;
Athirady Tamil News

புதினுக்கு எதிராக தொடங்கிய வேகத்தில் முடிவுக்கு வந்த ‘வாக்னர்’ கிளர்ச்சி – 24 மணி நேரத்தில் நடந்தது என்ன? !!

0

நீண்ட காலமாக நடைபெற்று வரும் யுக்ரேன் – ரஷ்யா போரில், ரஷ்யாவிற்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த ’வாக்னர் கூலிப்படை’ திடீரென அந்நாட்டுக்கு எதிராகவே திரும்பியது, உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

யுக்ரேனிலிருந்து ரஷ்யாவிற்குள் நுழைந்த இவர்கள், தலைநகர் மாஸ்கோவை நோக்கி அணிவகுக்கப் போவதாக அறிவித்தனர்.

வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஜின், ”இது ஆட்சிக்கவிழ்ப்புக்கான ராணுவ சதி அல்ல, இது நீதிக்கான அணிவகுப்பு” என்று அறிவித்தார்.

சனியன்று காலை மாஸ்கோவை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த வாக்னர் படையினர், அன்று இரவே தங்களது அணிவகுப்பை நிறுத்தியுள்ளனர். ப்ரிகோஜின் தனது படையினரைப் பின்வாங்குமாறு உத்தரவிட்டார்.

அதிபர் புதினுடன், வாக்னர் படைத்தலைவர் ப்ரிகோஜின் சமாதான பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்களுடைய அணிவகுப்பைக் கிளர்ச்சி என்று அறிவித்து, மாஸ்கோவை நோக்கி முன்னேறி வந்த வாக்னர் படையினர், திடீரென பின் வாங்கியது ஏன்? கடந்த 24 மணி

வாக்னர் கூலிப்படை, தன்னை ஒரு ‘தனியார் ராணுவ நிறுவனம்’ என விவரிக்கிறது.

இந்த படையில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் இருக்கிறார்கள்.

வாக்னர் குழு அதிகாரப்பூர்வமாக பிஎம்சி வாக்னர் (PMC WAGNER) என்று அழைக்கப்படுகிறது.

வாக்னர் குழு குறித்து பிபிசி மேற்கொண்ட விசாரணையில், ரஷ்யாவின் முன்னாள் ராணுவ அதிகாரி டிமிட்ரி உட்கினுக்கு, வாக்னர் குழு உருவாகியதில் முக்கிய பங்கு இருப்பது தெரியவந்தது.

செச்சினியாவில் நடைபெற்ற ரஷ்யப் போரில், வாக்னர் குழுவும் பங்காற்றியது. இதில் ரஷ்யாவின் முன்னாள் ராணுவ அதிகாரியான டிமிட்ரி உட்கின்தான் ’வாக்னர் படையின் முதல் களத் தளபதியாக’ நின்று செயலாற்றினார் எனக் கூறப்படுகிறது.

தற்போது வாக்னர் குழுவின் தலைவராக யெவ்கெனி ப்ரிகோஜின் இருக்கிறார். இவர் ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் சமையல் ஒப்பந்தங்களைப் பெற்றதன் மூலம் ‘புதினின் சமையல்காரர்’ என்று வர்ணிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் கூலிப்படைகள் சட்டவிரோதமாகக் கருதப்படுகின்றன. ஆனாலும் வாக்னர் குழுமம் கடந்த 2022ஆம் ஆண்டு தன்னை ஒரு தனியார் நிறுவனமாக பதிவு செய்துகொண்டது. செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் புதிய தலைமையகத்தையும் திறந்தது.

தங்களை தனியார் ராணுவ நிறுவனம் என்று கூறி வரும் வாக்னர் படையினரை, ரஷ்ய அரசாங்கம் சமீபகாலமாகக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

ரஷ்யாவில் உள்ள அனைத்து தனியார் படைகளும் வரும் ஜூலை 1 ஆம் தேதிக்குள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் வர ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று இந்த மாத தொடக்கத்தில் அதிபர் புதின் கூறியிருந்தார். பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவின் இந்த நடவடிக்கைக்கு அதிபர் புதின் ஆதரவளித்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதத்தில், தன்னுடைய வாக்னர் குழு இந்த ஒப்பந்தங்களைப் புறக்கணிக்கும் என்று ஆவேசமாக அறிவித்தார் யெவ்கெனி ப்ரிகோஜின்.

இந்த விவகாரத்தில் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் ஷோய்கு மீது, வாக்னர் கூலிப்படையின் தலைவர் ப்ரிகோஜின் நீண்டகாலமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் ஷோய்கு மற்றும் யுக்ரேனில் உள்ள இராணுவத் தலைவர் வலேரி ஜெராசிமோவ் ஆகியோர் திறமையற்றவர்களாக இருக்கிறார்கள் என்று கூறும் பிரிகோஜின், அவர்கள் யுக்ரேனில் சண்டையிடும் வாக்னர் பிரிவுகளை வேண்டுமென்றே குறைவாக பேசுவதாக குற்றம் சாட்டி வருகிறார்.

அதேபோல் சமீப காலங்களில் ரஷ்யாவின் பிற ராணுவ தலைமைகளுடனும் ப்ரிகோஜினுக்கு மோதல் போக்கு அதிகரித்துக் காணப்படுகிறது.

குறிப்பாக கிழக்கு யுக்ரேனில் பாக்முத் பகுதியை கைப்பற்றும் முயற்சியின்போது, வாக்னர் படையைச் சேர்ந்த போராளிகள் அதிக எண்ணிக்கையில் இறந்தனர். இந்த மோசமான நிகழ்வுக்கு ரஷ்ய ராணுவத்தின் உயர் நிலையில் உள்ள அதிகாரிகள் தான் காரணம் என்று யெவ்கெனி ப்ரிகோஜின் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக சமூக ஊடகங்களில் அப்போது அவர் வீடியோவும் வெளியிட்டிருந்தார். அப்போதிலிருந்து அவருக்கும், ரஷ்ய ராணுவ தலைமைக்கு இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. இன்று அது கிளர்ச்சியாக உருவெடுத்துள்ளது.

ரஷ்ய அதிபர் புதினின் நீண்டகால கூட்டாளியாகக் கருதப்படும் ப்ரிகோஜின், அவரது ஆதரவின் கீழ்தான் வாக்னர் கூலிப்படையின் தலைவராக வளர்ந்தார். தற்போது அவரே ரஷ்ய ராணுவத்திற்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்வை கிளப்பியுள்ளது.

கிளர்ச்சி எப்போது துவங்கியது?

கடந்த ஜூன் 23ஆம் தேதி, கிழக்கு யுக்ரேனிலிருந்து ரஷ்யாவிற்குள் வாக்னர் படையினர் நுழைய துவங்கினர்.

அப்போது வீடியோ ஒன்றை வெளியிட்ட ப்ரிகோஜின், “யுக்ரேன் மீது நடத்தப்படும் போர்களுக்கு, அதிபர் புதின் கூறும் காரணங்கள் நியாயமற்றது” என்று கூறினார்.

அதனை தொடர்ந்து டெலிகிராமில், அவர் தொடர்ச்சியாக பல ஆடியோ பதிவுகளை வெளியிட்டார்.

அதில், “ரஷ்ய ராணுவ படையினரால் நிகழ்த்தப்பட்டு வரும் தீமைகள் நிறுத்தப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.

மேலும், “இது ஆட்சிக் கவிழ்ப்புக்கான ராணுவ சதி அல்ல, இது நீதிக்கான அணிவகுப்பு” என்றும் யெவ்கெனி ப்ரிகோஜின் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் என்ன நடந்தது?

தொடர்ந்து முன்னேறிய வாக்னர் படையினர், சனிக்கிழமையன்று ரஷ்யாவின் முக்கிய நகரான ரோஸ்டோவ்-ஆன் – டானுக்குள் புகுந்து, அங்குள்ள ரஷ்யாவின் தெற்கு பிராந்திய ராணுவ தலைமை அலுவலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். மேலும் அந்நகரின் மொத்த கட்டுப்பாட்டையும் தங்களுக்கு கீழ் எடுத்துக்கொண்டனர்.

இதற்கிடையில் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் தன்னைச் சந்திக்காவிட்டால் மாஸ்கோ நோக்கி அணிவகுத்துச் செல்லப் போவதாக வாக்னர் குழுவின் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஜின் வெள்ளியன்று எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் மாஸ்கோ நகரில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன.

வாக்னர் படையினரின் இந்த செயலை ரஷ்ய அதிபர் கடுமையாக விமர்சித்தார்.

வாக்னர் படையினரின் இந்த நடவடிக்கையை, ‘முதுகில் குத்தும் செயல்’ என்று புதின் சாடியிருந்தார்.

மேலும் ”துரோகப் பாதையில் இறங்கி தீவிரவாதத்தை கையில் எடுத்தவர்கள், நிச்சயம் தண்டனையை அனுபவிப்பார்கள்” என்றும் அவர் கூறியிருந்தார்.

ஆனால் தங்களது இந்த நடவடிக்கையை, ராணுவத்துக்கு எதிரான சதி அல்லது புரட்சி என்று கூறுவது அபத்தமானது என்று மறுப்பு தெரிவித்திருந்தார் ப்ரிகோஜின்.

“யுக்ரேன் போரில் தங்களின் கூலிப்படைக்கு தேவையான ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்டவற்றை வழங்க ராணுவம் தவறியதால் தான் தற்போது தலைநகரை நோக்கி அணிவகுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தங்களை இப்படியொரு இக்கட்டான நிலைக்கு தள்ளிய நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான செர்ஜி ஷோய்கு, ஆயுதப் படைகளின் தலைவரான வலேரி ஜெராசிமோவ் ஆகியோர் எங்களின் சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது” என்று ப்ரிகோஜின் கூறியிருந்தார்.

‘யுக்ரேனுடன் போரில் ஈடுபடுவதற்கு ரஷ்யா கூறும் காரணங்கள் நியாயமற்றது’ என்று ப்ரிகோஜின் குறிப்பிட்டு பேசியதும் இந்த விவகாரத்தில் சர்ச்சையைக் கிளப்பியது.

இதனை தொடர்ந்து அவர்களது நடவடிக்கையை ‘கிளர்ச்சி’ எனப் பிரகடனப்படுத்தி, வாக்னர் படையினர் மாஸ்கோவை நோக்கி அணிவகுத்து முன்னேறினர்.

வோரோனேஸ் நகரை உள்ளடக்கிய பரந்து விரிந்த வோரோனேஸ் ஓப்ளாஸ்ட் பிராந்தியத்தின் வழியே அப்படையினர் மாஸ்கோ நோக்கிச் செல்வதாகக் கூறப்பட்டது.இந்த நகரம் மாஸ்கோவில் இருந்து 482 கி.மீ. தூரத்தில் தெற்கே அமைந்திருக்கிறது.

வாக்னர் படையினரின் இந்த திடீர் செயலால் ரஷ்யா முழுவதும் பதற்றம் அதிகரித்தது.

மாஸ்கோவை நோக்கி முன்னேறி கொண்டிருந்த வாக்னர் படையினர், சனியன்று இரவு தங்களது அணிவகுப்பை நிறுத்தினர்.

அணிவகுப்பை நிறுத்துமாறு யெவ்கெனி ப்ரிகோஜின் தனது படையினருக்கு உத்தரவிட்டார். மேலும் வாக்னர் படையினருடன் அவர் தங்களுடைய தளத்திற்கு திரும்பினார்.

”பெலாரூஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, வாக்னர் படை தலைவர் யெக்வெனி ப்ரிகோஜினுடன் பேசினார். அதற்குப் பிறகு ப்ரிகோஜின் தனது தளத்திற்கு திரும்பியுள்ளார்” என ரஷ்யா 24 செய்திச் சேனலின் தகவல்கள் கூறுகின்றன.

அந்த பேச்சுவார்த்தைக்கு பிறகே ப்ரிகோஜின் அணிவகுப்பை நிறுத்தினார் எனவும், ரஷ்யாவின் நிலைமை மேலும் மோசமடையாமல் தடுப்பதற்கு அவர் ஒப்புக்கொண்டார் எனவும் ரஷ்யா 24 செய்தி சேனலின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தி சேனலின் தகவலின்படி, புதினும் இந்தத் தீர்வுக்கு ஒப்புக்கொண்டதாக தெரிய வருகிறது.

புதினின் நெருங்கிய கூட்டாளியாக பெலாரூஸின் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ கருதப்படுகிறார். புதினின் சம்மதத்துடன் இந்த பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில், ப்ரிகோஜின் பெலாரூஸ் செல்ல அனுமதிக்கப்பட்டார். மேலும், அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் கைவிடுவதாக ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.

அதேபோல் வாக்னர் குழுவின் தலைவருக்கு எதிரான வழக்கை கைவிட கிரெம்ளின் ஒப்புக்கொண்டது. மேலும் வாக்னர் படையின் வீரர்களுடைய பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்ட மற்ற ஒப்பந்தங்கள் குறித்து தெளிவான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

ஆனால் தற்போது ரஷ்யாவில் கிளம்பிய இந்த கிளர்ச்சி, அதிபர் புதினுக்கு அபாயகரமான சமிஞ்கைளையே காட்டுகிறது என சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

யுக்ரேன் – ரஷ்யா இடையிலான போரில், ரஷ்யாவுக்கு ஆதரவாக நீண்ட காலமாக களத்தில் நின்று ‘வாக்னர் படை’ துணைபுரிகிறது.

குறிப்பாக யுக்ரேனின் ’பாக்முத்’ என்ற நகரை கைபற்றுவதற்கு நடைபெற்ற போரில், வாக்னர் படையினர் பெரும் பங்கு வகித்தனர்.

2014ஆம் ஆண்டு கிழக்கு யுக்ரேனில், இந்த குழு ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தபோதுதான், வாக்னர் குழு குறித்த தகவல்கள் முதன்முதலாக வெளியுலகிற்கு தெரியவந்தன.

அதற்கு முன்பு வரை, இந்த குழு ஒரு ரகசிய அமைப்பாக இயங்கி வந்தது. பெரும்பாலும் ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில்தான் இந்த குழுவின் இயக்கம் இருந்துள்ளது. அப்போது இந்த குழுவில் வெறும் 5,000 வீரர்கள் மட்டுமே இருந்ததாக கருதப்பட்டது.

ஆனால் அதன்பின் இந்த குழுவினரின் எண்ணிக்கை கணிசமாக உயர தொடங்கியது.

அதேபோல் வாக்னர் ராணுவ துருப்புகளில் உள்ள 80% வீரர்கள், சிறையிலிருந்து வந்தவர்கள் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் இந்தாண்டு துவக்கத்தில் கூறியிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.