;
Athirady Tamil News

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால்.. காங்கிரஸ் அரசுக்கு எடியூரப்பா எச்சரிக்கை!!

0

கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ், தனது தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான 5 வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றவில்லை என்றால், சட்டசபையியின் உள்ளேயும், வெளியேயும் பா.ஜ.க. சத்தியாக்கிரக போராட்டம் நடத்தும் என பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான எடியூரப்பா எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மாநிலத்தின் “அன்ன பாக்யா” திட்டத்திற்காக அரிசி பெறுவதில் தேவையில்லாமல் மத்திய அரசை ஆளும் காங்கிரஸ் குற்றம் சுமத்துகிறது. ஏற்கெனவே 5 கிலோ அரிசியை மத்திய அரசாங்கம் இலவசமாக வழங்குவதால், இதற்கு மேலும் அரிசி வேண்டுமென்றால் அதை வினியோகிக்க ஏற்பாடுகளை மாநில அரசாங்கம் செய்து கொண்டு வாங்க வேண்டும்.

மாநிலங்களுக்கு மேலும் அரிசி வழங்குவதாக மத்திய அரசு தெரிவிக்காதபோது, வாக்குறுதி வழங்கி விட்டு மத்திய அரசின் மீது பழி போடுவது மக்களுக்கு செய்யும் துரோகம். வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால் பதவி விலக வேண்டும். 5 வாக்குறுதிகளில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் எனும் திட்டத்தை மட்டுமே காங்கிரஸ் அரசாங்கம் பல இடைஞ்சல்களுடன் நிறைவேற்றியிருக்கிறது. மீதமுள்ள வாக்குறுதிகள் நிறைவேறும் அறிகுறிகள் இல்லை. அவற்றை நிறைவேற்றா விட்டால், சட்டசபையின் உள்ளேயும் வெளியேயும் பா.ஜ.க. போராட்டம் நடத்துவோம். கட்சியின் தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் இதற்காக ஆலோசித்து போராட்டத்திற்கு திட்டமிடுவார்கள்.

கட்சியினர் அனைவரும் கலந்து கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். கடந்த பா.ஜ.க.வின் ஆட்சிக் காலங்களில் நிதித்துறையை தன் வசம் வைத்திருந்த எடியூரப்பா, மேலும் தெரிவித்திருப்பதாவது: வாக்குறுதிகள் கொடுக்கும் முன்பு நிதி நிலைமையை கணக்கில் கொள்ள காங்கிரஸ் தவறி விட்டது. காங்கிரஸ் அளித்திருக்கும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டால், வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி தட்டுப்பாடு தோன்றும். இப்பொழுதே மக்கள் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிராக போராட்டம் நடத்துவதை காண்கிறோம். மக்களை துன்பத்திற்குள்ளாக்கி அதை ரசித்து வரும் காங்கிரஸின் போக்கு கண்டனத்திற்குரியது. இதற்கெல்லாம் மக்கள் தக்க பதிலளிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.