மோதியின் அமெரிக்க பயணத்தை சிலர் எதிர்ப்பது ஏன்? !!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பிடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்கா சென்றுள்ளார்.
மோதிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மோதியின் இந்த வருகைக்கு அமெரிக்காவில் எதிர்ப்புக் குரல்களும் கிளம்பியுள்ளன.
வாஷிங்டனில் தரையிறங்கிய பிறகு, மோதிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. வெள்ளை மாளிகையில் மோதிக்கு அதிபர் ஜோ பைடன் , அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் விருந்தளித்தனர்.
பிரதமர் நரேந்திர மோதிக்கு வெள்ளை மாளிகையில் இரவு விருந்தையும் பைடன், அவரது மனைவி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த சந்திப்பு தொடர்பாக சில புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்திருந்த மோதி, “வெள்ளை மாளிகையில் விருந்து அளித்ததற்காக அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோருக்கு நன்றி. பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினோம் ” என்று பதிவிட்டிருந்தார்.
அமெரிக்காவில் முதல் நிகழ்ச்சியாக, நியூயார்க்கில் அமைந்துள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் சர்வதேச யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவரது வருகை குறித்து இரு நாடுகளிலும் உற்சாகம் காணப்படுவதுடன், அவரது வருகை இந்திய-அமெரிக்க உறவுகளை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனினும், அமெரிக்காவில் சிலரிடம் இருந்து மோதிக்கு எதிரான குரல்களும் கிளம்பியுள்ளன.
அமெரிக்காவில் கிளம்பியுள்ள எதிர்ப்பு
அமெரிக்காவில் செயல்படும் அம்னெஸ்டி சர்வதேச சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுமே இரு நாடுகளிலும் நிலவும் மோசமான மனித உரிமை சூழல் குறித்து பேச வேண்டும் என்று கேட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோதியின் ஆட்சியின் கீழ் இந்தியாவில் மனித உரிமைகள் மீறப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை சம்பவங்களும் இதில் அடங்கும் என்று அம்னெஸ்டி கூறியுள்ளது.
மணிப்பூரில் கடந்த சில வாரங்களாக நிகழ்ந்துவரும் வன்முறை சம்பவங்களின் தாக்கமும் இந்த பயணத்தில் எதிரொலிக்கிறது.
அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினரான குகி , மெய்தேய் சமூகத்தை சேர்ந்தவர்கள் மணிப்பூர் வன்முறை தொடர்பாக போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
அமெரிக்க மெய்தேய் அசோசியேஷன் (AMA) வெள்ளை மாளிகை எதிரே உள்ள லாஃபாயெட் பூங்காவில் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்தப் போவதாக தெரிவித்ததாக டெக்கான் ஹெரால்ட் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
நரேந்திர மோதிக்கு வெள்ளை மாளிகையில் விருந்து அளித்தது, அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு வழங்கியது போன்றவற்றிற்காக அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக இந்திய ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான கூட்டணி (CRID) போராட்டத்தை அறிவித்துள்ளது.
சி.ஆர்.ஐ.டி. என்பது அமெரிக்காவில் வாழும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, தலித் போன்ற குழுக்களின் சிவில் அமைப்பாகும்.
சி.ஆர்.ஐ.டி. வெளியிட்ட அறிக்கையில், “மோதியின் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகள், மத சுதந்திரம், ஜனநாயக சீரழிவு மற்றும் சிவில் சமூகம், விமர்சகர்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள் குறித்து நாங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறோம்.” என்று தெரிவித்திருந்தது.
‘இந்து மேலாதிக்கத்திலிருந்து இந்தியாவைக் காப்பாற்றுங்கள்’ என்ற பெயரில் இந்தப் போராட்டத்தை இந்திய ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான கூட்டமைப்பு நடத்துகிறது.
மோதியின் தலைமையில் இந்தியாவில் ஜனநாயக அமைப்புகளின் சுதந்திரம் குறைந்துள்ளது என்று அமெரிக்க ஊடகங்களில் பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
மோதியின் அமெரிக்க சுற்றுப்பயணம் பைடனின் ஜனநாயகம் Vs சர்வாதிகாரம் முழக்கத்திற்கும் ஒரு வகையான சோதனை என்று வாஷிங்டன் போஸ்ட் எழுதியுள்ளது.
மோதியின் தலைமையின் கீழ் இந்தியாவில் இந்து தேசியவாதத்தை ஊக்குவிப்பது மற்றும் ஜனநாயக அமைப்புகளின் வீழ்ச்சி குறித்து மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்து வருவதாகவும் வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.
2005ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக மோதி இருந்தபோது நடந்த பயங்கர மதக் கலவரத்துக்குப் பிறகு, அவருக்கு அமெரிக்கா விசா மறுத்ததாகவும் அந்த நாளிதழ் எழுதியுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வேறுபல தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அங்கு வசிக்கும் இந்திய மக்கள் ஆகியோரை மோதி சந்தித்து வருகிறார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோதியின் பேச்சை புறக்கணிக்கவும் அந்நாட்டு தலைவர்கள் சிலர் முடிவு செய்துள்ளனர்.
மிச்சிகனின் 12வது மாவட்டத்தைச் சேர்ந்த பிரதிநிதி ரஷிதா தாலிப், கூட்டு அமர்வில் மோதி ஆற்றும் உரையைப் புறக்கணிப்பதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
“தேசிய தலைநகரில் மோதிக்கு ஒரு மேடை வழங்கப்படுகிறது. மனித உரிமைகளை மீறுதல், முஸ்லிம்கள் மற்றும் மத சிறுபான்மையினரை குறிவைத்து ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எடுத்தல், பத்திரிகையாளர்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்த நீண்ட வரலாறும் அவருக்கு உள்ளது.” எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நியூயார்க்கின் 14வது மாவட்டத்தைச் சேர்ந்த பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரியா ஆஸ்காரியோ-க்ரோடெஸும் மோதியின் உரையைப் புறக்கணிக்க முடிவு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
மோதியின் பயணத்துக்கு எதிர்ப்பு இருந்தபோதிலும், அவருக்கு நல்ல முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வெள்ளை மாளிகையில் இருந்து வெளியே வந்து மோதியை பைடன் மற்றும் அவரது மனைவி வரவேற்றனர்.
தினை உணவு, சோளத்தால் தயாரிக்கப்பட்ட சாலட், காலான் மூலம் தயாரிக்கப்பட்ட பதார்த்தங்கள் போன்றவை உணவில் இடம்பெற்றிருந்தன.
இந்த சிறப்பு இரவு உணவுகளை தயாரிப்பதற்காக சிறப்பு சமையல்காரரான நினா கர்டிஸை அழைத்ததாக அதிபர் பைடனின் மனைவி ஜில் பைடன் புதனன்று தெரிவித்தார்.
மோதிக்கான சைவ மெனுவுடன் கூடிய இரவு உணவை தயாரித்த நினா கர்டிஸ் சைவ உணவு தயாரிப்பில் நிபுணராகக் கருதப்படுகிறார்,
இந்த பயணத்தில் நரேந்திர மோதி அமெரிக்காவின் பல பெரிய தொழிலதிபர்கள் மற்றும் பெரிய பிரமுகர்களை சந்தித்துள்ளார். அமெரிக்க பெரும்பணக்காரரான ஈலோன் மஸ்கும் இதில் அடங்குவார்.
பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த பிறகு, நான் மோடியின் ரசிகன் என்று ஈலோன் மஸ்க் குறிப்பிட்டார். மேலும் டெஸ்லா நிறுவனம் கூடிய விரைவில் இந்தியாவில் பெரிய முதலீடு செய்யும் என்று மஸ்க் கூறினார்.
சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டெஸ்லா நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வரும், கூடிய விரைவில் இது நடக்கும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்றார்.
இந்நிலையில், சிஎன்என் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, மோதியுடன் தனக்கு பேச வாய்ப்பு கிடைத்திருந்தால் சிறுபான்மையினர் குறித்து பேசியிருப்பேன் என்று இஸ்லாமியர்களின் பாதுகாப்பை மேற்கொள்காட்டி கூறியுள்ளார்.
செய்தியாளர் கிறிஸ்டியனே அமன்பூர் மோதியின் பயணத்தை குறிப்பிட்டு, “எதேச்சதிகார அல்லது மிகவும் குறைந்த தாராளவாத ஜனநாயகவாதியாகக் கருதப்படும் மோடியை பைடன் தற்போது அமெரிக்காவில் வரவேற்கிறார். அத்தகைய தலைவர்களை ஒரு அதிபர் எவ்வாறு கையாள வேண்டும்?” என்று கேள்வி எழுப்புகிறார்.
இதற்கு பதிலளித்த ஒபாமா, இந்து பெரும்பான்மையான இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறிப்பிடத் தக்கது. பிரதமர் மோதியை எனக்கு நன்றாக தெரியும், அவருடன் நான் உரையாடியிருந்தால், இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை நீங்கள் பாதுகாக்கவில்லை என்றால், இந்தியா ஒரு கட்டத்தில் பிரிந்து செல்வதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. அது இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது என்பது என் வாதமாக இருந்திருக்கும்” என்றார்.