குரங்கு தொல்லையில் இருந்து பயிர்களை பாதுகாக்க கரடி வேடம் அணிந்த விவசாயிகள்!!
உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் ஏராளமான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் கரும்பு பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக விவசாய நிலங்களுக்குள் ஏராளமான குரங்குகள் புகுந்து கரும்பு மற்றும் பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பயிர்களை பாதுகாப்பதற்காக விவசாயிகள் கரடி ஆடைகளை அணிந்து காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். குரங்குகளை பயமுறுத்துவதற்காக விவசாயிகள் கரடி உடை அணிந்து வயல்களுக்கு நடுவே அமர்ந்திருக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
விவசாயிகள் அணியும் கரடி உடைக்கு மட்டுமே ரூ.5 ஆயிரம் வரை செலவு ஆகிறதாம். மேலும் வயல்களில் கரடி பொம்மை அணிந்து நிற்பதற்காகவே சில வாலிபர்களை பணிக்கு அமர்த்தி உள்ளனர். அவர்களுக்கு தினக்கூலியாக ரூ.250 கொடுக்க வேண்டியிருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சஞ்சீவ் மிஸ்ரா என்ற விவசாயி கூறுகையில், கரடி உடை அணிந்து காவல் பணியில் ஈடுபட்ட பிறகு குரங்குகள் போன்ற விலங்குகளின் தொல்லை குறைந்துள்ளது என்றார்.