பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக மூவர்ணக் கொடியில் ஜொலித்த நயாகரா நீர்வீழ்ச்சி !!
அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அரசு முறைப்பயணமா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று மூன்றாவது நாளாக அமெரிக்க பயணத்தில் உள்ளார். இந்நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்கப் பயணத்தில் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக அமெரிக்காவின் முக்கிய இடங்களில் மூவர்ணக் கொடி வண்ணங்களில் ஜொலிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மற்றும் கனடா நாட்டின் அந்தரியோ நகரின் எல்லையில் அமைந்துள்ள நயாகரா நீர்வீழ்ச்சியில் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக மூவர்ணக் கொடி வண்ண விளக்குகளால் ஜொலிக்கவிடப்பட்டுள்ளது.
நியூயார்க் நகர நீர்வீழ்ச்சியில் மட்டுமின்றி கனடா பகுதியிலிருந்தும் நயாகரா நீர்வீழ்ச்சியின் புகைப்படங்களை நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் பகிர்ந்துள்ளது. இதேபோல், நியூயார்க் நகரின் லோயர் மன்ஹாட்டனில் உள்ள ஒன் வேர்ல்ட் டிரேட் சென்டர் கட்டிடத்திலும் மூவர்ணக் கொடியின் வண்ணம் விளக்குகளால் ஜொலிக்கவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடமும் பிரதமர் மோடியை வரவேற்க மூவர்ணக் கொடியின் வண்ண விளக்குகளால் ஜொலித்தது. இவை இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புறவின் சாட்சியம் என்றும் இதற்கு ஏற்பாடு செய்த இந்திய பாரம்பரிய மற்றும் கலை கவுன்சிலுக்கு தூதரக ஜெனரல் டுவீட் மூலம் நன்றி தெரிவித்துள்ளது.