தாவூத் கூட்டாளியான பாகிஸ்தான் கடத்தல்காரர் ஹாஜி சலீம் எல்டிடிஇ அமைப்பை புதுப்பிக்க முயற்சி!!
இந்திய பெருங்கடல் பகுதியில், போதைப் பொருள் கடத்தி வந்த கப்பலை இந்திய கடற்படை மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் (என்சிபி) சமீபத்தில் இடைமறித்து சோதனை செய்தனர். அதில் 2,500 கிலோ மெதம்படமைன் என்ற போதைப் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.12,000 கோடி. ஈரான், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் வழியாக இந்த போதைப் பொருள் கடத்தி வரப்பட்டு பலுசிஸ்தானின் மக்ரான் கடற்கரையில் இருந்து இந்த போதைப் பொருள் அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கையிலும், இந்தியாவிலும் எல்டிடிஇ அமைப்பை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக 13 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கடந்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் இலங்கையைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல், பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாஜி சலீம் என்பவரிடம் இருந்து போதைப் பொருள் வாங்குவதாக குற்றம் சாட்டியிருந்தது.
குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவினர் பாகிஸ்தான் படகு ஒன்றை சமீபத்தில் இடைமறித்து 40 கிலோ ஹெராயின் மற்றும் கைத்துப்பாக்கிகளை கைப்பற்றினர். இச்சம்பவத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் குற்றப் பத்திரிகையிலும் ஹாஜி சலீம் பெயர் இடம் பெற்றிருந்தது.
போதைப் பொருள் ரகசிய வியாபாரத்தை கவனிக்க ஹாஜி சலீம் பல்வேறு வாட்ஸ் அப் எண்களை பயன்படுத்தி இருக்கிறார்.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் லஷ்கர்-இ-தொய்பா ஆகியவற்றுடன் இணைந்து இந்தியா, இலங்கை, மாலத்தீவு மற்றும் சில மத்திய கிழக்கு நாடுகளில் போதைப் பொருள் வியாபாரத்தில் சலீம் ஈடுபடுவதாக, கடந்த ஏப்ரல் மாதமே ஊடகங்களில் தகவல் வெளியானது. சலீமுக்கு சொந்தமாக பலுசிஸ்தான் பகுதியில் ரகசிய ஆய்வகங்கள் உள்ளன. இந்தியாவுக்கு கடத்தி வரப்படும் போதைப் பொருட்கள் பின்னணியில் சலீம் கும்பல் செயல்படுகிறது.
கடந்த 90-ம் ஆண்டுகளில் தாவூத் கும்பல் இதுபோல் போதைப் பொருட்களை இந்தியாவுக்கு கடத்தும் தொழிலில் ஈடுபட்டது. அதை இந்தியா முறியடித்தது. தற்போது இந்த கடத்தலில் சலீம் கும்பல் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள தாவூத் வீட்டில்தான் ஹாஜி பாதுகாப்புடன் இருப்பதாக இந்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த கும்பல் போதைப் பொருட்களையும், ஆயுதங்களையும் அதிகளவில் கடத்துவது மூலமாக, இலங்கையிலும், இந்தியாவிலும், எல்டிடிஇ அமைப்பை புதுப்பிக்கும் முயற்சிகளில் ஹாஜி சலீம் முக்கிய பங்காற்றுவதை போதைப் பொருள் தடுப்பு பிரிவு, என்ஐஏ., வருவாய் புலானய்வுத்துறை போன்ற இந்திய விசாரணை அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன.