;
Athirady Tamil News

களரிப் போட்டியில் 23 பதக்கம் வென்ற ஈஷா சம்ஸ்கிரிதி! பரிசு வழங்கி பாராட்டிய பொள்ளாச்சி எம்.பி.!!

0

திருப்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான களரிப் போட்டியில் பங்கேற்ற ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் 7 தங்கம், 8 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு பொள்ளாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் பரிசுகள் வழங்கி வாழ்த்து கூறினார். பாரத தேசத்தின் தற்காப்பு கலைகளில் ஒன்றாக களரிப் பயட்டு திகழ்கிறது. வீரமும் சாகசமும் நிறைந்த இக்கலையை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு களரிப் பயட்டு சங்கம் பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக, மாநில அளவிலான களரிப் போட்டி திருப்பூரில் ஜூன் 24-ம் தேதி நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

கோவையில் இருந்து ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளி மாணவர்களும் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மெய்பயட்டு, சுவாடுகள், உருமி, ஹை கிக், ஸ்வார்ட் அண்ட் சீல்ட் ஆகிய 5 பிரிவுகளில் கலந்து கொண்ட ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் மொத்தம் 23 பதக்கங்களை தட்டி தூக்கினர். குறிப்பாக, ஸ்ரீனிவாசன், தமோஹரா, த்யான், அதிரா, ஈஷா, சுவாமி மஹன்யாஸ், சுவாமி மிதுன் ஆகிய மாணவர்கள் தங்கப் பதக்கங்களை வென்றனர். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றனர்.

கோவையில் உள்ள ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளியில் இந்தியாவின் பாரம்பரிய கலைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. யோகா, இசை, நடனம், ஆயுர்வேதம் ஆகியவற்றுடன் சேர்த்து தற்காப்பு கலையான களரியும் கடந்த 15 வருடங்களாக கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டு அர்ப்பணிப்புக்கு பிறகு கல்வியை நிறைவு செய்த மாணவ, மாணவிகள் ‘ப்ராஜக்ட் சம்ஸ்கிரிதி’ என்ற பெயரில் இக்கலைகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.