அமெரிக்காவை அழிப்போம் – வடகொரிய மக்கள் சூளுரை !!
அமெரிக்காவை அழிக்க பழிவாங்கும் போர் நடத்துவோம் என்று வடகொரிய மக்கள் சூளுரைத்தனர்.வடகொரியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இலட்சக்கணக்கானோர் திரண்டு கொரிய போர் தொடங்கப்பட்டதன் 73-வது நினைவு நாளை அனுசரித்தனர். இதன்போதே அவர்கள் இந்த சூளுரையை விடுத்தனர்.
வட கொரிய அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில் 1,20,000 மக்கள், மாணவர்கள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட புகைப்படத்தில் மக்கள் தங்களின் கைகளில் அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்களுடன் கூடிய பதாகைகளை வைத்திருப்பதை காட்சிப்படுத்தியது.
“ஒட்டுமொத்த அமெரிக்க நிலப்பரப்பும் எங்களின் துப்பாக்கிகளின் வீச்சுக்குள் இருக்கின்றது”, “எதேச்சாதிகார அமெரிக்கா அமைதியை அழிக்கும் தேசம்”, “அமெரிக்காவை அழிக்க பழிவாங்கும் போரை நடத்துவோம்” போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை மக்கள் வைத்திருந்தனர்.
வட கொரியா விரைவில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் முதல் உளவு செயற்கைக்கோளை ஏவ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் நேற்று இந்த எச்சரிக்கை வாசகங்களை அந்நாடு வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.
மேலும், கே என்சிஏ ஊடகம், “அமெரிக்க ஏகாதிபத்தியர்களை அழிக்கும் வலிமையான ஆயுதங்கள் வட கொரியாவிடம் இருக்கின்றன. இந்த நாட்டைப் பாதுகாக்கத் துடிப்பவர்கள் எதிரியை பழிவாங்கும் நெருப்பை உள்ளத்தில் எரியவிட்டுக் கொண்டிருக்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளது. வட கொரியாவின் போர் நினைவுப் பேரணியும் அதில் எடுத்துக் கொள்ளப்பட்ட சூளுரையும் சர்வதேச கவனம் பெற்றுள்ளது.