திருப்பதி கோவிலில் பக்தர்கள் வழங்கிய நன்கொடையில் ரூ.100 கோடி ஊழல்- தெலுங்கு தேசம் பிராமண சமிதி தலைவர் குற்றச்சாட்டு!!
தெலுங்கு தேசம் கட்சியின் பிராமணர் சமிதி மாநில தலைவர் ராம் பிரசாத் அளித்த பேட்டியில் கூறியதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பக்தர்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர். இந்த நிதியில் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்துள்ளது.
ஊழல் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் மடாதிபதிகள் கேள்வி எழுப்பிய பிறகு தேவஸ்தானம் சார்பில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. ஸ்ரீவாணி அறக்கட்டளை குறித்து விசாரிக்க திருப்பதி தேவஸ்தான தன்னாட்சி அமைப்புக்கு அதிகாரம் இல்லை. மேலும் பயனாளிகளின் பெயரை வெள்ளை அறிக்கையில் வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளனர். ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
ஊழலில் ஈடுபட்ட தேவஸ்தான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாக்குளம் அந்தர் வேதி அன்னவரம் கனகதுர்க்கம்மா கோவில்களில் இருந்த வெள்ளி கவசங்கள் திருடு போய் உள்ளது. கோவில்களுக்கு வரும் வருமானம் எங்கே செல்கிறது என தெரியவில்லை. இதனால் அர்ச்சகர்களுக்கு சம்பளம் வழங்காமல் மாநில அரசு மோசடி செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.