;
Athirady Tamil News

தவறான தகவல் பரவலை தடுக்காவிட்டால்.. தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கு செக் வைக்கும் ஆஸ்திரேலியா!!

0

வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அவற்றில் பரவி வரும் செய்திகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாவதும், அதனால் சமூக பிரச்சனைகள் உருவாவதும் பல நாடுகளை தீவிரமாக சிந்திக்க வைத்துள்ளன.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் ஒரு புதிய சட்டம் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது. தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கத் தவறும் தொழில்நுட்ப ஜாம்பவான்கள், பில்லியன் கணக்கான டாலர்களை அபராதமாக செலுத்த இந்த சட்டம் வகை செய்கிறது. பேஸ்புக், கூகுள், டுவிட்டர், மற்றும் டிக்டாக் ஆகிய சமூக வலைதளங்களுடன், பாட்காஸ்டிங் சேவைகள் அளிக்கும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் தவறு செய்யும்பட்சத்தில் தங்களது வருடாந்திர உலகளாவிய வருவாயில் 5% வரை அபராதத்தை எதிர்கொள்வார்கள். இது உலகிலேயே மிக அதிகமான அபராதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டத்தின்படி “ஆஸ்திரேலியன் கம்யூனிகேஷன்ஸ் அண்ட் மீடியா அத்தாரிட்டி” எனும் அரசின் கண்காணிப்பு அமைப்பிற்கு பல அதிகாரங்கள் கிடைக்கும். இதன்மூலம், சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கவும், அத்தகவல்கள் பணமாக்கப்படுவதை தடுக்கவும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ அவற்றை செய்ய வைக்க, சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களை இந்த அமைப்பினால் நிர்ப்பந்திக்க முடியும். கடுமையான தீங்குகளை விளைவிக்கக்கூடிய தவறான மற்றும் ஏமாற்றும் உள்ளடக்கங்கங்களை கண்காணிக்கவோ, எதிர்த்துப் போராடவோ தவறிய தளங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

டிஜிட்டல் தளங்களை ஒழுங்குபடுத்தும் முயற்சிகளில் ஆஸ்திரேலியா முன்னணியில் உள்ளது. ஏற்கெனவே 2021ல் தவறான தகவல் மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்கள் ஆகியவற்றை தடுக்க அந்நாடு தன்னார்வ ஆஸ்திரேலிய நடைமுறைக் குறியீடு எனும் ஒரு செயல்பாட்டை கொண்டு வந்திருந்தாலும், அது குறைந்தளவே தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்பின்னணியில் முன்மொழியப்பட்டுள்ள இந்த மசோதா, இந்த செயல்பாட்டை வலுப்படுத்தும் ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது.

அடோப், ஆப்பிள், ஃபேஸ்புக், கூகுள், மைக்ரோசாப்ட், ரெட் பபிள், டிக்டாக் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்போதைய இந்த குறியீட்டில் கையொப்பமிட்டிருக்கிறார்கள். இச்சட்டத்தின் மூலம் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்களின் நம்பகத்தன்மை கூடுமா என்பதையும், இதே போன்ற சட்டங்களை பிற நாடுகளும் கொண்டு வருமா என்பதையும் வல்லுனர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.