சமுர்த்தி பயனாளிகளிடம் நிதி சேகரிக்க வேண்டாம். : அமைச்சர் டக்ளஸ் அதிகாரிகளுக்கு பணிப்பு!!
யாழ் மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி பயனாளிகளிடம் மது ஒழிப்பு, கொடி வாரம் என நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச செயல்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தொடர்பான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், சமுர்த்திப் பயனாளிகளிடம் கொடி வாரம் மது ஒழிப்பு வாரம் என ஒவ்வொரு வருடமும் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் இடம் பெறுவதாக முறைபாடுகள் கிடைத்துள்ளன.
சமுர்த்தி பயனாளிகளிடம் குறித்த விடயங்களுக்காக நிதி சேகரிக்கும் போது அதனை அவர்கள் வழங்காது விட்டால் சமுர்த்தி நிறுத்தப்படும் என்ற மன உணர்வு அவர்களுக்கு ஏற்படக்கூடும்.
இல்லாவிட்டால் நிதி சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் நிதி தராவிட்டால் சமுர்த்தி நிறுத்தப்படும் என்ற அச்சுறுத்தல்களை விடுவதற்கும் சந்தர்ப்பங்கள் உண்டு.
மேலும் யாழ் மாவட்டத்திலுள்ள சமுர்த்தி பயனாளிகள் தெரிவில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்ற நிலையில் சமுர்த்திப் பயனாளிகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.
ஆகவே இனி வரும் காலங்களில் சமுர்த்தி பயனாளிகளிடம் சமூக மட்ட நிகழ்வுகளுக்கான நிதிகளை சேகரிக்க வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன் (காணி) பிரதேச செயலாளர் யாழ் மாவட்ட சமுர்த்தி வங்கிகளின் முகாமையாளர்கள் உத்தியோத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.