அமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும்- பிரதமர் மோடி அறிவிப்பு!!
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, வாஷிங்டனில், இந்திய வம்சாவளியினரை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் 2 அமெரிக்க வாழ் இந்தியர்கள், தொழில் அதிபர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ரொனால்ட் ரீகன் மையத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:- அமெரிக்காவுக்கான எனது அரசு முறை பயணத்தில் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த பல வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு முதல் விமானப் போக்குவரத்து, உற்பத்திக்கான பயன்பாட்டு பொருட்கள், தகவல் தொழில்நுட்பம், விண்வெளித்துறை உள்ளிட்டவற்றில் இந்தியாவும் அமெரிக்காவும் இப்போது மிகவும் நம்பகமான பங்காளிகளாக முன்னேறி வருகின்றன. இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான கூட்டாண்மை 21-ம் நூற்றாண்டில் உலகின் தலைவிதியை மாற்றும். இரு நாட்டு உறவு என்பது வசதிக்கான விஷயம் அல்ல. உலகத்தை சிறந்த இடமாக மாற்றுவதற்கான ஒரு நம்பிக்கை ஆகும். இந்த கூட்டாண்மை ஒரு சிறந்த உலகத்திற்கான பகிரப்பட்ட கருத்து ஆகும்.
இந்தியாவில் முதலீடு செய்ய அமெரிக்க வாழ் இந்திய தொழில் அதிபர்கள், வணிகர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். இன்று இந்தியா 125 பில்லியன் அமெரிக்க டாலர்களை உள்கட்டமைப்பு மேம்பாட்டில் முதலீடு செய்து சாதனை படைத்துள்ளது. உலகின் பிரதான முதலீட்டு இடமாக இந்தியா உள்ளது. நீங்கள் வேகமாக வளரும் நன்மையை பெற வேண்டிய நேரம் இதுவாகும். இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சிறந்த தருணம். உலகின் மிகவும் பழமையான மொழி தமிழ்மொழி. அமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் இந்திய அரசின் நிதி உதவியுடன் தமிழ் இருக்கை நிறுவப்படும். கூகுளின் செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையம் மூலம் இந்தியா, 100 மொழிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும்.
பெங்களூரு, அகமதாபாத்தில் புதிய அமெரிக்க தூதரகம் திறக்கப்படும். எச்1பி விசாவை அமெரிக்காவிலேயே புதுப்பித்து கொள்ளும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள 100-க்கும் மேற்பட்ட இந்தியாவின் பழங்கால பொருட்களை திரும்ப ஒப்படைக்க அமெரிக்க அரசு முடிவு செய்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக அமெரிக்க அரசுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.