ஓடும் ரெயிலில் பாலியல் தொல்லை.. பெண்ணை அரை நிர்வாணமாக்கி கீழே தள்ளிவிட்ட கொடுமை!!
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் அருகே ஓடும் ரெயிலில் இருந்து ஒரு பெண்ணை அரைநிர்வாணமாக்கி கீழே தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முசாபர்பூரில் இருந்து சூரத் வரை இயக்கப்படும் சூரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த திங்கட்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து சூரத் நோக்கி ஒரு பெண் மற்றும் அவரது உறவினர்கள் பயணம் செய்தனர். அப்போது அந்த பெண்ணுக்கும், அதே பெட்டியில் பயணித்த 5 ஆண்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணை 5 பேரும் பாலியல் தொந்தரவு செய்ய முயன்றுள்ளனர். மேலும் அந்த பெண்ணின் சம்மதம் இன்றி செல்போனில் போட்டோ எடுத்துள்ளனர். இதனை தட்டிக்கேட்ட உறவினரை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இதையடுத்து வேறு இருக்கைக்கு செல்ல முடிவெடுத்த இருவரும் அங்கிருந்து வாசல் பகுதிக்கு சென்றனர். ஆனால் அப்போதும் விடாத 5 நபர்களும் வாசலில் வைத்து அந்த பெண்ணை மீண்டும் தாக்கி பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். சேலையை உருவி அரை நிர்வாணமாக்கி ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர். உடனிருந்த உறவினரையும் தள்ளிவிட்டுள்ளனர். பரோடி கிராமத்தின் அருகே இருவரும் கீழே தள்ளிவிடப்பட்டுள்ளனர். பலத்த அடிபட்டு மயங்கிய அவர்கள் இரவு முழுவதும் அங்கேயே கிடந்துள்ளனர். காலையில் அந்த வழியாக சென்ற கிராம மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.