செவ்வாய் கிரகம் முதல் ஆழ்கடல் வரை: விதிகளை மீறிய ஸ்டாக்டன் ரஷ்ஷின் மோசமான முடிவு!!
“செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் முதல் நபராக தான் இருக்க வேண்டும் என ரஷ் நினைத்தார்… நாளடைவில் அவரது கவனம் கடலின் பக்கம் திரும்பியது…”. அவர் ஸ்டாக்டன் ரஷ். அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக்கை காணச் சென்று விபத்துக்குள்ளான டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் நிறுவனமான ஓசன்கேட்டின் சிஇஓ. அவரது சாசக தேடல் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஸ்டாக்டன் ரஷ் புத்தி கூர்மை மிக்கவர், பணக்கார குடும்பத்தில் 1962-ல் பிறந்தவர். எதையும் முன்னின்று நடத்த விரும்புவர். விண்வெளி பொறியலில் இளங்கலை பட்டம் பெற்ற ரஷ், தனது 19-வது வயதில் உலகின் இளம் வயது ஜெட் விமான பைலட் என்றும் அறியப்பட்டார். செவ்வாய் கிரகத்துக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தொடக்கத்தில் இருந்துள்ளது. நாளடைவில் அவரது எண்ணம் நிறைவேறாது என்பதை அறிந்த பின்னர் கடலின் பக்கம் தன் கவனத்தை ரஷ் திருப்புகிறார்.
இந்த முறை தனது கனவை பணம் சம்பாதிக்கும் பாணியாகவும் மாற்றுகிறார் ரஷ் . அவரது எண்ணங்களின் அடிப்படையில்தான் ஓசன்கேட் நீர்மூழ்கி கப்பல் நிறுவனத்தை 2009-ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்த நிறுவனம் ஆழ்கடல் சார்ந்த சாகச பயண அனுபவங்களை உள்ளடக்கியது.
2017-ஆம் ஆண்டு நடந்த செய்தியாளர் சந்திப்பில், “நான் கேப்டனாக விரும்புகிறேன். எனது வாழ்நாளின் கடைசி எல்லை கடலாகத்தான் இருக்கவேண்டும்” என்று ரஷ் கூறுகிறார். இவ்வாறு கடலின் மீது தனது நெருக்கத்தை பல இடங்களில் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். ரஷ்ஷை இவ்வாறுதான் அவருடன் பணிபுரிந்தவர்களும், நண்பர்களுமே அவரை நினைவுகூர்கின்றனர்.
ரஷ்ஷுடன் ஓசன்கேட் நீர்மூழ்கி கப்பலில் பயணம் மேற்கொண்டு பின்னாளில் அந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்களுள் ஒருவரான ஆரோன் நியூமேன் (ஆரோன் 2021 ஆம் ஆண்டு ரஷ்ஷுடன் இணைந்து டைட்டன் நீர்மூழ்கியில் பயணித்து டைட்டானிக் கப்பலை பார்வையிட்டிருக்கிறார்) ரஷ் குறித்து பேசும்போது, “கடலின் மீதான அவரது ஆர்வம் என்னை ஆச்சரியப்படுத்தியது. அதுவே என்னை முதலீடும் செய்ய வைத்தது. ரஷ் பின்னால் நின்று இயக்கும் தலைவர் அல்ல.. முன்னின்று இயக்குபவர்.
நான் ஓசன்கேட்டில் முதலீடு செய்யும் போது அதில் லாபம் வருமா என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால், நான் புதிய தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்தேன்” என்கிறார்.
தனது சாகச பயணங்களால் அறியப்பட்ட ரஷ் அதே நேரத்தில் தனது விதிமுறை மீறல்களுக்காகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவரது இந்த நடவடிக்கைகள்தான் 5 பேர் பலியான டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்கு காரணமாகி உள்ளது என்றும் கூறப்படுகிறது. ஆனால், இந்த விமர்சனத்தை ரஷ் என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை என்கின்றனர் அவரது நண்பர்கள்.
சாகசத்துக்காக விதிகளை மீறிய ரஷ்… – “நான் சில விதிகளை மீறிவிட்டேன். ஆனால் எனது பொறியியல் திறன் மூலம் அதனை உடைத்தேன்” என்று ரஷ் கூறியதாக அவரை நினைவு கொள்கிறார் அமெரிக்க கடற்படை தளபதி டக்லஸ் மேக் ஆர்தர். கார்பன் ஃபைபர் படகுகள் விமானப் போக்குவரத்தில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படுவதை ரஷ் அறிந்தார். மேலும் ஸ்டீல்களை விட இந்த ஃபைபர் படகுகள் குறைந்த விலையில் நீர் மூழ்கி கப்பல்களை உருவாக்கலாம் என்றும் ரஷ் நினைத்தார்.
இதில் டைட்டனின் குழாய் வடிவமும் வழக்கத்துக்கு மாறாக இருந்தது. பொதுவாக நீர்மூழ்கி கப்பல்கள் கோள வடிவமாகத்தான் இருக்கும். கோள வடிவமாக இருக்கும் போதுதான் அதன் ஒவ்வொரு புள்ளியிலும் அது சம அளவு அழுத்தத்தைப் பெறுகிறது. ஆனால் டைட்டனில் சிலிண்டர் வடிவ நீர் மூழ்கி கப்பல்களில் அழுத்தம் மாறுபடலாம். எனினும் இந்த மாறுபாட்டை கண்காணிப்பதற்காக லேசர்களையும் ஓசன்கேட் பொருத்தி இருந்தது.
மேலும், டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணிகள் வெளியே பார்க்கக் கூடிய கண்ணாடிக் காட்சித் தளம் மூலம் டைட்டானிக் கப்பல் சிதைந்த பகுதியை கடல் தளத்தின் ஆழத்திலிருந்து 1,300 மீட்டர் வரை மட்டுமே பார்க்க அனுமதி வழக்கப்பட்டது. ஆனால் இதையும் ரஷ் மீறி இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
”விதி மீறல் கூடாது என்று இருந்தால். நிச்சயம் அதனை மீறுவேன்” என்று எச்சரிக்கைகளை மீறி சாகச பயணங்களை மேற்கொண்ட ரஷ்ஷின் இறுதிப் பயணம் அழுத்தமான விழிப்புணர்வு செய்தியை அவரை அறியாமலே உலகிற்கு விட்டுச் சென்றிருக்கிறது.