திருப்பதி மலைப் பாதையில் 3 வயது சிறுவனை தாக்கிய சிறுத்தை பிடிபட்டது!!
திருப்பதி மலைப் பாதையில் 3 வயது சிறுவனை தாக்கிய சிறுத்தை நேற்று பிடிபட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், ஆதோனியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கடந்த வியாழக்கிழமை இரவு திருப்பதி அலிபிரி மலைப்பாதை வழியாக திருமலைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தனர். இரவு சுமார் 10 மணியளவில், 7-வது மைல் அருகே ஒரு சிறுத்தை சீறி வந்து, கவுசிக் (3) எனும் சிறுவனை கவ்விக்கொண்டு ஒரு புதருக்குள் ஓடியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர் கூச்சலிட்டு கத்தியபடியே சிறுத்தையின் பின்னால் ஓடினர். அங்கு காவல் பணியில் இருந்த தேவஸ்தான கண்காணிப்பு படையினரும் டார்ச் லைட் அடித்தபடி சிறுத்தையை பின் தொடர்ந்து ஓடினர். இதனால் சிறுவனை கீழே போட்டு விட்டு சிறுத்தை ஓடிவிட்டது.
காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவன், திருப்பதியில் உள்ள ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அச்சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு சென்று சிறுவனின் உடல்நலம் குறித்து விசாரித்தார். இதையடுத்து, மலைப்பாதையில் இருபுறமும் விரைவில் இரும்பு வேலி அமைக்கப்படும் என அவர் அறிவித்தார்.
சிறுவன் சிறுத்தையால் தாக்கப்பட்ட இடத்தை தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், “சிறுத்தை பிடிபடும் வரை, பக்தர்களுக்கு இரவு 10 மணி வரை மட்டுமே அலிபிரி மலைப்பாதையில் அனுமதி வழங்கப்படும்” என்றார்.
இதனிடையே சிறுவனை தாக்கிய சிறுத்தையை பிடிக்க சேஷாசலம் வனப்பகுதிகளில் 2 இடங்களில் கூண்டுகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் அந்த கூண்டு ஒன்றில் வெள்ளிக்கிழமை இரவு அந்த சிறுத்தை சிக்கியது. இதையடுத்து நேற்று காலை அந்த சிறுத்தையை வன அதிகாரிகள், திருப்பதி எஸ்.வி. வன விலங்கு பூங்காவிற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். தாய் சிறுத்தையை காணாததால் குட்டி சிறுத்தை மனிதர்கள் நடமாடும் பகுதிக்கு வந்து, சிறுவனை தாக்கியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். சிறுத்தை கூண்டில் சிக்கியதால் ஏழுமலையான் பக்தர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அவர்கள் பயமின்றி மலையேறிச் செல்கின்றனர்.