பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்.. பகுஜன் சமாஜ் கட்சிக்கு அழைப்பு இல்லை- காங்கிரஸ் மீது மாயாவதி கடும் தாக்கு!!
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகளை அணிதிரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார், நாளை பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட கூட்டத்தை கூட்டியிருக்கிறார். இக்கூட்டத்தில் பங்கேற்க பாஜகவுக்கு எதிரான கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரி தனது குடும்ப நிகழ்வு காரணமாக கூட்டத்தில் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் கூட்டத்தில், உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் மாயாவதி கூறியிருக்கிறார்.
இக்கூட்டத்தை தவிர்க்கும் வகையில் மாயாவதி டுவிட்டரில் சில பதிவுகளை செய்திருப்பது பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. அவர் டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது: பாட்னா கூட்டமானது, தலைவர்களின் கைகளை கோர்ப்பதை போன்றுதான் தெரிகிறதே தவிர, இதயங்களை இணைப்பது போல இல்லை. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், வறுமை, வன்முறை போன்றவற்றால் நாடு அல்லல்படும்போது அம்பேத்கர் கட்டமைத்து கொடுத்த அரசியல் சாசனம் மூலம் சமத்துவ சமுதாயம் உருவாக்க காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. போன்ற கட்சிகளால் முடியாது. இதுபோன்ற கூட்டத்தை கூட்டும் முன்பாக, “பேசுவது ஒன்றும், நோக்கம் வேறாகவும்” உள்ள இப்படிப்பட்ட கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி விடுவது நல்லது.
மேலும், எந்த கூட்டணிக்கும் வெற்றி தேடித் தர அவசியமான, இந்தியாவிலேயே அதிகமான எண்ணிக்கையாக 80 மக்களவை தொகுதிகளை கொண்டுள்ள உத்தரபிரதேசத்தின் தலைவர்களுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை. அவசியமான விஷயங்களுக்கு முன்னுரிமை தராமல் மேற்கொள்ளப்படும் மக்களவை தேர்தல் கூட்டணிக்கான ஏற்பாடுகள் எவ்வாறு பயனளிக்கும்? இவ்வாறு மாயாவதி தெரிவித்திருக்கிறார். உத்தரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் மற்றும் தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என சில தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கட்சிகள் பொதுவாக பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிடமிருந்து விலகி இருப்பவை. எனினும், பிரச்சனைகளின் அடிப்படையில் இந்த கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதால் அழைப்பு விடுக்கவில்லை என தெரிகிறது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின தலைமை செய்தி தொடர்பாளர் கே.சி.தியாகி கூறுகையில், “2024-ல் பாஜகவுக்கு எதிராக போராட தயாராக உள்ள கட்சிகளுக்கு நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். ஆனால் இந்த கூட்டணியில் அங்கம் வகிக்காது என்று பகுஜன் சமாஜ் கட்சி கூறுகிறது, பிறகு நாங்கள் ஏன் எங்கள் அழைப்பை வீணடிக்க வேண்டும்?” என்றார்.