வீடுகளுக்குள் 16 பேர் இருக்கும்போதே 3 மாடி கட்டிடத்தை நவீன எந்திரம் மூலம் தூக்கிய உரிமையாளர்!!
ஐதராபாத் மாநகராட்சிக்கு உட்பட்ட குத்புலாபூர் சிந்தால் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. இதனால் சாலையின் உயரம் அதிகரித்தது. பல வீடுகள் சாலையை விட தாழ்வான நிலைக்கு மாறின. இதன் காரணமாக மழை பெய்த போது அங்குள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இந்த நிலையில் அங்குள்ள 3 அடுக்கு மாடி வீட்டை சாலையை விட சற்று மேலே உயர்த்த அதன் உரிமையாளர் முடிவு செய்தார். அதற்காக நவீன ஹைட்ராலிக் எந்திரத்தை வரவழைத்தார். கடந்த சனிக்கிழமை தனது வாடகை வீடுகளில் வசிக்கும் யாருக்கும் தகவல் தெரிவிக்காமலும், மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமலும் ஹைட்ராலிக் கருவிகள் மூலம் 3 அடுக்குமாடி வீட்டை அடித்தளத்தில் இருந்து உயர்த்த உரிமையாளர் முயற்சி செய்தார். அப்போது 3 அடுக்குமாடி கட்டிடம் பக்கத்தில் இருந்த மற்றொரு அடுக்குமாடி கட்டிடத்தின் மீது சாய்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டுக்காரர் குத்புலாபூர் போலீஸ் நிலையத்தில் உடனடியாக புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.அப்போது ஹைட்ராலிக் எந்திரம் மூலம் கட்டிடத்தை தூக்கிய போது வாடகை வீடுகளில் 16 பேர் இருந்தனர் என்பது தெரிய வந்தது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை.யாருக்கும் காயமும் ஏற்படவில்லை. இதையடுத்துக் கட்டிட உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதனிடையே சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க ஐதராபாத் மாநகராட்சி உத்தரவிட்டது. இதன் பேரில் அந்த கட்டிடம் இடிக்கப்பட்டது.