;
Athirady Tamil News

ஒவ்வொரு இந்தியர்களும் நாட்டின் ஹீரோக்கள்: எகிப்தில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு!!

0

பிரதமர் மோடி அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு எகிப்து நாட்டுக்கு சென்றார். எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல்சிசி அழைப்பின் பேரில் அரசு முறை பயணத்தை மேற்கொண்டார். நேற்று தலைநகர் கெய்ரோவுக்கு சென்ற பிரதமர் மோடியை எகிப்து பிரதமர் முஸ்தபா மட்புலி வரவேற்றார்.

பிரதமர் மோடி எகிப்தின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசினார். மிகப்பெரிய எகிப்திய நிறுவனங்களில் ஒன்றான ஹசன் ஆலம் ஹோல்டிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹசன் ஆலம் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமர் மோடியை யோகா பயிற்சியாளர்களான ரீம் ஜபக், நாடா அடெல் ஆகியோர் சந்தித்து பேசினர்.

அதேபோல் முக்கிய நிறுவன அதிகாரிகளையும் மோடி சந்தித்தார். எகிப்தின் தலைமை முப்தி ஷவ்கி இப்ராஹிம் அப்தெல், கரீம் அல்லாமையும் மோடி சந்தித்து பேசினார். இதற்கிடையே எகிப்து பிரதமர் முஸ்தபா மட்புலி மற்றும் உயர்மட்ட கேபினட் அமைச்சகர்களுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வர்த்தக உறவுகளை ஆழப்படுத்துவது, இரு நாட்டு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினர்.

பின்னர் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். ரிட்ஸ் கார்ல்டன் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய தேசிய கொடியை அசைத்து மோடியை பார்த்து வந்தே மாதரம் கோஷங்களை எழுப்பினர். ஜெனா என்ற எகிப்தியப் பெண், சேலை அணிந்து வந்திருந்தார். அவர் ஷோலே இந்தி திரைப்படத்தின் பிரபல பாடலை மோடியிடம் பாடி காட்டினார்.

அப்போது அப்பெண்ணிடம் மோடி, நீங்கள் எகிப்தின் மகளா அல்லது இந்தியாவின் மகளா என்பதை யாராலும் சொல்ல முடியாது என்றார். பின்னர் இந்தியாவை சேர்ந்த தாவூதி போரா சமூகத்தினர் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது ஒருவர் மோடியிடம், நீங்கள் இந்தியாவின் ஹீரோ என்று பாராட்டினார். இதற்கு மோடி கூறும்போது, இந்தியா முழுவதும் அனைவரும் ஹீரோக்கள்தான்.

நாட்டு மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள். இதனால் தேசம் முன்னேறுகிறது. இது உங்கள் கடின உழைப்பின் பலன் என்றார். இந்த நிகழ்ச்சி தொடர்பாக மோடி டுவிட்டரில் கூறும்போது, எகிப்தில் உள்ள புலம் பெயர்ந்த இந்தியர்களின் அன்பான வரவேற்பால் மகிழ்ச்சி அடைந்தேன்.

அவர்களின் ஆதரவும், பாசமும் நம் தேசங்களின் காலத்தால் அழியாத பிணைப்பை உண்மையாகவே உணர்த்துகின்றன. எகிப்தியர்கள் இந்திய ஆடைகளை அணிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. உண்மையாகவே இது நமது பகிரப்பட்ட கலாச்சார இணைப்புகளின் கொண்டாட்டம் என்றார். பிரதமர் மோடி இன்று எகிப்து அதிபர் அப்தெல் பட்டாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.