பிரச்சனைகளுக்கு அறுவை சிகிச்சை மற்றும் மருந்துகள் இல்லாமல் தீர்வு காண யோகா எனக்கு உதவியது” என்கிறார் மேரிலேண்டில் யோகா பயிற்சி மையத்தை நடத்தும் சூசன் நியூபாயர்.

மேலும், யோகா பயிற்சியை மேற்கொள்பவர்களால் உடல் மற்றும் மனரீதியான மறுமலர்ச்சியை உணர முடியும் என்று கூறுகிறார் சூசன், இதன் மகத்துவத்தை மேலும் அறிந்து கொள்ள இந்தியாவிற்கு தான் பயணம் மேற்கொண்டதாகவும் அவர் கூறுகிறார்.

யோகா பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ளும் ஒருவரால் அவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்று உலக சுகாதார நிறுவனமும் கூறுகிறது.

ஆனால், யோகா குறித்த எதிர்மறை கருத்துகளும் அமெரிக்காவில் இருக்கத்தான் செய்கின்றன. இத்தாலியில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களால் அங்கு கொண்டு வரப்பட்ட சாண்ட்விச் வகை உணவு தான் பின்னர் பீட்சாவாக மாறியது. அதே போன்று, வெளியில் இருந்து அமெரிக்காவுக்கு வந்த யோகாவும் இன்று பல்வேறு முறைகளில் கற்பிக்கப்பட்டு வருகிறது என்பது அமெரிக்கர்கள் சிலரின் மத்தியில் யோகா பற்றி இருக்கும் கருத்தாக உள்ளது.

இப்படி மாறுபட்ட சில கருத்துகள் இருந்தாலும், 1930களில் ‘ஹத்த யோகா’ மறுமலர்ச்சியின் மூலம் மெல்ல மெல்ல இன்று உலகம் முழுவதும் யோகா பரவியுள்ளது என்பது யாராலும் மறக்க முடியாத உண்மை என்கிறார் பிலிஃப் டெஸ்லிப்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.