;
Athirady Tamil News

ரஷ்யாவில் கிளர்ச்சிப்படை அபாயம் நீங்கியது: வாக்னர் படைத் தலைவர் பெலாரஸில் தஞ்சம்!!

0

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்துடன் இணைந்து, அந்த நாட்டின் தனியார் பாதுகாப்பு அமைப்பான வாக்னர் ஆயுதக் குழுவும் போரில் ஈடுபட்டது. போரின்போது, வாக்னர் தலைவர் ஈவ்ஜெனி பிரிகோஸினுக்கும், ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்கே ஷோய்கு, தளபதி வாலரி ஜெரசிமோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்தப் பின்னணியில், உக்ரைன் போருக்கான தலைமையகமாக விளங்கிய ரஷ்யாவின் ரோஸ்டோவ் நகரில் செயல்பட்ட ரஷ்ய ராணுவக் கட்டுப்பாட்டு மையத்தை வாக்னர் ஆயுதக் குழு நேற்று முன்தினம் கைப்பற்றியது. ‘‘ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கே ஷோய்கு மற்றும் ராணுவ தளபதி வாலரி ஜெரசிமோவ் ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும். எங்களது வீரர்கள் இங்கிருந்து தலைநகர் மாஸ்கோ நோக்கி முன்னேறுவார்கள். குறுக்கே யாராவது வந்தால், அவர்களை அழித்துவிடுவோம்” என எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, வாக்னர் படை வீரர்கள் மாஸ்கோவை நோக்கி முன்னேறிச் சென்றனர். அவர்கள் தலைநகரிலிருந்து சுமார் 200 கி.மீ. தூரம் வரை முன்னேறியதாக தகவல் வெளியானது. இதனால் மாஸ்கோவில் அதிபர் மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதிபர் விளாடிமிர் புதின் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், “ரஷ்ய மக்களின் வாழ்வுக்காகவும், அவர்களின் பாதுகாப்பு, இறையாண்மைக்காகவும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த தருணத்தில், நமது ஒருமைப்பாட்டை சீர்குலைக்க சிலர் முயற்சித்து வருகின்றனர். இது முதுகில் குத்தும் செயல். ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எச்சரிக்கை விடுத்தார்.

இதனால் ரஷ்யாவில் உள்நாட்டுப் போர் ஏற்படும் சூழல் உருவானது. இந்நிலையில், பெலாரஸ் நாட்டு அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, ரஷ்ய அரசு மற்றும் பிரிகோஸின் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதுகுறித்து ரஷ்ய அதிபர் (கிரெம்ளின்) மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரஷ்ய அரசுக்கும் வாக்னர் தலைவர் பிரிகோஸினுக்கும் இடையே ஒரு உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. இதன்படி, பிரிகோஸின் ரஷ்யாவை விட்டு வெளியேறி பெலாரஸில் தஞ்சமடைவார். ரஷ்யாவுக்கு எதிராக ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்டதற்காக பிரிகோஸின் மீதும் அவருடைய படையினர் மீதும் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் ரத்து செய்யப்படும்.

அவர்கள் ரஷ்யாவுக்கு இதுவரை செய்த சேவைக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கிளர்ச்சியில் ஈடுபடாத வாக்னர் குழு வீரர்கள் ரஷ்ய ராணுவத்தில் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் முறைப்படி சேர்த்துக்கொள்ளப்படுவர்.

உள்நாட்டு மோதலை தடுப்பதுடன் ரஷ்ய மண்ணில் ரத்தம் சிந்துவதை தவிர்ப்பதுதான் எங்களுடைய முக்கிய நோக்கம். எனவேதான் இந்த சமரச உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது.

இந்த உடன்படிக்கையை அடுத்து, தலைநகர் மாஸ்கோ நோக்கி புறப்பட்ட வாக்னர் படை வீரர்கள் தங்கள் முகாம்களுக்கு திரும்ப வேண்டும் என்று பிரிகோஸின் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் சமரச முயற்சியில் ஈடுபட்ட பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு ரஷ்ய அதிபர் (கிரெம்ளின்) மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.

இதையடுத்து, பெலாரஸ் அதிபரின் முயற்சியால் ரஷ்யாவில் ஆயுதக் கிளர்ச்சி முடிவுக்கு வந்துள்ளது. இதனால் அங்கு உள்நாட்டு போர் பதற்றம் தணிந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.