‘ஆற்றலை மடைமாற்றுங்கள் ஒபாமா’ – இந்தியா மீதான விமர்சனத்துக்கு அமெரிக்க மதச் சுதந்திர ஆணைய முன்னாள் தலைவர் பதிலடி!!
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபமா, இந்தியா பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் எப்படி இருக்கிறது என்பதை விமர்சிப்பதற்குப் பதிலாக அந்த ஆற்றலை இந்தியாவைப் பாராட்டுவதற்காக மடைமாற்றலாம் என்று கூறியிருக்கிறார் சர்வதேச மதச் சுதந்திரங்களுக்கான அமெரிக்க ஆணையத்தின் (USCIRF) முன்னாள் தலைவர் ஜானி மூர்.
முன்னதாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, “இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரின் பாதுகாப்பு பிரச்சினை குறித்து பிரதமர் மோடியுடன் ஜோ பைடன் பேச வேண்டும். மோடியுடன் நான் பேசியிருந்தால், இதுகுறித்து விவாதித்திருப்பேன்” என்று கூறியிருந்தார்.
இதற்கு இந்தியாவில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, இந்திய முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது போல கருத்து தெரிவித்தது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்தக் கருத்து கண்டிக்கத்தக்கது. ஆனால், அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோதுதான் 6 இஸ்லாமிய நாடுகள் மீது வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. பிரதமருக்கு 13 வெளிநாடுகள் விருது வழங்கி உள்ளன. இதில் 6 இஸ்லாமிய நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சர்வதேச மதச் சுதந்திரங்களுக்கான அமெரிக்க ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஜானி மூர் அவருடைய கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். அவர் கூறுகையில், “முன்னாள் அதிபர் ஒபாமா தனது ஆற்றலை இந்தியாவை விமர்சிப்பதற்குப் பதிலாக இந்தியாவை பாராட்டப் பயன்படுத்தலாம். மனிதகுல வரலாற்றில் இந்தியா பன்முகத்தன்மை கொண்டநாடு. இந்தியா நேர்த்தியான நாடாக இல்லாமல் இருக்கலாம். அமெரிக்காவும் கூட. ஆனால் இந்தியாவின் பன்முகத்தன்மைதான் அதன் வலிமை. எனவே இந்த உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நாம் பாராட்ட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
யுஎஸ்சிஐஆர்எஃப் (USCIRF) என்ற அமைப்பானது அமெரிக்க அரசாங்கத்துக்கு மதம் சார்ந்த கொள்கை பரிந்துரைகளை வகுத்துப் பரிந்துரைக்கும். இந்த அமைப்பு அந்நாட்டின் மதச் சுதந்திர சட்டம் 1998-ன் படி உருவாக்கப்பட்டதாகும். இதன் தலைவர் அதிபர் மற்றும் செனட் உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.