;
Athirady Tamil News

சனாதன தர்மம் என்றால் என்ன? வள்ளலார் அதைப் பின்பற்றினாரா?

0

“சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்” என வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வள்ளலார் சனாதன தர்மத்தை ஏற்று, அதைப் பின்பற்றினாரா?
வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது என்ன?

வடலூரில் திருவருட் பிரகாச வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழா ஜூன் 21ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சனாதன தர்மத்தைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்டு, அதை வள்ளலார் பின்பற்றியதாகப் பேசினார்.

“பத்தாயிரம் ஆண்டுகால பாரம்பரியத்தைக் கொண்ட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் பெருமான். காழ்ப்புணர்ச்சியாலும் அறியாமையாலும் சில மனிதர்கள் சனாதன தர்மத்தைப் பற்றி சில மனிதர்கள் தவறான எண்ணப் போக்கைக் கொண்டிருக்கிறார்கள்.

சனாதன தர்மம் என்றால் என்ன? நமது ரிஷிகளும் ஞானிகளும் உலகின் துவக்கமென்ன, படைப்பின் மூலமென்ன என்பதை நாம் எளிய முறையில் புரிந்துகொள்வதற்காக நமது உபதேசங்களின் மூலமாகவும் தத்துவங்களின் மூலமாகவும் வழிகாட்டிச் சென்றிருக்கிறார்கள்.

டைட்டானிக் நீர்மூழ்கியில் ஆக்சிஜன் காலியான பிறகு உள்ளே இருப்பவர்களுக்கு என்ன ஆகும்? முழு விவரம்
4 மணி நேரங்களுக்கு முன்னர்
சென்னை – போடி புதிய ரயில்: எந்தெந்த ஊருக்கு போகலாம்? எவ்வளவு கட்டணம்?
22 ஜூன் 2023
ராம்சரண், உபாசனா தம்பதிக்கு பெண் குழந்தை: தொப்புள் கொடி ரத்தம் ஏன் சேமிக்கப்படுகிறது? செலவு என்ன?
21 ஜூன் 2023

சனாதன தர்மத்தைப் பற்றி மிகச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் படைக்கக்கூடிய ஒரு தலைவன், அவனைப் படைப்பில் அண்டங்களாகவும் பேரண்டங்களாகவும் உயிர்களாகவும் மரங்களாகவும் பூச்சிகளாகவும் வியாபித்திருக்கிறான். அந்தந்த உயிர்களுக்குள்ளாகவும் அவன் தொழிற்படுகிறான் என்பதுதான் சனாதன தர்மம்.

உங்களில் என்னைக் காண்கிறேன். என்னில் உங்களைக் காண்கிறேன். இந்தத் தத்துவத்தை உணர்த்துவதுதான் சனாதன தர்மம். இந்த சனாதன தர்மத்தை யார் ஏற்காவிட்டாலும், மறுத்தாலும் இதற்கு இடையூறு செய்தாலும் அவர்களும் இந்த சனாதன தர்மத்திற்குள் இருப்பார்கள். அவர்களை நாம் அந்நியராகப் பார்ப்பது கிடையாது.

வள்ளலார் கூறிய ஒரு வாக்கியம் என் இதயத்தைத் தொட்டது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என அவர் பாடியதை, இதுவரை நான் கூறிய சனாதன தர்மத்தின் எதிரொலியாகவே நான் காண்கிறேன். எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகிறதோ, அப்போதெல்லாம் நான் வருவேன் என பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார். இதேபோன்ற ஒரு சூழல் 200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்தது. அந்தக் காரிருளை நீக்க வந்த ஜோதிதான் வள்ளலார்.

வெளிநாட்டிலிருந்து வழிபாட்டு முறை வந்த பிறகுதான் பிரச்னை ஏற்பட்டது. அதனால் நாம் யார் என்ற அடையாளம் தொலைந்து போனது. நம் அடையாளம் அழிந்து போனதற்குக் காரணம் வெளிநாட்டிலிருந்து வந்த வழிபாட்டு முறைகள்தான்.

சிறுதெய்வ வழிபாடு,பெருந்தெய்வ வழிபாடு எனப் பல வழிபாட்டு முறைகள் இருந்தன. அவை ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டது இல்லை. புதிதாக வந்த மதங்கள் என்னுடைய மதம் மேம்பட்ட மதம் என்று சொன்னபோதுதான் முதன்முதலாக இங்கே பிரச்னை வந்தது.

ஆங்கிலேயர்கள் தங்கள் சனாதன தர்மத்தை அழிக்க முடியாதபோது, நம் பெருமைகளை அழிக்க முயன்றார்கள். பிஷப் கால்டுவெல், ஜி.யு. போப் போன்றவர்கள் மொழிமாற்றம் செய்யும்போது, நூல்களில் இருந்த இறைக் கருத்துகளை வெளியில் எடுத்துவிட்டு, அது அல்லாத கருத்துகளை மட்டுமே வெளியில் பரப்பினார்கள்.

கார்ல் மார்க்ஸ் என்ற இன்னோர் அறிஞர் இருக்கிறார். அவரும் ஆங்கிலேயர்களுக்கு உதவி செய்வதற்காகப் பல கட்டுரைகளை எழுதினார். அவர் 1852இல் சில கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அதில் பிரிட்டிஷாருக்கு சொல்லும் ஆலோசனை என்னவென்றால், சமூக கட்டமைப்பு என்ற ஒன்றே இருக்கக்கூடாது. இந்தியர்களுக்கு எந்த ஆற்றலும் கிடையாது. இவர்கள் சிலைகளையும் மிருகங்களையும் வழிபடக்கூடியவர்கள் என்று எழுதினார்.

கார்ல் மார்க்ஸ் போன்றவர்கள் நம்மைப் பற்றி மோசமாக பேசிக்கொண்டிருந்தபோதுதான், வள்ளல் பெருமான் என்ற ஞான சூரியன் தோன்றினார்,” என்று ஆளுநர் ஆர்.என். ரவி பேசினார்

சனாதன தர்மம் என்பதற்குப் பல்வேறு அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன. சமஸ்கிருத வார்த்தையான சனாதன தர்மம் என்பதற்கு ‘நிலையான தர்மம்’ (Eternal law) என்றே அர்த்தம். சனாதனம் என்ற வார்த்தை நிலையான என்ற பொருளைத் தருகிறது.

மனு ஸ்மிருதி, பாகவத புராணம் போன்ற சமஸ்கிருத செவ்வியல் இலக்கியங்களில் இந்த வார்த்தை காணப்படுகிறது. மனு ஸ்மிருதியில், “உண்மையையே பேசு. யாரையோ புகழ்வதற்காகவோ, மகிழ்விப்பதற்காகவோ பேசாதே. இதுவே நிலையான தர்மம்” (பாகம் நான்கு – 138வது பாடல்) என்று சொல்லப்படுகிறது.

சனாதன மதமே இந்து மதம் எனப் பலராலும் குறிப்பிடப்படுகிறது. ஆனால், இந்த சனாதன மதம் அல்லது தர்மம் குறிப்பிடும் நிலையான தர்மம் என்ன என்பதில் பல வேறுபாடுகள் இருக்கின்றன. காந்தி தன்னை ஒரு சனாதன இந்து எனச் சொல்லிக்கொண்டார்.

“சனாதன தர்மம் என்பது கிணற்றுத் தவளையைப் போன்றதல்ல. அது கடலைப் போல மிகப் பெரியது. இதை எந்தப் பெயரில் அழைத்தாலும் சரி, அது மனித குலத்திற்கே சொந்தமானது” என 1947இல் ஹரிஜன் இதழில் எழுதினார் காந்தி.

காஞ்சி காமகோடி மடத்தில் 68வது ஆச்சாரியராக நியமிக்கப்பட்ட சந்திரசேகர சரஸ்வதி, வர்ண தர்மமே சனாதன தர்மம் எனப் பல முறை குறிப்பிட்டார். இவரது பேச்சுகள் தெய்வத்தின் குரல் என்ற பெயரில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

தெய்வத்தின் குரலின் முதல் பகுதியில், “வர்ண தர்மம்” என்ற கட்டுரையில் சனாதன தர்மத்தின் முக்கிய அம்சமே வர்ண தர்மம்தான் என்கிறார் சந்திரசேகர சரஸ்வதி. “ஸநாதன தர்மத்தை ஊதி ஊதி எல்லாரிடமும் பரவச் செய்யலாம் என்பது என்னுடைய பேராசை. அதனால்தான் இதையெல்லாம் சொல்கிறேன். நம்முடைய ஸநாதன மதத்தில் மற்ற மதங்கள் எதிலுமே இல்லாத வர்ண தர்மம் இருப்பதால், இது அவசியமில்லை என்று எடுத்துப் போட்டுவிட்டு நம் மதத்தையும் மற்றவை மாதிரி ஆக்கிவிடவேண்டும் என்று சீர்திருத்தக்காரர்கள் சொல்கிறார்கள்.
சனாதன தர்மம் என்றால் என்ன?

மற்ற மதங்களில் சகல பிராணிகளுக்கும் அவசியமான பொது தர்மங்களை மட்டும் சொல்லியிருக்கிறது. அவற்றை நம் வைதிக மதமே சாமானிய தர்மங்கள் என்ற பெயரில் சர்வ ஜனங்களுக்கும் விதித்திருக்கிறது.

மற்ற தேசங்களிலும் சரி, நம் தேசத்திலும் சரி; மற்ற மதங்கள் போய்விட்ட போதிலும் இதுமட்டும் பதினாயிரம் ஆண்டுகளாகப் போகாமல் இருக்கிறதென்றால், அவற்றில் இல்லாத எதுவோ இதில் இருக்கிறது என்றுதானே அர்த்தம்!

அது என்ன என்று பார்த்தால், வர்ண தர்மம்தான் நமக்கு மட்டும் பிரத்தியேகமாக இருக்கிறது. ஆகையால் வர்ண தர்மம் சமூகச் சீர்குலைவுக்கே காரணம் என்று புது நாகரிகக்காரர்கள் சொன்னாலும், இது இருக்கிற நம் சமூகம்தான் சீர்குலையாமல் இருந்து வருகிறது.

நவீன யுகத்தில் ‘சமத்துவம்’ (equality) என்று சொல்லப்படுவதைவிட சிலாக்கியமாக, சமூகத்துக்கு ரொம்பவும் க்ஷேமம் விளைவிப்பதாகப் பழைய வர்ண தர்மத்தில் எதுவோ இருந்திருக்க வேண்டும் என்று தானே ஏற்படுகிறது?

அதனால்தான் சமூகத்தைப் பலவாகப் பாகுபாடு செய்திருக்கிற நம் மதம் ஒன்று மட்டுமே, இத்தனை எதிர்ப்புகள் இருந்தும் விழமாட்டேன் என்று இன்று வரைக்கும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்து வருகிறது. ”

அதாவது மக்களை நான்காகப் பிரித்து, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தர்மம் என்று இருப்பதே வர்ண தர்மம் என்றும் அந்த வர்ண தர்மமே சனாதன தர்மம் என்றும் குறிப்பிடுகிறார் சங்ககராச்சாரியார்.
சனாதன தர்மம் என்றால் என்ன?

பிறகு, தெய்வத்தின் குரல் மூன்றாவது பகுதியில், ஸநாதன தர்ம சாரம் என்ற கட்டுரையில், “வைதிக தர்மத்திற்கு சாரமாக இருப்பது பஞ்ச மஹாயஜ்ஞங்கள் என்ற ஐந்து வேள்விகள்” தான் என்று குறிப்பிடுகிறார் சங்கராச்சாரியார்.

தற்போதைய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, வேறு வேறு சந்தர்ப்பங்களில் சனாதன தர்மம் குறித்து வெவ்வேறு விளக்கங்களை அளித்துள்ளார். சென்னை ராமகிருஷ்ண மடத்தின் நூற்றாண்டு விழாவில் பேசும்போது, மதமும் சனாதன தர்மமும் ஒன்றல்ல என்று குறிப்பிட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி.

“சனாதன தர்மத்துடன் மதத்தை ஒப்பிட்டுப் பேசக்கூடாது. இவை இரண்டும் வேறு வேறானவை. ஒரு கடவுளை மட்டுமே வணங்க வேண்டும் என்று கூறுவது சனாதன தர்மம் இல்லை. அனைத்து கடவுள்கள் மற்றும் மதங்களுக்கு நமது நாட்டில் இடம் உள்ளது. இங்கு மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்கூட சனாதன தர்மத்தைப் பின்பற்றியுள்ளனர்,” என்றார் ஆளுநர்.

அதற்கு முன்பாக, சென்னை வானகரத்தில் உள்ள சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற விழாவில் பேசிய ஆர்.என்.ரவி, ‘பாரதம் என்பது சனாதன தர்மத்தால் உருவாக்கப்பட்டது. மரத்தில் உள்ள இலைகள், கிளைகள் ஆகியவற்றைப் போல நமது எண்ணங்களும் செயல்பாடுகளும் கொள்கைகளும் மாறுபடலாம்.

வேற்றுமையில் ஒற்றுமையைப் போன்று பரமேஸ்வரா என்பது ஒன்றே என சனாதனம் கூறுகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதைத்தான் சனாதன தர்மமும் கூறுகிறது. நாட்டில் ராணுவம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைப் போல ஆன்மிகத்திலும் வளர்ச்சி என்பது அவசியம். அதுவே இந்தியாவின் வளர்ச்சியாக அமையும்,” எனக் குறிப்பிட்டார்.

திருவருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் ஆன்மீகவாதி. இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் புரட்டாசி மாதம் 19ஆம் தேதி (5 அக்டோபர் 1823) பிறந்தார்.

தன் வாழ்வின் பெரும்பகுதியைச் சென்னையில் கழித்த இவர், அனைத்து சமய நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞான சபையை அமைத்தார்.

“எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே” என்பதைக் குறிக்கும் வண்ணம், தான் தோற்றுவித்த மார்க்கத்திற்கு “சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம்” என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரை பழைமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்.

இவர் சாதிய பாகுபாடுகளைக் கடுமையாக சாடினார். “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்” என்று பாடிய வள்ளலார், 1867இல் கடலூர் மாவட்டம் வடலூரில் “சத்திய ஞான தர்ம சபை” என்ற சபையை நிறுவினார். இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் தொகுப்பே ‘திருவருட்பா’ என்று அழைக்கப்படுகிறது.

சிறு தெய்வ வழிபாடு கூடாது என்றும் அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது என்றும் கூறிய வள்ளலார், கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் என்று குறிப்பிட்டார். சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடுகளை வெறுத்தார்.

சனாதன தர்மம் என்பதற்கு ஒவ்வொருவரும் ஒரு விளக்கத்தை அளிப்பதால், இந்தக் கேள்விக்கு பதில் சொல்வது கடினம்.

ஆளுநர் ஆர்.என். ரவி ஒருமுறை சனாதன தர்மம் குறித்து அளித்த விளக்கத்தில், “ஒரு கடவுளை மட்டுமே வணங்க வேண்டும் என்று கூறுவது சனாதன தர்மம் இல்லை. அனைத்து கடவுள்கள் மற்றும் மதங்களுக்கு நமது நாட்டில் இடம் உள்ளது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், வள்ளலாரைப் பொறுத்தவரை, “கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்” என்று குறிப்பிட்டார். வடலூரில் ஆற்றிய உரையில், “சிறுதெய்வ வழிபாடு, பெருந்தெய்வ வழிபாடு எனப் பல வழிபாட்டு முறைகள் இருந்தன. அவை ஒன்றுக்கொண்டு மோதிக்கொண்டதில்லை,” என்கிறார் ஆளுநர். ஆனால், சிறுதெய்வ வழிபாடு விலங்குகளின் பலியை ஊக்குவிக்கிறது என்பதால், சிறுதெய்வ வழிபாடு என்பதையே வள்ளலார் ஏற்கவில்லை.

வள்ளலார் சனாதன தர்மத்திற்கு முழுக்க முழுக்க எதிராக இருந்தவர். அதை முற்றிலுமாகப் புறக்கணித்தவர் என்கிறார் நவீன நோக்கில் வள்ளலார், அருட்பா – மருட்பா கண்டனத் திரட்டு ஆகிய நூல்களை எழுதிய வள்ளலார் ஆய்வாளர் ப. சரவணன்.

“பத்தாயிரம் ஆண்டுகால பாரம்பரியத்தைக் கொண்ட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என்று சொன்னால், அதில் அவர் வேறு யாரையும்விடத் தீவிரமாக இருந்தார் என்றுதானே பொருள்?

ஆனால், வள்ளலார் சனாதன தர்மத்தை ஏற்றவரில்லை. சனாதன தர்மம் என்றாலே அதில் மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வு உண்டு. வள்ளலார் அதற்கு முழுக்க முழுக்க எதிரானவர்.

எல்லா உயிரையும் தன் உயிர்போலப் பார்க்க வேண்டும் என்பதைத்தான் வள்ளலார் திரும்பத் திரும்பச் சொன்னார்.

‘நால்வருணம், ஆசிரமம், ஆசாரம் முதலான நவின்ற கலை சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே’ என்கிறார் வள்ளலார். ‘தோல் வருணம் கண்டு மேல் வருணம் அறிவாரில்லை’ என்றும் சொல்கிறார்.

‘மதித்த சமயமத வழக்கமெல்லாம் மாய்ந்தது வருணாசிரம் என்னும் மயக்கமும் சாய்ந்தது’ என்கிறார். வருணாசிரம மயக்கம் சாய்ந்தது என்று சொல்பவர், எப்படி சனாதன தர்மத்தை ஏற்றவர் என்று கூற முடியும்?

வள்ளலார் ஒவ்வொருவரும் எப்படி வாழ வேண்டும் என்பதற்காக பேருபதேசம் என்ற நூலை எழுதியிருக்கிறார். அதில் ஒவ்வொருவருக்குமான நித்ய கர்ம ஒழுக்கம் வகுக்கப்பட்டிருக்கிறது. அதில் சொல்லப்படும் ஒழுக்கமும் சனாதன தர்மத்தை ஏற்றதாகச் சொல்பவர்களின் ஒழுக்கமும் ஒன்றா?

பிரம்ம சமாஜிகளுடன் விவாதம் நடக்கும்போது உருவ வழிபாட்டிலிருந்து அருவ வழிபாட்டிற்கு வாருங்கள் என்கிறார். வள்ளலார் சனாதன தர்மத்திற்கு முழுக்க முழுக்க எதிராக இருந்தவர். அதை முற்றிலுமாகப் புறக்கணித்தவர்,” என்கிறார் ப. சரவணன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.