உலக போட்டித்திறன் தரவரிசை: இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா? !!
சர்வதேச மேலாண்மை மேம்பாட்டு நிறுவனத்தின் “உலக போட்டித்திறன் மையம்” (WCC), தனது வருடாந்திர போட்டித்திறன் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் உள்ள 64 பொருளாதாரங்களில் சிங்கப்பூர் ஒரு இடம் சரிந்து, 4வது இடத்தைப் பிடித்துள்ளது. 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் 1ம் இடத்தில் இருந்த அந்நாடு, 2021ல் 5வது இடத்தைப் பிடித்திருந்தது. கடந்த ஆண்டு 3ம் இடத்திற்கு முன்னேறியிருந்த நிலையில் இந்த முறை சரிந்துள்ளது. இந்த பட்டியலில் டென்மார்க், அயர்லாந்து, மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களைப் பிடித்தன.
மீதமுள்ள முதல் 10 இடங்களில், நெதர்லாந்து 5வது இடத்திலும், அந்நாட்டைத் தொடர்ந்து தைவான், ஹாங்காங், ஸ்வீடன், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை உள்ளன. சிங்கப்பூரின் சரிவு, அந்நாட்டின் அரசாங்க திறன் காரணிகளுக்குள் உள்ள, போட்டிச் சட்டம் மற்றும் அரசாங்கக் கொள்கையின் அனுசரிப்பு போன்றவற்றால் ஏற்பட்டது.
இருப்பினும், சிங்கப்பூர், வேலைவாய்ப்பில் 2ம் இடத்தையும், சர்வதேச முதலீடுகளில் 4வது இடத்தையும், உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் 6வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்தியா, மூன்று இடங்கள் சரிந்து, 40வது இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆனால் 2019-2021க்கு இடையில் தொடர்ச்சியாக 43வது இடத்திலிருந்ததை விட இன்னும் சிறந்த நிலையில் உள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், இந்திய அரசு செயல்திறனில் மேம்பட்ட நாடாக இருக்கிறது.
குறிப்பாக, பரிமாற்ற விகித ஸ்திரத்தன்மை, இழப்பீட்டு நிலைகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டில் மேம்பாடுகள் ஆகியவை இந்தியாவுக்கு இப்பட்டியலில் இந்த இடத்தை பிடிக்க உதவிய முதல் மூன்று நடவடிக்கைகள் ஆகும். ஆனால் வணிக செயல்திறன், உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார செயல்திறன் ஆகியவற்றில் மற்ற நாடுகளை விட சற்று பின்தங்கி உள்ளது.