உள்ளாட்சி தேர்தலையொட்டி டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரித்த மம்தா பானர்ஜி !!
மேற்குவங்க மாநிலத்தில் காலியாக உள்ள 63 ஆயிரத்து 229 உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 8-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் 11-ந் தேதி எண்ணப்பட உள்ளது. இதையொட்டி அம்மாநிலத்தில் தேர்தல் தீவிரமடைந்துள்ளது. மாநில முதல்-மந்திரியும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதில் ஒரு பகுதியாக ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மால்பஜார் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அவர் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, பெண் ஒருவர் நடத்தி வரும் டீக்கடைக்கு சென்ற முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அங்கிருந்த டீத்தூளை எடுத்து கிளாஸ்களில் டீ போட்டு பொது மக்களுக்கும், கட்சியினருக்கும் கொடுத்தார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.