மாயமாக முயன்ற மரண தண்டனை கைதி கைது !!
மரணதண்டனை விதிக்கப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் தப்பிச் செல்ல முயன்ற வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமய வழிபாட்டு நிகழ்வுக்காக ஞாயிற்றுக்கிழமை (25) காலை வௌியே அழைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த கைதி தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரியின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்து கொண்டே சூட்சுமமான முறையில் தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
அவரது செயற்பாட்டில் சந்தேகம் கொண்ட சிறைச்சாலை அதிகாரிகள், அவரை பின்தொடர்ந்து சென்று, மருதானை ரயில் நிலையத்தில் ரயிலொன்றில் ஏறியிருந்த போது கைது செய்து, வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
கொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு கம்பஹா மேல் நீதிமன்றத்தில் 2015 ஆம் ஆண்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட பன்னல பகுதியைச் 42 வயதானவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் சிறைச்சாலை அத்தியட்சகரின் கீழ், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.