புதின் பலவீனம் அடைகிறாரா? கிளர்ச்சிகளை ஒடுக்கும் இயல்புக்கு மாறாக ‘வாக்னர்’ படைகளிடம் சமாதானம் பேசியது ஏன்? !!
புதினுக்கு ‘முதுகில் குத்துவது’ பிடிக்காது. அவர் துரோகத்தை அறவே வெறுப்பவர். ஆனாலும் தனது ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்காமல் சமாதானம் பேசும் சூழலில் இருப்பது ஏன்? இது அவரது பலவீனத்தைக் காட்டுகிறதா?
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து விளாதிமிர் புதின் தனது அதிகாரத்திற்கு எதிராக மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டது இதுவே முதல்முறை.
அந்த வியக்கத்தக்க 24 மணிநேர கிளர்ச்சி முடிவு வந்துவிட்டது. அதிபர் மாளிகைக்கும் வாக்னர் கூலிப்படைக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் உருவாகியுள்ளது. ஆகையால் வாக்னர் படையினர் தளத்திற்குத் திரும்புகின்றனர். ஒப்பந்தத்தின்படி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால், அவர்களது தலைவர் எவ்கெனி ப்ரிகோஜின் ரஷ்யாவை விட்டு வெளியேறி பெலாரூஸுக்கு செல்ல வேண்டும்.
அதிபர் புதினை பொறுத்தவரை, இந்த 24 மணிநேர நிகழ்வுகளில் அவரது தோற்றம் வழக்கமான வலிமையுடன் வெளிப்படவில்லை என்று கூறுகிறார் பிபிசி ரஷ்ய சேவையின் ஆசிரியர் ஸ்டீவ் ரோசென்பெர்க்.
மேலும், “ரோஸ்டோ நகரில் என்ன நடந்தது என்பதை நாம் பார்க்க வேண்டும். வாக்னர் என்ற ஒரு ‘தனியார் ராணுவம்’ ஒரு பெரிய ரஷ்ய நகரத்தில் ராணுவ தலைமையகத்தை வெளிப்படையாகவும் எளிதாகவும் கைப்பற்ற முடிந்துள்ளது. அதைக் கைப்பற்றிய பிறகு மாஸ்கோவை நோக்கி முன்னேறத் தொடங்கியது.
அதுமட்டுமின்றி, கிளர்ச்சி முடிந்த பிறகு, அதன் அடிப்படையாக இருந்த ப்ரிகோஜினை எதுவும் செய்ய முடியாது. அவர் ஒரு சுதந்திர மனிதர். ரஷ்யாவின் ராணுவத் தலைமையைக் கவிழ்க்க முயன்ற போதிலும், அவர் மீதான ஆயுதக் கலகம் குற்றச்சாட்டு கைவிடப்பட்டுள்ளது,” என்று ஸ்டீவ் ரோசென்பெர்க் விவரிக்கிறார்.
புதின் அடுத்து என்ன செய்யப் போகிறார்?
ரஷ்யாவில் புதின் 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரத்திற்கு வந்த பிறகு முதன் முறையாக மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டிருக்கிறார். அரசுக்கு உடனடியாக ஆபத்து இல்லை, நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது என்ற போதிலும் இந்த பிரச்னைக்குப் பிறகு புதின் முன்னிலும் வலிமையானவராக உருவெடுக்கவில்லை. மாறாக, அவர் கட்டமைத்து வைத்திருந்த இமேஜ் சரிந்தே இருக்கிறது.
துரோகத்தை சகித்துக் கொள்ள முடியாத புதினின் வெறுப்புணர்வு சனிக்கிழமை காலையில் அவரது தொலைக்காட்சி உரையில் வெளிப்பட்டது. வாக்னர் தலைவர் ப்ரிகோஜின் முதுகில் குத்திவிட்டதாகவும், தேசத் துரோகம் என்றும் புதின் கடுமையாக சாடினார்.
அதன் பிறகு புதின் இதுவரை பகிரங்கமாக தோன்றவில்லை. அதிபர் உரையாற்றுவதற்கான எந்த திட்டமும் இப்போதைக்கு இல்லை. இன்று அரசு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான அவரது உரை, வாக்னர் கிளர்ச்சிக்கு முன்பே பதிவு செய்யப்பட்டது போல் தெரிகிறது. அதில் யுக்ரேன் போரில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
வாக்னர் கிளர்ச்சி முடிவுக்கு வந்துவிட்ட போதிலும் மாஸ்கோவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அப்படியே தொடர்கின்றன. புதின் மாஸ்கோவில் இருக்கிறாரா அல்லது தலைநகரை விட்டு வெளியேறிவிட்டாரா என்பது தெரியவில்லை.
யுக்ரேனில் ராணுவ ரீதியாகவோ அல்லது ரஷ்யாவுக்குள் தனக்கு எதிரானவர்கள் மீதோ புதின் கடுமையாக வெளிப்படுவார் என்று சிலர் கணிக்கிறார்கள்.
பிபிசியிடம் பேசிய போலந்தைச் சேர்ந்த, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ராடெக் சிகோர்ஸ்கி, “ரஷ்யாவில் தனக்கு எதிராக போர்க்கொடி தூக்குபவர்களை புதின் களையெடுப்பார். அதாவது புதின் இன்னும் கடுமையான சர்வாதிகாரியாக மாறுவார்” என்று கூறினார்.
ரஷ்யாவில் கிளர்ச்சியை ஏற்படுத்த வாக்னர் படை முடிவு செய்தது ஏன்?
“வாக்னர் குழுமத்தின் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஜின் ரஷ்ய ராணுவத்தில் உள்ள குறைபாடுகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால், அவரது சுய வாய்ப்புகளை மிகைப்படுத்திக் கொண்டுவிட்டதாக” போர் ஆய்வுக்கான நிறுவனம் (Institute for the Stude of War) கூறுகிறது.
ப்ரிகோஜினின் தோல்வியுற்ற கிளர்ச்சி அவரது கூலிப்படையின் சுதந்திரத்தை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சி என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். குறிப்பாக ரஷ்ய ராணுவ தலைவர்கள் வாக்னரை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு ஜூலை 1ஆம் தேதி காலக்கெடு விதித்தனர்.
பெலாரூஸ் அதிபர் அலெக்சாண்டர் லிகாஷென்கோவால் ஏற்படுத்தப்பட்ட கிளர்ச்சி நிறுத்தம், ப்ரிகோஜின் மீதான கிரிமினல் குற்றச்சாட்டுகளைக் கைவிடுவதற்கு ஈடாக சாமர்த்தியமாக அவருக்கு வாக்னர் படை மீது இப்போது இருக்கும் கட்டுப்பாட்டை நீக்குகிறது.
“இருப்பினும் வாக்னர் படைகள் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ராணுவ ஒருங்கிணைப்புக்கு சுய விருப்பத்துடன் ஒத்துழைக்குமா அல்லது எதிர்காலத்தில் வாக்னர் குழுவின் பணியாளர்களுடன் ரஷ்ய ராணுவம் இணக்கத்துடன் பணியாற்றுமா என்பது தெளிவாகவில்லை,” என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
கிளர்ச்சியால் ரஷ்யா முழுவதும் பதற்றம் நிலவிய சூழலில், பெலாரூஸ் அதிபர் தலையிட்டு, புதின் சம்மதத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்விளைவாக, ப்ரிகோஜின் பெலாரூஸ் செல்கிறார். அவரது படை ரஷ்ய ராணுவத்தின் கீழ் செயல்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. வாக்னர் மீதான அவரது கட்டுப்பாட்டை சாமர்த்தியமாக ரஷ்யா கைப்பற்றியுள்ளது.
நாள் முழுவதும் நீடித்த பேச்சுவார்த்தையின் விளைவாக, யெவ்ஜெனி ப்ரிகோஜின் நேற்று இரவு நேரத்தில் வாக்னர் படையின் கிளர்ச்சியை நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டார்.
புதினின் நெருங்கிய கூட்டாளியான பெலாரூஸின் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, சனிக்கிழமையன்று ப்ரிகோஜினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ப்ரிகோஜின் பெலாரூஸ் செல்ல அனுமதிக்கப்பட்டார். மேலும், அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் கைவிடுவதாக ரஷ்யா ஒப்புக்கொண்டது.
புதினின் சம்மதத்துடன் தான் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக லுகாஷென்கோவின் அறிக்கை தெரிவித்துள்ளது.
ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, வாக்னர் குழுவின் தலைவருக்கு எதிரான வழக்கை கைவிட கிரெம்ளின் ஒப்புக்கொண்டது. அதோடு, வாக்னர் படையின் வீரர்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
ப்ரிகோஜின் மற்றும் அவரது படையினருக்கு வேறு என்னவெல்லாம் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
வாக்னர் படை கிளர்ச்சியைக் கைவிட ஏன் முடிவெடுத்தது என்று அலசுகிறார், பிபிசியின் கிழக்கு ஐரோப்பாவின் செய்தியாளர் சாரா ரெய்ன்ஸ்ஃபோர்ட். “பணமா? அது ஒருவேளை ப்ரிகோஜினிடம் நிறையவே இருக்கலாம். நேற்றைய சோதனையின்போது அவரது வளாகத்தி நிறையவே கண்டுபிடிக்கப்பட்டது.
அப்படியிருக்கும்போது, இனி வரவுள்ள காலகட்டத்தில் அவருடைய பங்கு குறித்த என்ன உத்தரவாதம் அவருக்கு அளிக்கப்பட்டது?
வாக்னர் படையின் தலைவர், அதிபர் புதினுக்கு ஒரு முக்கியமான நபராக, நீண்ட காலமாக அவரது நிழலில் செயல்படுகிறார்.
சிரியாவில் சண்டையிடுவது முதல் யுக்ரேனில் 2014ஆம் ஆண்டு கிரைமியாவை இணைத்தபோது சண்டையிட்டது வரை அதிபர் மாளிகைக்காக அதன் மோசமான வேலைகளைச் செய்து வருகிறார் ப்ரிகோஜின். கூடவே “ட்ரோல் ஃபார்ம்ஸ்” என்றழைக்கப்படும் தவறான தகவலை பரப்புவதில் அவர் ஈடுபட்டுள்ளார்.
கிளர்ச்சியைக் கைவிட்டு பெலாரூஸுக்கு செல்ல, அவருடன் என்ன ஒப்பந்தம் செய்யப்பட்டது. அங்கிருந்து அவர் என்ன செய்யப் போகிறார் எனத் தெரிந்துகொள்வது சுவாரஸ்யமானதாக இருக்கும்.
அவர் அமைதியாக ஓய்வு பெறுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதேவேளையில் அவர் அடுத்து என்ன செய்வார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ப்ரிகோஜிஜ்ன் இருளுக்குள் அமைதியாக மறைந்துவிடும் மனிதர் இல்லை.”
புதினுக்கு துரோகம் பிடிக்காது. அவர் அதை முற்றிலுமாக வெறுப்பவர். அப்படியிருந்தும் கிளர்ச்சியில் ஈடுபட்ட அனைத்து வாக்னர் துருப்புகளுக்கும் எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகள் கைவிடப்படுகின்றன என்று அதிபர் மாளிகை கூறுவதை வெளிப்படையாக நம்புவது மிகவும் கடினம்,” என்று கூறுகிறார் பிபிசி செய்தியாளர் சாரா ரெய்ன்ஸ்ஃபோர்ட்.
இதில் ஒரு முக்கிய வேறுபாடும் உள்ளது. வாக்னர் குழுமம் பாதுகாப்பு அமைச்சகத்தால் கையகப்படுத்தப்பட்டது. வாக்னர் ஒரு கூலிப்படை குழுவாக சுதந்திரமாகச் செயல்படும் நாட்கள் முடிவுக்கு வந்துவிட்டன.
அதன் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஜின் அமைச்சகத்துடன் நீண்ட காலமாக பகை நீடித்தது. தனது படைகள் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்படுவதை அவர் எதிர்த்து வந்தார்.
அதுதான் இத்தகைய தீவிர நடவடிக்கை எடுக்க ப்ரிகோஜினை தள்ளியிருக்க வேண்டும் என்கிறார் சாரா ரெய்ன்ஸ்ஃபோர்ட்.
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, வாக்னர் படையில் இருந்த வீரர்கள் ரஷ்ய ராணுவத்துடன் இணைவார்களா என்பது இன்னும் விடை கிடைக்காத வினாவாக உள்ளது.
புதினை பொறுத்தவரை இது இன்னும் முடியவில்லை. இது தற்காலிகமாகத் தவிர்க்கப்பட்ட ஒரு நெருக்கடி. இதை அவர் இன்னும் முழுமையாகச் சமாளிக்கவில்லை என்றே நினைக்கிறேன்.
புதின் பலவீனமாக உள்ளாரா? வாக்னர் படையின் கிளர்ச்சி நடவடிக்கை எதை காட்டுகிறது?
பட மூலாதாரம், Getty Images
வாக்னர் கிளர்ச்சியை முன்பே கணித்ததா அமெரிக்க உளவுத்துறை
வாக்னர் கிளர்ச்சி பற்றி வெள்ளை மாளிகைக்கு முன்பே தெரிய வந்ததாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. வாஷிங்டன் போஸ்ட்டிடம் பேசிய அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி., ஜூன் மாதத்தின் மத்தியிலேயே யெவ்கெனி ப்ரிகோஜின் ஏதோ திட்டமிட்டுக் கொண்டிருந்ததாக அமெரிக்காவுக்கு தெரிய வந்திருக்க வாய்ப்புள்ளது.
வாக்னர் படையின் தலைவர் ப்ரிகோஜின் நடத்திய கிளர்ச்சியின் நோக்கம் ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளினை, அது எதிர்பார்க்காத நேரத்தில் கைப்பற்றுவதுதான் எனத் தோன்றினாலும், அமெரிக்க உளவு அமைப்புகள் அவர் இப்படி ஏதோவொன்றைச் செய்யத் திட்டமிட்டுக் கொண்டிருந்ததற்கான அறிகுறிகளை ஏற்கெனவே அறிந்திருந்தன என்றும் இந்த வாரத் தொடக்கத்தில் முக்கிய காங்கிரஸ் தலைவர்களுடன் அதிபர் பைடனுக்கு இது பற்றித் தெரிவிக்கப்பட்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அப்படி திட்டமிடுவதற்கான ஒரு முக்கியத் தூண்டுதலாக ஜூன் 10 ஆம் தேதியன்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வாக்னர் குழுவை போன்ற அனைத்து தன்னார்வ படைப் பிரிவினருக்கும், அரசாங்கத்துடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுமாறு உத்தரவிடப்பட்டது. இது ப்ரிகோஜினின் வாக்னர் கூலிப்படை துருப்புகளை சாமர்த்தியமாகக் கையகப்படுத்தும் முயற்சி.
“ஏதோ நடக்கப் போவதாக, தலைமைக்குத் தெரிவிப்பதற்கு ஏற்ற அளவு போதுமான சமிக்ஞைகள் இருந்தன…” என்று அதிகாரிகள் வாஷிங்டன் போஸ்ட்டிடம் தெரிவித்தனர். ஆனால், கிளர்ச்சி தொடங்குவதற்கு சற்று முன்பு வரை ப்ரிகோஜினின் திட்டங்களுடைய சரியான தன்மை என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை.
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கும் ப்ரிகோஜின் ஏதோ சதி செய்கிறார் என்று அவரது சொந்த உளவுத்துறையே கூறியதாக அந்தப் பத்திரிகை செய்தி கூறுகிறது.
இது அவரிடம் எப்போது தெரியப்படுத்தப்பட்டது என்பது துல்லியமாகத் தெரியவில்லை. ஆனால், அது “நிச்சயமாக 24 மணிநேரத்திற்கு முன்பு” என்று சனிக்கிழமையன்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியதாக அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
கூலிப்படையின் தலைவர் ரஷ்யாவுடன் எல்லைக்கு அருகே ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பிற ஆயுதங்களைக் குவித்து வைத்திருப்பதை அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்ததாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
ப்ரிகோஜினுக்கும் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையிலான உறவு மோசமடைந்து வருவதை அமெரிக்க உளவுத்துறை தலைவர்கள் பல மாதங்களாகக் கண்காணித்து வந்தனர். மேலும் யுக்ரேன் போர், வாக்னர் படைப்பிரிவு, ரஷ்ய ராணுவம் என இரு தரப்புக்குமே மோசமான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதற்கான அறிகுறியாக இது இருக்கலாம் என்று உளவுத்துறை முடிவு செய்துள்ளதாக சி.என்.என் கூறுகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யாவில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து இதுவரை மௌனம் காத்து வந்தார்.
அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு மூத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் நாள் முழுவதும் விளக்கமளிக்கப்படுவதாக வெள்ளை மாளிகை நேற்று கூறியது.
ஜோ பைடன் உயர்மட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனியின் தலைவர்களுடனும் பேசியதாகவும் எஙகளிடம் கூறப்பட்டது.
உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசகர்களுடனான காணொளி கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர் திட்டமிட்டிருந்த பயணத்தைத் தாமதப்படுத்தியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.
ரஷ்யாவின் நிலைமையைக் கண்காணிப்பதற்காக கூடுதல் படைத் தலைவர் ஜெனரல் மார்க் ஏ மில்லி தனது அலுவல்பூர்வ பயணத்தை ரத்து செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.