சிரியா சந்தையில் ரஷியா நடத்திய வான்வெளி தாக்குதல்- 2 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!!
சிரியாவில் அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 6 ஆண்டுக்கு மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரில் சிரியாவுக்கு ஆதரவாக ரஷியா இருந்து வருகிறது. இந்நிலையில் வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் பகுதியில் இயங்கிவரும் காய்கறி சந்தையில் ரஷிய படையினர் அதிரடி வான் வெளி தாக்குதல் நடத்தினார்கள். ஜெட் விமானங்கள் மூலம் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன.
இந்த திடீர் தாக்குதலில் காய்கறி சந்தைக்கு வந்த 2 குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாபமாக இறந்தனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். பக்ரீத் பண்டிகை நெருங்கி வருவதால் ஏராளமான பொதுமக்கள் பொருட்கள் வாங்க குவிந்து இருந்தனர். இவர்கள் மீது குண்டுகள் வீசப்பட்டதால் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.
ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக டமாஸ்கஸ் தெரிவித்து உள்ளது. ஆனால் இது குறித்து சிரியாவோ, ரஷியாவோ எந்த கருத்தையும் கூறவில்லை. படுகாயம் அடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த ஆண்டு சிரியாவில் நடந்த மோசமான சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.