எதிர்க்கட்சிகளால் பிரதமர் மோடியை தோற்கடிக்க முடியாது: அமித்ஷா உறுதி!!
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, 2 நாள் பயணமாக நேற்று காஷ்மீருக்கு சென்றார். ஜம்முவில் பாகவதி நகர் பகுதியில், பா.ஜனதா பொதுக்கூட்டம் நடந்தது. ஜனசங்க நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜி நினைவுதினத்தையொட்டி, இக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில், அமித்ஷா கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- பாட்னாவில் ‘புகைப்பட படப்பிடிப்பு’ நடந்து வருகிறது. பிரதமர் மோடியை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் கைகோர்த்து வருகின்றன. நான் அவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். உங்களால் ஒற்றுமையாக இருக்க முடியாது. அப்படியே ஒற்றுமையாக இருந்தாலும், மோடியை தோற்கடிக்க முடியாது. 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில், பா.ஜனதா 300-க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும்.
மோடி மீண்டும் பிரதமராவார். காஷ்மீரை 3 குடும்பங்கள் சேர்ந்து பல்லாண்டுகள் ஆட்சி செய்தன. அப்போது, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு இருந்ததால், எந்த வளர்ச்சியும் நடக்கவில்லை. பயங்கரவாதத்தால் 42 ஆயிரம் பேர் பலியானார்கள். இருப்பினும், அந்த குடும்பத்தினர் 370-வது பிரிவை வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். நான், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவையும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபாவையும் கேட்கிறேன். பயங்கரவாதத்தால் 42 ஆயிரம் பேர் பலியானதற்கு யார் பொறுப்பேற்பது? காஷ்மீரில் ஜி-20 நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியதற்காக கவர்னர் மனோஜ் சின்கா மற்றும் பாதுகாப்பு படையினரை பாராட்டுகிறேன். அதில் பங்கேற்றவர்கள், தங்கள் நாடுகளுக்கு திரும்பி விட்டனர். அனுமதி பெறாமல் காஷ்மீரில் நுழைந்ததாக சியாம பிரசாத் முகர்ஜி, 1953-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் கொலை செய்யப்பட்டார்.
370-வது பிரிவு நீக்கத்தால் அவரது லட்சியம் நிறைவேறிவிட்டது. 370-வது பிரிவு நீக்கத்துக்கு பிந்தைய 47 மாத காலத்தில், காஷ்மீரில் 32 தாக்குதல் சம்பவங்கள்தான் நடந்தன. கல்வீச்சு சம்பவங்கள் 90 சதவீதம் குறைந்துள்ளன. கடந்த ஆண்டு, முதல் முறையாக 1 கோடியே 88 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்தது. மோடி ஆட்சிக்கு வந்தவுடன், ஊழல் மீதான பிடி இறுகியது. ஊழலற்ற இந்தியாவுக்கு மோடி வலிமையான அடித்தளம் அமைத்துள்ளார். அவரது 9 ஆண்டுகால ஆட்சியில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட கிடையாது. மோடி ஒரு திறந்த புத்தகம். பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கு காஷ்மீர் மக்கள் ஆதரவு தர வேண்டும். மோடியையும், ராகுல்காந்தியையும் ஒப்பிடவே முடியாது. ராகுல்காந்தி எல்லாவற்றையும் எதிர்த்துக்கொண்டிருப்பார். இவ்வாறு அவர் பேசினார்.