மோசமான வானிலை.. மம்தா பானர்ஜி சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது!!
மேற்கு வங்காளத்தில் ஜூலை 8ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலை சட்டசபை தேர்தலுக்கும், பாராளுமன்ற தேர்தலுக்கும் தருகின்ற அதே தீவிரத்தோடு அணுக வேண்டும் என மம்தா பானர்ஜி, தன் கட்சி பிரமுகர்களுக்கு கட்டளையிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக வடக்கு பகுதிகளில் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார் மம்தா.
இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் ஹெலிகாப்டர், சிலிகுரி அருகே உள்ள செவோக் விமானதளத்தில் இன்று பிற்பகல் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஜல்பைகுரி எனும் இடத்தில், ஒரு தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிவிட்டு, பாக்டோக்ரா விமான நிலையத்திற்கு செல்லும் வழியில், பைகுந்தபூர் வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது அவரது ஹெலிகாப்டர் மோசமான வானிலையில் சிக்கியது.
“இங்கு மிகவும் கனமழை பெய்து கொண்டிருந்தது. அதனால் விமானி ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்க முடிவு செய்தார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, மம்தா பானர்ஜியின் பயணம், பாக்டோக்ரா விமான நிலையத்திற்கு சாலை வழியாக செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. அதன் பின்னர் கொல்கத்தாவுக்கு விமானத்தில் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது,” என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.