தமிழ் நாட்டுக்கு அரிசி வழங்க மத்திய அரசு மறுப்பு!!
திறந்த வெளி சந்தை திட்டத்தின் கீழ் மத்திய தொகுப்பில் இருந்து மாநில அரசுகளுக்கு மலிவு விலையில் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கி வருகிறது. இந்த நிலையில் கூடுதலாக தங்களுக்கு 20 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி தேவைப்படுவதாக தமிழ் நாடு அரசு சார்பில் இந்திய உணவு கழகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதே போல கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களும் கோரிக்கை விடுத்து இருந்தது. கர்நாடகாவில் சமீபத்தில் தான் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பொதுமக்களுக்கு 10 கிலோ அரிசி இலவசமாக வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்காக 2.28 லட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவைப்படுவதாக கர்நாடக அரசு கோரிக்கை விடுத்து இருந்தது. இதே போல பல மாநிலங்களும் தங்களுக்கு கூடுதல் அரிசி தேவை என கோரி இருந்தது.
ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்து உள்ளது. பல மாநிலங்களுக்கு அரிசி விற்பனை செய்வதை மத்திய அரசு நிறுத்தி உள்ளது. இது தொடர்பாக இந்திய உணவு கழக நிர்வாக இயக்குனர் ஆஷிக் மீனா கூறும் போது, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் 80 கோடி மக்களுக்கு மலிவு விலையில் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. வெளிச்சந்தையில் அரிசி, கோதுமை போன்ற தானியங்களின் விலை அதிகரிக்காமல் இருக்கவும், பொதுமக்கள் தொடர்ந்து மலிவுவிலையில் அரிசி கிடைப்பதை உறுதி செய்யவும், விலை வாசி உயர்வை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார். மாநில அரசுகள் தேவைப்பட்டால் சந்தையில் இருந்து அரிசியை வாங்கி கொள்ளலாம் என கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உணவுத்துறை மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்து இருந்தார். அதன்படி அடுத்த மாதம் (ஜூலை) 5-ந்தேதி திறந்த மார்க்கெட் திட்டத்தின் மூலம் அரிசி விற்பனையை தொடங்க இருக்கிறது. இதற்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.3,100 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.