மணிப்பூரில் வன்முறை நீடிப்பு- மந்திரி வீடு, பா.ஜனதா அலுவலகத்துக்கு தீ வைப்பு!!
மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி இன பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை கடந்த 45 தினங்களுக்கும் மேலாக நீடிக்கிறது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு இருந்தும் அங்கு அமைதி நிலவவில்லை. கலவரம் நீடித்து வருகிறது. 120-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 300-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் மணிப்பூ ரில் மந்திரியின் வீடு மற்றும் பா.ஜனதா அலுவலகத்துக்கு மர்ம கும்பல் தீ வைத்தது. மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பொது சுகாதார பொறியியல் துறை, நுகர்வோர் மற்றும் உணவு விவகாரத் துறை மந்திரியாக இருப்பவர் சுசிந்த்ரோ. மைதேயி சமூகத்தை சேர்ந்த இவரது வீடு இம்பால் கிழக்கு பகுதியில் உள்ளது.
இவருக்கு சொந்தமான குடோனை நேற்று இரவு மர்ம கும்பல் தீ வைத்து கொளுத்தியது. அதோடு அவரது வீட்டுக்குள் ஒரு கும்பல் நுழைந்து கட்டிடத்துக்கும் தீ வைத்தது. பாதுகாப்பு படையினர் அங்கு வந்த மர்மகும்பலை கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலைத்தது. லேசாக எரிந்த தீயை அணைத்தனர். ஏற்கனவே பெண் மந்திரி வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டிருந்தது. இதே போல அங்குள்ள பா.ஜனதா அலுவலகத்துக்கும் மர்ம நபர்கள் தீ வைத்தனர். சம்பவ இடத்துக்கு பாதுகாப்பு படையினர் உடனே வந்து தீயை அணைத்து நிலைமையை கட்டுக்கு கொண்டு வந்தனர். மணிப்பூர் கலவரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள், கொள்ளை போன வழக்கு தொடர்பாக விசாரிக்க சி.பி.ஐ. குழு மணிப்பூர் போலீஸ் பயிற்சி கல்லூரிக்கு செல்ல முயன்றது. ஆனால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு திரண்டு நின்று அவர்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். பெண்களின் முற்றுகை போராட்டத்தால் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தொடங்க முடியாமல் ஏமாற்றத்துடன் அந்த பகுதியைவிட்டு சென்றனர். மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதிக்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். மாலை 3 மணியளவில் இந்த கூட்டம் நடக்கிறது.