இந்தியாவில் 62 ஆண்டுகளுக்கு பின் பேரிடர்! அடுத்த 48 மணி நேரத்திற்கு எச்சரிக்கை !!
டெல்லி மற்றும் மும்பையில் 62 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் தடவையாக தென்மேற்கு பருவ மழை ஒரே நாளில் ஆரம்பித்துள்ள நிலையில், பாரிய வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பை காட்கோபர் பகுதியில் 3 மாடி கட்டிடம் தொடர் மழையால் இடிந்து வீழ்ந்துள்ள நிலையில், அதில் சிக்கி கொண்டவர்களை தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டனர்.
இதற்கிடையே மத்திய மகாராஷ்டிராவில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் குஜராத்தின் கட்ச் பகுதியில் ஏற்பட்டுள்ள சூறாவளி சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதையடுத்து மும்பையில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பேரிடர் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் இருக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான அசாமிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், 09 ற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அசாமிலுள்ள பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி ஓடும் நிலையில், அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அசாம் முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா சர்மாவுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அசாம் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ளும் என்றும் உறுதி அளித்தார்.