இளநிலை மருத்துவர்கள் வேலைநிறுத்த அறிவிப்பு: பிரிட்டனில் மருத்துவ சேவைகள் முடங்கும் அபாயம்!!
பிரிட்டனில் உள்ள மருத்துவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர், இளநிலை மருத்துவர்கள் ஆவர். இவர்கள் ஜூலை 13ம் தேதி தொடங்கி 5-நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதிக சம்பளம் கோரி நடக்கும் இப்போராட்டத்தில் பிரிட்டன் முழுவதும் 46000க்கும் மேற்பட்ட இளநிலை மருத்துவர்கள் இணைவார்கள் என்று பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் உறுதி செய்துள்ளது. இப்போராட்டத்தால் மருத்துவ சேவைகள் முடங்கும் சூழல் உருவாகியிருக்கிறது. தேசிய சுகாதார சேவை அமைப்பு, சம்பள உயர்வாக 5% உயர்த்தி அறிவித்திருந்தும், பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் அதை நிராகரித்துவிட்டது. இந்தச் சலுகை மிகவும் குறைவு என்றும், இது நாட்டில் தற்போது நிலவி வரும் பணவீக்க உயர்வை ஈடுகட்டாது என்றும் மருத்துவர் அமைப்பு கூறியுள்ளது. ஆனால் அரசாங்கம் தனது சலுகையை நியாயமானது என்று கூறி வருகிறது.
நாட்டில் நிலவும் பணவீக்கத்திற்கும் குறைவான அளவிலேயே 15 ஆண்டுகளாக சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதனை ஈடு செய்யும் விதமாக சம்பளத்தை 35% அதிகரிக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் கோரியுள்ளது. சம்பள உயர்வுக்கான பேச்சுவார்த்தை தொடங்கியதில் இருந்து இளநிலை மருத்துவர்கள் நடத்தும் 4வது வேலை நிறுத்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்தின் இளநிலை மருத்துவர்கள் குழுவின் இணைத்தலைவர்களான டாக்டர். ராபர்ட் லாரன்சன் மற்றும் டாக்டர். விவேக் திரிவேதி ஆகியோர் இப்போராட்டம் குறித்து கூறுகையில், தேசிய சுகாதார சேவை அமைப்பு வரலாற்றில் இது மிக நீண்டதொரு வேலை நிறுத்தமாக அமையலாம் என்றனர்.
ஆனால், இது தேசிய சுகாதார சேவை அமைப்பின் வரலாற்றில் செல்ல வேண்டிய சாதனை அல்ல. நம்பகமான சலுகையை வழங்குவதன் மூலம் அரசாங்கம், இளநிலை மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தை தவிர்க்க முடியும் என்றும் அவர் கூறினர். முன்னதாக, பிரிட்டிஷ் மருத்துவ சங்க தலைவர் டாக்டர் ஃபில்பன்பீல்ட், பிரதமர் ரிஷி சுனக்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், இளநிலை மருத்துவர்களுடனான பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டாரா என்பதை தெளிவுபடுத்துமாறு கூறியுள்ளார். இளநிலை மருத்துவர்களுக்கு குறைந்தளவே ஊதியம் வழங்கப்படுவதாக சுகாதார செயலாளர் ஒப்புக்கொண்ட பிறகும், 5% மட்டுமே சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக ஃபில்பன்பீல்ட் தெரிவித்தார்.
தேசிய சுகாதார சேவை என்பது பிரிட்டனில் அரசு நிதியுதவி பெறும் சுகாதார அமைப்பாகும். இது 1.2 மில்லியனுக்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்டுள்ளது. நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தரமான இலவச சுகாதாரத்தை உறுதி செய்யவதே இந்த அமைப்பின் அடிப்படை கொள்கை. பிரேசில் நாட்டிற்கு பிறகு அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் இரண்டாவது சுகாதார அமைப்பு இதுவாகும். ஸ்காட்லாந்தில் இரண்டு ஆண்டுகளில் 14.4% சம்பள உயர்வு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.