ஆங்கிலேயருக்கு கூலிப்படையாக செயல்பட்ட ‘நிர்வாண’ சாமியார் – இந்தியாவை அடிமையாக்க உதவியது எப்படி?!!
இந்துக் கடவுளான சிவனிடம் பக்தி கொண்ட துறவியாகவோ, இந்தியாவில் புனித மனிதர்களாக மதிக்கப்படும் நாக சாதுக்களில் ஒருவராகவோ திகழ்ந்த அனுப்கிரி கோசன், போர்ப் படை தளபதியாகவும் விளங்கிய வரலாறு உள்ளது.
துறவி என்பதை விட பயமுறுத்தும் போர்ப் படை தளபதியாகவே அவர் சித்தரிக்கப்படுகிறார். நிர்வாண போர் வீரர்களை கொண்ட தனியார் ராணுவத்தை அல்லது கூலிப்படையை போருக்கு அவர் வழிநடத்தி உள்ளார்.
சடைமுடியுடன் சாம்பல் பூசப்பட்ட உடலுடன் தோற்றமளிக்கும் இந்த நிர்வாண சாமியார்களை உலகின் மிகப்பெரிய மத விழாவான கும்பமேளாவில் காணலாம். இந்த துறவிகள் ‘கோசைன்’ எனும் பொதுச் சொல்லால் அழைக்கப்படுகின்றனர்.
அமெரிக்காவின் கனெக்டிகட்டில் உள்ள வெஸ்லியன் பல்கலைக்கழக வரலாற்று ஆசிரியரும், வாரியர் அசெட்டிக்ஸ் மற்றும் இந்தியன் எம்பயர்ஸ் ( Warrior Ascetics and Indian Empires) என்று நூலின் ஆசிரியருமான வில்லியம் ஆர் பிஞ்ச், அனுப்கிரி கோசைனை “போர் செய்யும் வீர துறவி” என்று குறிப்பிட்டுள்ளார்.
‘பயங்கரமானவர்கள் மற்றும் கட்டுக்கடங்காதவர்கள்’ என்ற பெயரை நாகர்கள் கொண்டிருந்ததே, கோசன்களை பிஞ்ச் இவ்வாறு கூற முக்கிய காரணம். அத்துடன் 18 ஆம் நூற்றாண்டில், சிறந்த காலாட்படை மற்றும் குதிரைப்படை துருப்புகளாக திகழ்ந்த நாகர்கள், ஆயுதங்கள் ஏந்துவதில் வல்லவர்களாகவும், ஒழுக்க சீலர்களாகவும் விளங்கினர்” என்று பிஞ்ச் தமது நூலில் குறிப்பிடுகிறார்.
கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரியான ஜேம்ஸ் ஸ்கின்னர். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு நாகா சிப்பாயின் உருவப்படத்தை வரைந்தார். நிர்வாண கோலத்துடன் தோலால் செய்யப்பட்ட பட்டையை (பெல்ட்) அணிந்திருந்த ஒரு மனிதனை அந்த படம் வெளிப்படுத்தியது. அவரது தலையைச் சுற்றி காணப்பட்ட காயங்கள், ஓர் பாதுகாப்பு கவசத்தை ஒத்திருந்தது. அத்துடன் அவரது இடது கரத்தில் துப்பாக்கி போன்றதொரு ஆயுதத்தை ஏந்தியிருந்த நாகரின் நெற்றியில் திலகமும் மிளர்ந்தது. இவ்வாறாக நாகரின் உருவத்தை ஜேம்ஸ் ஸ்கின்னர் சித்தரித்திருந்தார்.
“எதிரிகளுக்கு கடும் சவாலாக விளங்கும் அளவுக்கு போரில் கைத்தேர்ந்தவர்கள் என்ற நற்பெயரை நாக சாதுக்கள் பெற்றிருந்தனர். போர் புரியும் வீர துறவியான அனுப்கிரியின் கீழ் சாதுக்கள் முழு அளவிலான காலாட்படை மற்றும் குதிரைப்படை வீரர்களாக வளர்ந்திருந்தனர்” என்று பிஞ்ச் குறிப்பிடுகிறார்.
20 ஆயிரம் போர் வீரர்களை வழிநடத்திய சாது
1700 களின் பிற்பகுதியில், அனுப்கிரி மற்றும் அவரது சகோதரர் உம்ரோகிரி 20 ஆயிரம் வீரர்களை வழி நடத்தும் அளவுக்கு திறமைமிக்க தளபதிகளாக திகழ்ந்தனர். 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பீரங்கி மற்றும் ராக்கெட்டுகளை ஏந்திச் செல்லும் அளவுக்கு வீர துறவிகளின் எண்ணிக்கை வியக்கத்தக்க வகையில் அதிகரித்தது.
அனுப்கிரியை ‘ நாகர் சாதுக்கள் பயங்கரமான தளபதி’ என்று வர்ணித்த வரலாற்று ஆசிரியரான வில்லியம் டால்ரிம்பிள், அவரது தைரியத்தை போற்றும் வகையில், ‘ஹிம்மத் பகதூர்’ எனும் முகலாய பட்டம் அனுப்கிரிக்கு வழங்கப்பட்டது என்றும் குறிப்பிடுகிறார்.
அனுப்கிரி போன்ற போர் செய்யும் வீர துறவிகளின் பின்னணியில், கிழக்கிந்திய நிறுவனம், இந்தியா முழுவதும் எப்படி தனது ஆதிக்கத்தை செலுத்தியது என்பது குறித்து டால்ரிம்பிள் விவரித்துள்ளார்.
முகலாய தளபதியான மிர்ஸா நஜாப் கான் தலைமையிலான படை, பல்வேறு விதமான வீரர்களுடன் எப இணைந்து எப்படி போர் புரிந்தது என்பது பற்றியும் டால்ரிம்பிள் எழுதி உள்ளார்.
போர் குணம் படைத்த நாகாக்களை கொண்ட 6,000 நிர்வாண வீரர்கள் மற்றும் 40 பீரங்கிகளை கொண்ட படை அவர்களின் தளபதியான அனுப்கிரி தலைமையில் போர்களில் அணி திரண்டது என்று அவர் குறிப்பிடுகிறார்.
அத்துடன், போர் புரியும் திறனை பெற்ற துறவிகள் 10 ஆயிரம் பேரை கொண்ட குதிரைப்படை மற்றும் காலாட்படை, ஐந்து பீரங்கிகள், ஏராளமான காளை வண்டிகளுடன், போர்ப் படை தளபதியான அனுப்கிரி பல்வேறு போர்களில் தமது பங்களிப்பை அளித்துள்ளார் என்பதற்கான குறிப்புகளும் உள்ளன. அப்போதே அவர் வசம் 12 லட்சம் ரூபாய் (2019 இல் கிட்டத்தட்ட 16 மில்லியன் டாலர்) இருந்தது என்பது அக்குறிப்புகளில் உள்ள கூடுதல் தகவல்.
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மிகவும் வெற்றிகரமான ராணுவ தொழில் முனைவோர் அல்லது கூலிப்படையின் தளபதி என்று அனுப்கிரி விவரிக்கப்படுகிறார். அரசர்களால் பணியமர்த்தப்பட்ட அனைத்து தனியார் படைகளும் அந்த காலத்தில் கூலிப்படைகளாக கருதப்பட்டன என்பதால், அனுப்கிரி குறித்த இந்த வரையறை பொருத்தமானதாக இருக்கும் என்கின்றனர் வரலாற்று அறிஞர்கள்.
“வீரமிக்க ஓர் போர் துறவி எங்கும் நிறைந்திருப்பதில் ஆச்சரியம் எதுவும் இருக்க முடியாது எனக் கூறும் வரலாற்று ஆசிரியரான பிஞ்ச், அப்படிதான் அனுப்கிரி என்ற பெயர் எங்கும் பரவி இருந்ததாகவும், அவர் எல்லோருக்கும் தேவைப்படும் நபராகவும் இருந்தார்” என்றும் அவர் வர்ணித்துள்ளார்.
ஆனால், “எல்லோருக்கும் தேவைப்படும் நபராக இருப்பதை வெறுத்தவராக அனுப்கிரி இருந்தார். மாறாக, போருக்கு துருப்புகள் தேவைப்படும் நபர்களுக்கு காதும், காது வைத்தாற்போல் அவர்களின் தேவைகளை கச்சிதமாக நிறைவேற்றும் நபராக அவர் திகழ்ந்தார்” என்றும் குறிப்பிடுகிறார் பிஞ்ச்.
அனுப்கிரி சண்டை செய்த போர்கள்
திறமைமிக்க போர் வீரராக திகழ்ந்த அனுப்கிரி பல்வேறு போர்களில் பங்கேற்றார். 1761 இல் நடைபெற்ற பானிபட் போரில் மராத்தியர்களுக்கு எதிராக முகலாய பேரரசர் மற்றும் ஆஃப்கானியர்களின் பக்கம் நின்று போர் புரிந்தார். அதன்பின் மூன்றாண்டுகளுக்கு பிறகு ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெற்ற பாக்சர் போரில், முகலாய படையினருக்கு ஆதரவாக அவர் போரில் பங்கேற்றார். பாரசீக வீரரான நஜாப் கான் டெல்லியில் எழுச்சிப் பெற்றதிலும் அனுப்கிரி தலைமையிலான படை முக்கிய பங்காற்றியது.
பின்னர் அவர் மராட்டியர்களுக்கு புறமுதுகை காட்டி. ஆங்கிலேயருடன் கூட்டுச் சேர்ந்தார். 1803 இல் அவரது வாழ்க்கையின் முடிவில், மராட்டியர்களை வீழ்த்த ஆங்கிலேயர்களுக்கு உதவினார். மேலும், ஆங்கிலேயர்கள் டெல்லியை கைப்பற்றுவதிலும் அனுப்கிரி முக்கிய பங்காற்றினார். இந்த வெற்றி உலக அளவில் மற்றும் தெற்காசியாவில் ஆங்கிலேயர்கள் முதன்மையான அதிகாரம் செலுத்தும் நிலைக்கு கிழக்கிந்திய நிறுவனத்தை கொண்டு சென்றது என்கிறார் பிஞ்ச்.
“ 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முகலாயர் மற்றும் மராட்டியர்களின் வீழ்ச்சியைக் குறிக்கும் நிகழ்வுகளையும். அவற்றின் தொடர்ச்சியாக பிரிட்டிஷ் அதிகாரத்தின் எழுச்சியையும் எந்த அளவுக்கு ஒருவர் ஆராய்கிறாரோ, அந்த அளவுக்கு இந்த வீழ்ச்சிகள், எழுச்சிகளின் பின்னணியில் அனுப்கிரி கோசைனின் பங்களிப்பு இருந்திருப்பதை உணரலாம்” என்றும் கூறினார் பிஞ்ச்.
இந்தியாவில் உள்ள மதப் பிரிவுகளை விவரிக்கும் 19 ஆம் நூற்றாண்டின் கையெழுத்துப் பிரதியில் இருக்கும் ஒரு ஓவியத்தில் நாகா பிரிவைச் சேர்ந்த ஒரு நபர்
பிறப்பு, வளர்ப்பு
வட இந்தியாவில் ராஜாங்க ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாகாணமாக திகழ்ந்த புந்தேல்கண்டில் 1734 இல் அனுப்கிரி பிறந்தார். தந்தையின் மரணத்திற்கு பிறகு அவரும், அவரின் சகோதரரும் ஏழ்மையின் காரணமாக அவர்களின் தாயால் ஓர் போர் படை தளபதியிடம் ஒப்படைக்கப்பட்டனர். அனுப்கிரி தனது குழந்தை பருவத்தை களிமண்ணால் செய்யப்பட்ட வீரர்களுடன் விளையாடிக் கழித்ததாக கதைகள் உள்ளன. ஒருவேளை அவை கட்டுக்கதைகளாக இருக்கலாம்.
16 ஆம் நூற்றாண்டில் முஸ்லிம்களின் தாக்குதல்களைத் தடுக்க அனுப்கிரி போன்றவர்களுக்கு ஆயுதம் ஏந்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக செவி வழி தகவல்கள் உள்ளன.
ஆனால் வரலாற்று ஆசிரியரான பிஞ்சின் கூற்றுப்படி, அனுப்கிரி முகலாய பேரரசர் ஷா ஆலம் உள்ளிட்ட முஸ்லிம் முதலாளிகளுக்கு சேவை புரிந்துள்ளார். 1761 இல் நடைபெற்ற பானிபட் போரில் மராட்டியர்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மன்னர் அகமது ஷா அப்தாலியின் பக்கம் நின்று அவர் போரிட்டார். அவரது வாழ்க்கையைக் கொண்டாடும் கவிதைகள், அவரின் பரிவாரங்களில் இருந்த முஸ்லிம்களை பற்றி பேசுகின்றன.
“அனுப்கிரியின் மேதைத்தனம் அவரது இன்றியமையாத தன்மையை ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்களுடன் இணைத்துக் கொள்ளும் அவரின் திறனில் அடங்கியுள்ளது” என்கிறார் பிஞ்ச். “அவர் ஒன்றும் ராஜ வம்சத்தில் பிறந்தவர் அல்ல. ஆனால் எப்படி போரிட வேண்டும், எப்போது களத்தில் இருந்து தப்பி ஓட வேண்டும் என்பன போன்ற போர் உத்திகளை நன்கு அறிந்தவராக இருந்தார்.
அதேபோன்று எதிரிகளையும், கூட்டாளிகளையும் எப்படி நம்ப வைப்பது என்ற வித்தையையும் அவர் அறிந்திருந்தார்.
மரணத்தை வென்ற மாமனிதர்களான சன்னியாசிகளின் உலகத்தில், அனுப்கிரி போன்றவர்கள் ஆயுதம் ஏந்தி வலம் வந்து கொண்டிருந்தனர்” என்று கூறியுள்ளார் வரலாற்று ஆசிரியரான பிஞ்ச். போர்க்களத்தில் பேரரசருக்கு உத்தரவிட்ட அனுப்கிரி
வங்காளம் மற்றும் பிஹார் மீது பிரிட்டிஷ் தன் அதிகாரத்தை உறுதிப்படுத்த காரணமான பாக்சர் போரின்போது, அனுப்கிரியின் தொடையில் காயம் ஏற்பட்டது. அப்போது அவர் முகலாய பேரரசர் ஷுஜா -உத்-தௌலாவை போர்க்களத்தில் இருந்த தப்பித்துச் செல்ல வற்புறுத்தினார்.
“இது ஒரு லாபமற்ற மரணத்திற்கான தருணம் அல்ல; நாம் மற்றொரு நாள் போரில் எளிதாக வென்று அவர்களை பழி வாங்குவோம்” என்று போர்க்களத்தில் முகலாய பேரரசரையே அனுப்கிரி அறிவுறுத்தியதை வியந்து கூறுகிறார் வரலாற்று ஆசிரியரான டால்ரிம்பிள். அதேபோன்று ஆற்றின் குறுக்கே படகில் பயணித்து அவர்கள் தப்பித்தனர். மற்றொரு நாளில் போரிட வசதியாக உயிர் பிழைத்தார் போர் புரியும் வீர துறவியான அனுப்கிரி.