;
Athirady Tamil News

வாக்னர் அமைப்பின் செயல் மிகப்பெரிய துரோகம் – அதிபர் புதின் ஆவேசம்!!

0

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. ரஷியாவால் உக்ரைனை சுலபமாக வெற்றி கொள்ள இயலவில்லை. போர் முடிவுக்கு வராமல் 15 மாதங்களுக்கும் மேலான நிலையில் தற்போது ரஷியா புது சிக்கலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அந்நாட்டின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோசின், ரஷிய நாட்டிற்கான தனியார் ராணுவ கூலிப்படை தலைவராக உக்ரைனுக்கு எதிராக, அவரது படையும் போரில் ஈடுபட்டு வந்தது. இதற்கிடையே, ரஷிய ராணுவத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ரஷியாவிற்கு எதிராக ஒரு பெரும் கிளர்ச்சிக்கு பிரிகோசின் அழைப்பு விடுத்திருக்கிறார். தற்போது ரஷியாவின் தெற்கில் உள்ள ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரில் உள்ள ரஷிய ராணுவ படைகள், தனது கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டதாக அவர் கூறியிருக்கிறார். இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் அறிவித்திருக்கும் ஆயுதமேந்திய கிளர்ச்சியிலிருந்து நாட்டையும் அதன் மக்களையும் பாதுகாப்போம். இந்தக் கலகம் எங்களுக்கு ஒரு கொடிய அச்சுறுத்தல்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக கடினமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கிளர்ச்சிக்கு காரணமானவர்கள் அனைவரும் தவிர்க்க முடியாத தண்டனையை அனுபவிப்பார்கள். ஆயுதப்படைகள் மற்றும் பிற அரசு நிறுவனங்களுக்கு தேவையான உத்தரவுகள் கிடைத்துள்ளன. இதுபோன்ற குற்றச் செயல்களில் பங்கேற்பதை நிறுத்துங்கள். மேற்கத்திய நாடுகளின் முழு ராணுவ, பொருளாதார மற்றும் தகவல் இயந்திரம் ரஷியாவிற்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. இந்தப் போரில் நமது மக்களின் தலைவிதி தீர்மானிக்கப்படும்போது, அனைத்து சக்திகளின் ஒருங்கிணைப்பு, ஒற்றுமை, பொறுப்பு ஆகியவை தேவை.

ரஷியா உக்ரைனில் தன் எதிர்காலத்திற்கான மிகக் கடினமான போரில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் கிளர்ச்சி என்பது கண்டிக்கத்தக்கதாகும். இதுபோன்ற நேரத்தில் ஆயுதமேந்திய கிளர்ச்சி என்பது ரஷ்யாவிற்கும், அதன் மக்களுக்கும் ஒரு அடி. ஒரு ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு சதி செய்து ஏற்பாடு செய்தவர்கள், தனது தோழர்களுக்கு எதிராக ஆயுதங்களை உயர்த்தியவர்கள், ரஷியாவைக் காட்டிக் கொடுத்துள்ளனர். அதற்கு அவர்கள் பதிலளிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.